வெற்றியின் ஆரம்பப் புள்ளி துணிச்சல்!

10/16/2019 2:13:51 PM

வெற்றியின் ஆரம்பப் புள்ளி துணிச்சல்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்-19

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!!

இலக்கை எப்படி அடைவது என்பதை ஒரு சிறிய எறும்பைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ளலாம். எறும்புகள் எதிர்காலத்தைச் சவால்களாகத்தான் பார்க்கின்றன. ஆனாலும் அவை, தங்களது இலக்கில் கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. இலக்கை அடையத் தீர்மானமாக இருக்கின்றன. நீங்கள் ஓர் எறும்பின் செயலைக்கூர்ந்து கவனித்துப் பார்த்தால் புரியும்.

எறும்பு ஒரு தன்னம்பிக்கையூட்டும் உயிரினம். ஏனெனில் அது முயற்சியைக் கைவிடுவதே இல்லை. நீங்கள் ஓர் எறும்பு செல்லும் வழியில் ஒரு குச்சியையோ, இலையையோ அல்லது ஒரு செங்கல்லையோ வைத்தால், எறும்பு அதன் மேல் ஏறிச்சென்றுவிடும் அல்லது அதன்கீழ் பக்கமாகவோ அல்லது அதனைச் சுற்றியோ கடந்து சென்றுவிடும். அது தன் இலக்கை அடைய எது தேவையோ, அதைச் சரியாக செய்து விடும்.

தன் முயற்சியைக் கைவிடுவதே இல்லை. அது மீண்டும் மீண்டும் முயல்கிறது. நகர்ந்துகொண்டேயிருக்கிறது. தன்னுடைய இலக்கை நோக்கிச் சென்றுகொண்டேயிருக்கிறது. எறும்பு தன் முயற்சியைக் கைவிடாமல் இருப்பது மட்டுமல்ல, அது எப்போதும் குளிர்காலத்திற்குத் தேவையான முன் ஏற்பாடுகளையும் செய்து கொண்டேதானிருக்கிறது. அது எப்போதும் நாளையைப் பற்றிச் சிந்திக்கிறது.

அதற்குத் தகுந்தபடி தன்னைத் தயார் செய்துகொள்கிறது. வரப்போகின்ற கடுமையான காலத்திற்காக எறும்பு விடாமுயற்சியோடு தன்னைத் தயார் செய்துகொள்கிறது. ஏனெனில், இப்போதோ அல்லது பிறகோ, கடுமையான காலம் என்பது வந்தே தீரும்.

நாம் எல்லோரும் எறும்புகளிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் விடாமுயற்சியோடு உழைக்க வேண்டும். நம்முடைய லட்சியங்களை அமைத்துக்கொள்வதிலும், அதைப் பின்தொடர்வதிலும் நாம் ஒட்டுறவோடு இருக்க வேண்டும். நாளைக்காக நாம் திட்டமிட வேண்டும். எத்தனை பிரச்னைகள் நம்மை நெருக்கித் தாக்கினாலும், எத்தனை கஷ்டமான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக் கொண்டாலும், நாம் முயற்சியைக் கைவிடக் கூடாது.

வாழ்க்கையில் ஒரு சவாலை எதிர்கொள்ளும்போது என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக நீங்கள் செய்யக்கூடாத ஒன்றே ஒன்று பதறுவதுதான். ஏனெனில் நீங்கள் பதற்றப்படும்போது உங்கள் மூளைக்குச் செல்லும் காற்றுச்சுழற்சியை நீங்கள் நிறுத்திவிடுகிறீர்கள். காற்றுச்சுழற்சி நின்றுவிட்டால் உங்களால் தெளிவாகச் சிந்திக்கமுடியாது. தெளிவாகச் சிந்திக்கவில்லையென்றால் உங்கள் முன் இருக்கும் எல்லா வாய்ப்புகளையும் உங்களால் கவனிக்க முடியாது. வாய்ப்புகளைக் கவனிக்காவிட்டால் நல்ல முடிவுகளை எடுக்க முடியாது.

எனவேதான் நீங்கள் பதறக்கூடாது. பதற்றம் என்பது நரம்பு மண்டலத்தைப் பாதித்து உங்களை நேர்மறையாக சிந்திக்க விடாமல் தடுத்து தடுமாறச் செய்கிறது. ஆனால், வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டத்தை சவாலாக எடுத்துக்கொண்டு நேர்மறையாக சிந்தித்து சாதித்து காட்டிய சாதனைப் பெண் வைஷ்ணவி பூவேந்திரன் பற்றி அவசியம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் வைஷ்ணவி பூவேந்திரன், குடும்பத்துடன் மலேசியாவில் வசிக்கிறார். அம்மா, அப்பா, அக்கா என்ற சிறு குடும்பம். வைஷ்ணவிக்கு 28 வயதாகிறது. எஞ்சினியரிங் படித்துவிட்டு சில ஆண்டுகள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பரதநாட்டியமும், கர்நாடக இசையும் மிகவும் பிடித்தமானவை. நன்றாகச் சமைப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது மட்டுமல்ல, அலங்காரம் செய்துகொள்வதிலும் ஆர்வம் அதிகம்.

அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக 2013ஆம் ஆண்டு தெரியவந்தது. அந்த நேரத்தில் வைஷ்ணவி மிகவும் மனம் உடைந்துபோனார். அது வரை மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஒரு விளையாட்டாகவே எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாகக் கழித்த வைஷ்ணவிக்கு புற்றுநோய் பாதித்ததும் வாழ்க்கையே மாறிவிட்டது.

ஆனால், எப்படியும் மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையை மட்டும் அவர் கைவிடவில்லை.சில ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பினார். ஆனால், 2018ஆம் ஆண்டு முதுகிலும், கல்லீரலிலும் மீண்டும் புற்றுநோய் தாக்கியது. மனஉறுதியை குலைத்த அந்த நோய் வாழ்வா, சாவா என்ற நிலைக்கு தள்ளியது வைஷ்ணவியை.

புற்றுநோய் உடலை மட்டுமல்ல மனதையும் அரித்து கவலைகளையும் அச்சத்தையும் கூடுதலாகத் தந்தது. அதன் தாக்கம் முழுக்குடும்பத்தையுமே பாதித்துவிட்டது. வைஷ்ணவியின் குடும்பமே நிலைகுலைந்து போனது. அவரின் வேதனைகளைப் பார்த்து குடும்பத்தினர் பட்ட துயரம் இருக்கிறதே, அதை வார்த்தைகளால் எழுத முடியாது. மலேசியாவில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு வசதிகள் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பொருளாதார சிக்கல்களும் எழுந்தன. தொடர் சிகிச்சையில் 16 முறை கீமோதெரபி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து கீமோதெரபியால் தலைமுடி கொட்டிப்போக உடல் பொலிவிழந்துவிட்டது.

இதனால் உடலுக்கும் மனதுக்குமான இணக்கம் சீர்கெட்டுப்போனது. மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு எதிர்மறை சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டதாக உணர்ந்தார். குடும்பத்தினரும் சில நண்பர்களும் ஆறுதலாகத் துணை நின்றாலும் உலகத்திலிருந்து தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தார். புற்றுநோயைப் பற்றி பேச தயக்கமும், வெட்கமும் ஏற்பட்டு நோயைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. நோயைப் பற்றி வெளியே தெரிந்தால் தனது மகளின் திருமணத்தில் பிரச்னை ஏற்படும் என்று பெற்றோர்கள் பயந்தார்கள்.

ஆனால், வைஷ்ணவி மனத்தளவில் எப்படியாவது இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பலனால் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார். இருந்தபோதும் தனது தலைமுடியை இழந்ததால் தனக்கு அழகு இல்லை என்ற நிலையை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார்.

இந்த நிலையில் வைஷ்ணவி ஒரு துணிச்சலான முடிவெடுத்தார். இன்ஸ்டாகிராமில் நவிஇந்திரன்பிள்ளை என்ற பெயரில் தனது புற்றுநோய் பற்றி பதிவிட்டார். பலரிடமிருந்து ஆக்கப்பூர்வமான, ஊக்கப்படுத்தக்கூடிய பதிவுகள் வந்தவண்ணம் இருந்தன. இதை பார்த்த வைஷ்ணவிக்கு நம்பிக்கை அதிகரித்தது. ஒரு நாள் திடீரென்று ஏன் மணப்பெண் அலங்காரத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்து, புகைப்படக் கலைஞர்களை அணுகி ஆலோசித்தார். அவர்களும் உற்சாகமளித்தார்கள். உடனே அந்த புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். தன்னுடைய புகைப்படங்களை நிறைய பெண்கள் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். அது போன்றே நடந்தது. அந்த புகைப்படங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பிரபலமானது.

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் புகைப்படங்கள் தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும், உந்துசக்தியாக இருப்பதாகவும் தகவல் அனுப்பினார்கள். தலைமுடியை இழந்து தன்னிடம் அழகு இல்லை என்று எண்ணியிருந்த வைஷ்ணவிக்கு, இந்தப் பதிவுகளெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மிகுந்த தன்னம்பிக்கை தந்தது. அதனால் வாழவேண்டும், சாதிக்கவேண்டும்  என்ற வைராக்கியம் ஏற்பட்டது. ‘உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது. அழகாக இருப்பதாக நாம் உணர்ந்தால், உண்மையில் அழகாக இருப்போம். அழகு என்பது நம்மை நாமே நேசிப்பதும் மற்றும்; தன்னம்பிக்கையாக இருப்பதும்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்’ என்கிறார் வைஷ்ணவி.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த வைஷ்ணவி, ‘என்னை விரும்பும் ஒருவரை திருமணம் செய்துகொள்வேன். எதிர்காலம் எப்படி இருந்தாலும் அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு ஒரு துணிச்சலான வெற்றிகரமான பெண் என்ற நிலையை அடைந்து என்னைப் போன்ற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து ஊக்கப்படுத்துவேன்’ என்கிறார். அதுமட்டுமல்ல புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார்.

அழகு என்பது தோற்றத்தில் இல்லை, அழகு என்பது ஒவ்வொருவரின் மனதில்தான் இருக்கிறது. அப்படி நம்பிக்கை உள்ளவர்களின் முகத்தில்தான் அழகு பிரதிபலிக்கும் என்ற உண்மையை நமக்கு உணர்த்துகிறது வைஷ்ணவியின் வாழ்க்கை. அதுமட்டுமல்ல பயத்தை மட்டுமே கற்பனை செய்து வாழ்பவர்களுக்கு துணிச்சலையும் கற்பனை செய்து பாருங்கள்.

அப்போது இந்த உலகில் எதையும் வெல்லக்கூடிய சக்தி உங்களிடமும் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. வாழ்க்கையில் அஞ்சுவதற்கு என்று எதுவும் இல்லை. வாழ்க்கையைப் புரிந்துகொண்டால் வென்றுவிடலாம் என்று மேரிகியூரி சொல்வது போல கஷ்டங்களிலிருந்து விடுபட முதலில் துணிச்சலை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். வெற்றியின் ஆரம்பப் புள்ளி துணிச்சல்தான். துணிச்சலுடன்  வாழ்க்கையை எதிர்கொள்பவர்களிடம் தான் வெற்றி என்ற வெகுமதியும் தேடிவரும்.

(புதுவாழ்வு மலரும்)

X