ஆதிக்கம் செலுத்துவோரை எளிதாக சமாளிக்கலாம்!

10/24/2019 3:15:28 PM

ஆதிக்கம் செலுத்துவோரை எளிதாக சமாளிக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நடை உடை பாவனை-20

மனிதனின் கைகளில் எல்லாம் இருக்கிறது. மனிதன் தனக்குள் வைத்திருக்கும் திறமைகளுக்கும், சக்திகளுக்கும் ஓர் எல்லையே இல்லை. தான் நினைத்ததை  சாதிப்பவனும் அவன்தான். அதேசமயம், தனது அநாவசிய பயங்களினாலும், கோழைத்தனத்தாலும்  தனக்குக் கிடைக்கின்ற நல்ல வாய்ப்புகளையெல்லாம்  கைநழுவிப் போக விடுபவனும் அவன்தான் என்று குறிப்பிடுகிறார் தஸ்தயெவ்ஸ்கி தனது குற்றமும் தண்டனையும் நாவலில்.

மனிதனின் கைகளில் எல்லாம் இருக்கிறது. மனிதன் தனக்குள் வைத்திருக்கும் திறமைகளுக்கும், சக்திகளுக்கும் ஓர் எல்லையே இல்லை. தான் நினைத்ததை  சாதிப்பவனும் அவன்தான். அதேசமயம், தனது அநாவசிய பயங்களினாலும், கோழைத்தனத்தாலும்  தனக்குக் கிடைக்கின்ற நல்ல வாய்ப்புகளையெல்லாம்  கைநழுவிப் போக விடுபவனும் அவன்தான் என்று குறிப்பிடுகிறார் தஸ்தயெவ்ஸ்கி தனது குற்றமும் தண்டனையும் நாவலில்.

முகம் சுட்டிக்காட்டுவதை கைகள் வலியுறுத்து வதோடு, முகபாவனைகள் காட்டாதவற்றை வெளிப்படுத்தும் வல்லமையும் கைகளுக்கு உண்டு. அதனால்தான்  ‘கைகள் மனிதர்களின் இரண்டாம் முகம்’ என்று சொல்கிறார்கள். இரண்டு நபர்களுக்கிடையே நடக்கும் கைகுலுக்கலில் தமது அதிகாரத்தை வலியுறுத்திக் காட்ட  நினைப்பவர்களைச் சமாளிக்கும் வழிமுறைகளில் அடுத்தது

கைகளைப் பிடிக்கும் யுக்தி

அடுத்தவர் மீது அதிகாரத்தைச் செலுத்த கைகுலுக்க வரும் நபர், வேண்டுமென்றே உள்ளங்கையை கீழ்நோக்கிய நிலையில் வைத்து (சத்தியம் செய்ய வருவது  போல்) கைகுலுக்க வரும்போது, அதை சமாளிக்க வலது உள்ளங்கையை மேல் நோக்கியபடி (சத்தியத்தை ஏற்பது போல்) கரத்தை நீட்ட வேண்டும். அதை  அவர்கள் எதிர்பார்ப்புடன் பற்றி குலுக்க முற்படுவார்கள். அப்போது இடது உள்ளங்கையை அவரது வலது கையின் மேல் வைத்து, இரண்டு கரம் பற்றி  குலுக்குவதுபோல் கைகுலுக்க வேண்டும்.

அவ்வளவுதான், இப்போது அதிகாரம் செலுத்த முற்பட்டவர், நமது கட்டுப்பாட்டிற்குள் வந்தவராகிறார். நிமிட நேரத்தில் சூழலே மாறிப்போய்விடும். வாய்  வார்த்தையாக எவ்விதமான பேச்சும் இல்லாமல் உடல்மொழியாக மட்டுமே நடக்கும் ஆளுமைத்திறன் இது. ஒருவரின் கை மற்றவரது இரண்டு கைகளுக்குள்  இருக்கும்போது அவர் ஒரு அதிகார ஆளுமைக்குள் சிக்கிக்கொண்டவராகவே அவரது உடலும், மனமும் ஏற்றுக்கொள்கிறது. அதன் வாயிலாக கட்டுப்பாடான  மனநிலை ஏற்படுகிறது.

(இந்தத் தன்மையை ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியாக விவரித்திருப்பதைப் பார்க்கலாம்) இப்படி இரண்டு கைகளாலும் பிடித்து  கைகுலுக்குவதால் அதிகாரம் செலுத்த நினைப்பவர்களை எளிதில் சமாளித்துவிடமுடியும். அதையும் மீறி சிலர் கைகளை உதறி மீண்டும் அதிகார தொனி மிளிர  கைகுலுக்க முற்பட்டால், அதைத் தடுக்க அவரது கை மணிக்கட்டுப் பகுதியை பிடித்தால் போதும். இது அவரை நிலைகுலைய வைத்துவிடும். அடுத்தவரது  மணிக்கட்டுப் பகுதியை பிடிப்பது கைகுலுக்கல் வகையில் சேராது போனாலும் அதிகாரத்தைத் தடுக்க இதை ஓர் ஆயுதமாகப் பிரயோகிக்கலாம்.

பிசுபிசுப்பான கைகுலுக்கல்

பிரபலமானவர்களையோ, ஆச்சரியமான ஆளுமையைக் கொண்டவர்களையோ சந்திக்கும்போது, சிலருக்கு நாக்கு பிரளாமல் பேச்சு எட்டிப்பார்க்காமல் போவதைப்  பார்க்கலாம். அதே நிலைதான் கைகுலுக்கும்போதும் சிலருக்கு நேர்கிறது. ஏதோ ஒரு இனம் புரியாத படபடப்பு எழுந்து கைகளை நடுங்க வைத்து,  உள்ளங்கைகளை வியர்த்துப் போகச் செய்கிறது. இது மனிதர்களுக்கு ‘டெர்மிஸ்’ என்ற கைகளின் மேல் தோலிலுள்ள செல்களுக்கு ரத்தம் சரிவர பாயாமல்  போவதால், கைகள் குளிர்ந்து, வியர்வை சுரக்கிறது. இதனால்தான் திடீரென்று உள்ளங்கைகள் ஜில்லென்றும், பிசுபிசுப்பானதாகவும் மாறிவிடுகிறது.

ஒருவரைச் சந்திக்க போகும்போது, நிமிர்ந்த நடை, நாகரிகமான உடை இவற்றோடு உறுதியான எவ்வித அசுயையும் இல்லாத கைகுலுக்கல் அவசியம். கைகுலுக்க  வேண்டிய சூழ்நிலை இருக்குமானால் அதை முன்கூட்டியே உத்தேசித்து கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஈரம், கறை, ஒவ்வாத வாசனை  ஏதுமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எப்போதும் கைப்பையிலோ, பாக்கெட்டிலோ ஒரு கைக்குட்டை அல்லது டிஷ்யூ காகிதம் வைத்திருப்பது நல்லது.  சுத்தமான (சுகாதாரமான) கைகுலுக்கல்தான் வெற்றிகரமான சூழ்நிலைக்கு வழிவகுத்துத் தருகிறது.

ஈரமான வியர்த்துப்போன கைகளை யாரும் விரும்புவதே இல்லை. அப்படிப்பட்டவர்களுடனான கைகுலுக்கலை ஒருவிதமான அவர்ஷனுடனேயே பார்க்கிறார்கள்.  வெறுப்பான ஈர மாமிசத்தை கையில் பிடித்திருப்பது போன்ற அசுயையை அது ஏற்படுத்துவதாகவே பலரும் குறிப்பிடுகிறார்கள். கைகளை நாம் சுத்தமாக  வைத்திருக்கிறோம், அதுவே அடுத்தவர் அப்படி வைத்திருக்காமல் போகும்போது எப்படி சமாளிப்பது என்ற கேள்வி எழலாம். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை மிக  நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நபருக்கு கைகள் திடீரென்று வியர்க்கிறது என்றால், அந்த நபருக்கு நீங்கள் அதிசயமானவராக, ஆச்சர்யமானவராக ஏதோ ஒரு வகையில் பிரமிப்பானவராக  இருக்கிறீர்கள் (அல்லது அவர் அப்படி உணர்ந்து கொண்டிருகிறார்) என்று பொருள். இந்தப் புரிதலோடு அணுகி, அவரை ரிலாக்ஸ் ஆக்கும் எண்ணத்தோடு, அவரது  கைகளை இதமாகப் பற்றிக் குலுக்குமுன், அவரை மற்றொரு கையால் அவரது தோளைப்பற்றி அழுத்திவிடுங்கள்.  அந்தக் கதகதப்புச் சூடு அவருள் இறங்கி  படபடப்பை கட்டுப்படுத்தி, வியர்ப்பதை நிறுத்தும். சூழ்நிலையை இயல்பாக்கும்.

Left Side Advantage

இந்தப் படத்தைப் பாருங்கள்.

ஒரு எளிய கேள்வி

படத்திலிருக்கும் இரு சிறுமிகளில் யாரை முதலில் பார்த்தீர்கள்? புகைப்படத்தில் இடதுபக்கம் இருக்கும் குழந்தையைத்தான் முதலில் பார்த்தீர்கள் என்பதைச்  சுலபமாகச் சொல்ல முடியும். காரணம், 93% பேர் ஒரு புகைப்படத்தை எடுத்தால் அப்படித்தான் பார்க்கிறார்கள். இதுதான் அறிவு உடல் மொழியோடு இணையுமிடம். இரண்டு நபர்கள் கைகுலுக்கியபடி புகைப்படத்திற்கு போஸ் தரும்போது புகைப்படத்தில் இடதுபுறம் இருப்பவர் முன்னுரிமை கொண்டவராகிறார்.

(நிஜத்தில் அவர் வலது புறம் நின்றிருப்பார்) காரணம் புகைப்படத்தை பார்க்கும் மக்கள் தன்னை முதலில் பார்க்கும் முன்னுரிமையைப் பெறுவதோடு,  கைகுலுக்கலில் அவரது கரத்தின் மேல்புறம் தெரியும். அது ஒரு அதிகார தோரணையைக் காட்டுவதாகக் கருதப்படும். இதைத்தான் Left Side Advantage  என்று குறிப்பிடுகிறார்கள். இதை பெரும்பாலான உலகத் தலைவர்களின் சந்திப்புகளில் பார்க்க முடியும். அடுத்தவர் மீது ஆளுமையைச் செலுத்த நினைக்கும் சிலர்  அப்படி உணர்ந்து செய்வார்கள். மற்றவர்களுக்கு இயற்கையின் இயல்புபடி அமையும். மனிதர்கள் எப்போதும் அடுத்தவரது கைகளைப் பற்றுவதில்தான் அதிக  ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

பிறந்த குழந்தையைப் பார்க்கும்போது கூட, முதலில் அதன் பிஞ்சுக் கைகளில் தங்களது விரல்களை கொடுத்து குழந்தை பற்றிக்கொள்கிறதா என்பதைப்  பரிசோதிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் வளர்ந்து ஆளானதும் அடுத்தவரை சந்திக்கும்போது கரம் குவிக்க வேண்டுமா,  கைகுலுக்க வேண்டுமா என்பதை பெற்றோர்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறார்கள். கைகுலுக்கலின் வழியாக அதிகார, அசௌகர்ய சூழ்நிலையைச் சமாளிக்கும்  வழிமுறையில் அடுத்தது ஆண் பெண் கைகுலுக்கல்கள்…

- தொடரும்
ஸ்ரீநிவாஸ் பிரபு

உடை வழி - டர்பன் (தலைப்பாகை)

தலைப்பாகை ஐரோப்பிய நாகரிகத்துக்குட்பட்ட Bizantine Civilization-லிருந்து தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால்,  அதற்கெல்லாம் முன்பே இந்திய நாகரிகத்தில் தலைப்பாகை அணியப்பட்டதற்கான ஆதாரங்கள்  ரிக் வேதத்திலும், சாஞ்சி, மதுரா மகாபலிபுர சிற்பங்களிலும்  பார்க்கக் கிடைக்கின்றன.இந்தியாவில் - கிபி 300 காலகட்டத்தில், ‘அபஸ்தம்பா’ என்ற ரிஷி ‘குருவை சந்திக்க வரும் அனைவரும் தலைப்பாகையைக்  கழற்றிவிட்டு வரவேண்டும்’ என ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தலைப்பாகையை சடங்காக அணியும் யாரும்,  இன்றளவும் பெரியவர்களைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக  தலைப்பாகையைக் கழற்றவே செய்கிறார்கள். இந்தச் செயல்பாட்டை தொப்பி அணியும் மேற்கத்திய கலாசாரத்தினரும் கடைப்பிடிப்பதுதான் விசித்திரம்.  இந்தியாவின் தொன்ம மரபில் வாழ்ந்த மன்னர்கள் காலகட்டத்தில் அரசவையில் மன்னருக்கு அடுத்த நிலைகளில் இருப்பவர் யார் என்பதையும்,  சமூகத்தில்  உயர்ந்த நிலையில் உள்ளவர் யார் என்பதையும் அவர்கள் அணிந்திருந்த தலைப்பாகை தெளிவாக அடையாளப்படுத்தியது.

உலகம் முழுக்க பல்வேறு நாகரிகத்தில் தலைப்பாகை அணியும் வழக்கம் இருந்தாலும், இந்தியாவில் Pugree எனப்படும் தலைப்பாகை ஒரு நீளமான துணி,  அதை நெற்றியில் வைத்துத் தொடங்கி தலையோடு இறுக்கமாக, கனமாக சுற்றிக்கொண்டு, முழம் நீளத்திற்கு பின் பக்கமாக தொங்கவிட்டுக்கொள்வார்கள்.  தலைப்பாகை ஒரு உடை வகைதான், ஆனால் உலகம் முழுக்க அதன் அணிவிப்பு முறையில் சிறு வித்தியாசங்களுடன் வேறு வேறு பெயர்களில், ஒரு  தலையாய இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் தலைப்பாகை என்ற உடையைப் பயன்படுத்தத் தொடங்கிய போது தலைமுடியை இறுக  கட்டிக்கொள்ளத் தொடங்கி, அதிலிருந்து ஆரம்பமானதுதான் சிகை அலங்காரம்.

-தொடரும்

X