சவால்களை எதிர்கொள்ள துணிந்தால் வெற்றிகள் சாத்தியமாகும்!

10/24/2019 3:13:49 PM

சவால்களை எதிர்கொள்ள துணிந்தால் வெற்றிகள் சாத்தியமாகும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்-20

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!!

ஒருவர் தோல்வி அடைந்துவிட்டால், அவர் மீண்டும் முயற்சி செய்வதைத் தடுப்பது, ஒரு குழந்தையிடம், ‘இனிமேல் நடக்க முயற்சி செய்யாதே. கீழே  விழுந்துவிட்டாய். அப்படியே இரு. எழுந்திருந்தால் வலிக்கும்’ என்று சொல்வதைப் போன்றது.

வலிக்காமலும் கீழே விழாமலும் குழந்தையால் நடை பழக இயலாது. தோற்கத் தயாராகாவிட்டால் ஜெயிப்பதும் கடினம்தான். தோல்வியின் பயத்தைவிட வெற்றியின் பரவசத்தை எண்ணிப் பார்க்க முடிவெடுங்கள். நேர்மறை எண்ணத்தைப் பெறவும் தொடரவும்  முடிவெடுங்கள். அது ஒரு தேர்வுதான். ஏதிர்மறை எண்ணம் உள்ள மக்களை விட நேர்மறை எண்ணம் உள்ளவர்கள் நிறைய நன்மைகளை பெற்றுவிடுகிறார்கள்.  எனவே, கவலைப்படாமல் இருக்க வேண்டுமென்றால் தேர்வு செய்யுங்கள், நேர்மறை எண்ணத்தை. இரண்டு விவசாயிகள் ஒரு கிராமத்துப் பாதையில் சென்றுகொண்டிருந்தனர்.

ஒருவர் மற்றவரிடம், “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். முதல் விவசாயி,  “நிலம் கட்டாந்தரையாக இருக்கிறது, மாடுகளுக்கு வயதாகிவிட்டது. பால் முன்பைப் போலச் சுவையாகவே இல்லை. எல்லாம் மோசமாக இருக்கிறது.  வாழ்க்கையே சகிக்கவில்லை. சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இரண்டாமவர், “நல்லது. இங்கும் நிலம் கட்டாந்தரைதான். ஆனால், எனக்கு நிலமே இல்லாத காலத்தை நினைத்துப் பார்த்து இறைவனுக்கு நன்றி  செலுத்துகிறேன். மாடுகளுக்கு வயதாகிவிட்டாலும் பால் தருகின்றன. பாலும் விற்பனையாகிறது. என்னிடம் நிறைய சொத்துகள் இல்லாவிட்டாலும், உடல்நலம்  இருக்கிறது. தினமும் காலையில் எழுந்து எனக்குப் பிடித்த வேலையை என்னால் செய்யமுடிகிறது.

நான் எல்லாவற்றுக்காகவும் இறைவனுக்கு நன்றி  செலுத்துகிறேன்” என்றார். காலம் சென்றது. எதிர்மறை மனோபாவத்தோடு புலம்பிக் கொண்டிருந்த விவசாயி, வாழ்க்கையில் எத்தனை குறைகளைக் காணமுடியுமோ கண்டுவிட்டார். குறை  சொல்லி கவலைப்பட்டுப் புலம்பியே காலத்துக்கு முன்னாலேயே இறந்துவிட்டார். நேர்மறை மனோபாவம் கொண்ட விவசாயி, கடினமாக உழைத்து  வாழ்க்கையைத் தொடர்ந்து அனுபவித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, கிடைத்ததற்கு நன்றியோடு இருந்ததால், பழுத்த முதியவராக வாழ்ந்தார். ஒவ்வொரு  நாளும் விழித்து எழுவதற்கு அவரிடம் நல்ல நேர்மறையான காரணங்கள் இருந்தன. பாருங்கள்! புகழ்ச்சியும், நன்றியும் மேலே போகப் போக ஆசிகளும்,  அற்புதங்களும் கீழே இறங்கி வருகின்றன.

வாழ்க்கை உண்மையிலேயே அற்புதமான ஒன்று என்பதை உணர்ந்து நன்றி என்னும் மனோபாவத்தை எப்போதும்  மேற்கொள்ளுங்கள். தோல்விகள் எல்லோருக்கும்தான் வருகின்றன. ஆனால், எது நிகழ்ந்தாலும் தன்னம்பிக்கையோடு செல்லத் தயாராக இருப்பவர்களுக்கு, முடிவுகள் எப்போதும்  சாதகமாகவே அமையும். அப்படி தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொண்டு புதிய சிந்தனையுடன் தொடங்கி  வெற்றி பெற்றவர்தான் தன்யா. தன்யா கேரளத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பெங்களூரில்தான். பிறக்கும்போது எந்த குறையும் தன்யாவிடம் காணப்படவில்லை.  ஆனால், சில நாட்களில் தன்யா தொடர்ந்து அழ ஆரம்பித்தார்.

நிறுத்தாமல் அழுகை தொடரவே பெற்றோர்கள் தன்யாவை மருத்துவர்களிடம் காட்டினார்கள்.  இருப்பினும் எந்த பயனும் இல்லை. பல மருத்துவர்களிடம் மாறி மாறி காட்டினார்கள். ஆனாலும், அவரது அழுகை நின்றபாடில்லை. கடைசியில் ஒரு டாக்டர்  தன்யாவை பரிசோதித்துவிட்டு ‘ஆஸ்ட்ரோ ஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா’ என்ற கொடிய வகை நோய் தாக்கியுள்ளதாகக் கண்டுபிடித்தார். இந்நோய் வந்தால் எலும்புகள் பலமில்லாமல் மென்மையாக மாறிவிடும். சின்ன குலுக்கலையும் தாங்க முடியாமல் ஒடிந்துபோகும். எழுந்து  நடக்க முடியாது, எதையும் தூக்க முடியாது. இவ்வளவு ஏன் கை, கால்களை வேகமாக அசைக்க முடியாது. இருமல், தும்மல் வந்தால்கூட அந்த அசைவில்  எலும்புகள் ஒடிந்துபோகும்.

அந்த அளவுக்கு எலும்புகள் சக்தி இல்லாமல் இருக்கும்’’ என்றார். டாக்டர் சொன்னதைக் கேட்ட தன்யா மற்றும் அவருடைய பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். என்னால் மற்ற குழந்தைகள் போல ஓடியாடி விளையாட  முடியவில்லை, சாதாரணமாக சில அடிகள் கூட நடக்க முடியாது என்றாகிவிட்டதே என்று தன்யா மிகுந்த மனவருத்தம் அடைந்தார். இப்படியே காலங்கள்  சென்றன. நோயுடனே தன்யா தன் காலத்தை தள்ளினார். இதுவரைக்கும் முன்னூறுக்கும் அதிகமான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. அவர் வீட்டில் இருந்த  நாட்களைவிட அதிக நாட்கள் மருத்துவமனையில்தான் இருந்தார். சில தருணங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வழியில் மீண்டும் உடலில் எங்காவது  எலும்பு உடைந்துபோய் வலியால் அலறுவார்.

இந்த நிலையில் வீட்டிற்குப் போகாமல் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்புவார்கள். இப்படி பலமுறை  நடந்துள்ளது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் ஏன் மருத்துவர்களுக்கும் கூட இல்லாமல் போனது. இதை தனது தலைவிதி என்று நினைத்துக்கொண்டார்  தன்யா. பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். பல மருத்துவமனைகளுக்குச் சென்று பல மருத்துவர்களைப் பார்த்தும் பலனில்லை. கடைசியில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றதும் நிலைமை கொஞ்சம் மாறியது. இருந்தாலும் நடக்க முடியவில்லை. அதனால் தன்யா பள்ளிக்குப் போவதைப்பற்றி பெற்றோர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்.  

தன்யா சுட்டித்தனமாகப் பேசுவார், அதனால் அவர் வீட்டு அருகில் வசித்து வந்த விக்டோரியா என்ற பெண்ணுக்கு தன்யாவின் மீது கொள்ளைப் பிரியம். தனது  மகள்களுடன் வீட்டிற்கு வந்து தன்யாவுடன் விளையாடுவது பாடம் சொல்லிக் கொடுப்பது என தன்யாவை ஊக்கப்படுத்தினார். ஆனால், உடல்நிலையில்  முன்னேற்றம் இல்லை. 29 வயதாகியும் உருவம் சிறுபிள்ளை வடிவத்தில்தான் இருந்தது. இருந்தபோதும் விக்டோரியா அவர்களின் தொடர் ஊக்குவிப்பால்,  தன்யாவின் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்பட்டன. வாழவேண்டும், சாதிக்கவேண்டும், ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தன்யாவுக்குள் உதயமாயின.

அதன் பிறகு இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப்  பல்கலைக்கழகத்தில் ஆயத்த படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். புதினம் எழுதுவது எப்படி என்ற சான்றிதழ் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மருத்துவ  சிகிச்சைகளும், ஆய்வுகளும் ஆலோசனைகளும் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, சிகிச்சைகள் அவரது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளாக மாறியிருந்தன. வலியை உணர முடியாமல்  இருக்க மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு இணையம் அவரது வாழ்வில் அறிமுகமானபோது அவரது வாழ்க்கை நேர்மறைத் திருப்பமாக  அமைந்தது. மாற்றி யோசித்து வாழ்க்கையை மாற்றிக்கொள்வது சாத்தியம்தான் என்று இணையம் ஒப்புக்கொள்ள வைத்தது.  

வாழ்க்கையின் நோக்கம் நன்றாக உல்லாசமாக வாழ்வது மட்டுமல்ல... கிடைத்த வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதும் தான் என்பதைப் புரிந்துகொண்டார். இணையம் மூலம் ஒரு எழுத்தாளராக பல இணைய இதழ்களில் கட்டுரைகளை எழுதி  தனக்கென ஒரு வட்டத்தையும் அதில் உருவாக்கிக்கொண்டார். சவால்களை எதிர்கொள்ள துணிந்தால் வெற்றிகள் சாத்தியமாகும் என்பதை நிரூபித்துவிட்டார். வீல்சேரில் வாழ்க்கை நகர்ந்தாலும் எலும்புகள் முறியலாம் என்ற அபாயம் இருந்தபோதும் தன்யா நேர்மறை எண்ணத்துடன் தன்னை முன்னேறத் தூண்டும்  பேச்சாளராக மாற்றிக் கொண்டார்.

அதுமட்டுமல்ல மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து தன்னால் முடிந்த சேவைகளையும் விழிப்புணர்வுகளையும் அரசுசாரா நிறுவனங்களுடன் சேர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இவரின் முயற்சியைப் பாராட்டும் விதமாக மத்திய அரசின் இந்திய  மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை சார்பாக தேசிய விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டுள்ளது.  வீல்சேரில் முடங்கியபோதும் தொடர்ந்து காயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்போதும் நம்பிக்கையுடன் பயணம் மேற்கொண்டு வருகிறார் தன்யா.

சாதாரண  தலைவலி வந்தால் பலரும் துடிதுடித்துப் போவார்கள், தேர்வில் தோல்வி சிறிய கஷ்டங்களுக்கெல்லாம் எதிர்மறை எண்ணத்துடன் தவறான முடிவுக்குச்  செல்பவர்களுக்கு தன்யாவின் வாழ்க்கை ஒரு உன்னத பாடம்.  உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் பரவாயில்லை அதை புதியதாக எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தொடங்கலாம் என்று புத்தர்  சொல்வது போல, நேற்றைய துயரங்களுக்காக வருந்தாமல் இன்று இப்போது இந்த காலத்தில் முயன்றால் கூட உங்களால் முடியும். தன்யாவை போல செயல்பட  முயன்று வெற்றி பெறுங்கள். செயல்படாத மனிதனுக்கு கடவுள் ஒருபோதும் உதவுவதில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

(புதுவாழ்வு மலரும்)
பேராசிரியர் முனைவர் அ.முகமது அப்துல்காதர்

X