12 வேதியியல் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

11/21/2019 3:50:14 PM

12 வேதியியல் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கக்கூடிய மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள். வேதியியல் பாடப்பகுதியில் முழுமையான மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்பதை பற்றிய வழிமுறைகளைத் தருகிறார் தேனி மாவட்டம் உத்தமபாளையம் த கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வேதியியல் முதுகலை ஆசிரியர் G.சுரேஷ்.

கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது புதுப் பாடப்பகுதிகள் அனைத்தும், அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அதிக பகுதிகள் இருப்பதை போன்று நீங்கள் உணர முடியும், மிகக் குறுகிய காலகட்டத்தில் படித்து தயாராவது என்பது சற்று சவாலாகவே அமையலாம். அதோடு மட்டுமில்லாமல் ப்ளூ பிரின்ட் என சொல்லக்கூடிய முறை இல்லாதது மற்றும் அதிக பாடப் பகுதிகளைப் படித்து குறைந்த வினாக்களுக்கு விடை எழுதுவது போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இருப்பினும் திட்டமிட்டுப் படித்தால் சராசரியாகப் படிக்கக்கூடிய மாணவர்கள் கூட 80% மதிப்பெண்களை எளிதாகப் பெறமுடியும், மீதமுள்ள 20 % மதிப்பெண்களுக்கு மட்டுமே அதிக உழைப்பு தேவை. செய்முறை பயிற்சிக்கு 20 மதிப்பெண்களும் இண்டர்னல் அசஸ்மெண்டுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கப்படும். முதலில் ஒவ்வொரு பாட இறுதியிலுள்ள தன் மதிப்பீட்டு வினாக்களை முற்றிலும் படித்துவிட்டு பின்னர் கூடுதல் வினாக்களைத் தேடிப் படிக்கவேண்டும். சராசரியாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாட எண் 1,2,4,5,6,7,8,9,10,14,15 ஆகியவற்றை முதலில் படித்துவிட்டு பின்னர் மற்ற பகுதிகளில் சில கேள்விகளில் கவனம் செலுத்தலாம்.

எனவே, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிடுவோம் என்ற குறிக்கோளோடு திட்டமிட்டுச் செயலில் இறங்கி தேர்வினை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். பாடப்பகுதிகளை முழுமையாக புரிந்து உள்வாங்கிப் படித்தால் முழுமையான மதிப்பெண்கள் நிச்சயம் கிடைக்கும். அதற்குரிய வழிமுறைகளை இனி பார்க்கலாம்.

பகுதி 1: சரியான விடைகளைத் தேர்வு செய்யும் விதமாக 1மதிப்பெண் வினா எண் 1 முதல் 15 வரை ஒவ்வொரு பாடத்திலும் ஒரு வினா கேட்கப்படும். மொத்தமுள்ள 15 வினாக்களில் பெரும்பாலும் 8 அல்லது 9 வினாக்கள் பாட இறுதியிலுள்ள தன் மதிப்பீடு வினாக்களாகவே அமையும். மீதமுள்ளவை நன்றாகப் பாடப்பகுதிகளை உள்வாங்கியிருந்தால் மட்டுமே பதில் அளிக்கக்கூடிய வகையிலிருக்கும். குறிப்பாக கரிம வேதியியல் மற்றும் இயற்பியல் வேதியியல் பகுதிகளில் கணக்கீடுகள் சார்ந்த ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் சிந்திக்க வைக்கும்.

மேலும் புத்தகத்தில் தன் மதிப்பீடு வினாக்களுக்கு அருகே உள்ள QR Code-ஐ Scan செய்தால் அதிலும் கேள்விகள் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆகவே, 100 சதவீத மதிப்பெண்களைப் பெற விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடப் பகுதிகளையும் முற்றிலுமாக படித்து புரிந்துகொள்ளவேண்டும். மேற்குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள பாடங்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

பகுதி 2: வினா எண் 16 முதல் 24 வரை 2 மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும். மொத்தமுள்ள 9 வினாக்களில் 6-க்கு விடையளிக்க வேண்டும். அதில் குறிப்பாக ஒரு வினா கட்டாயமாக விடையளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப் பகுதியிலும் 4 அல்லது 5 வினாக்கள் தன் மதிப்பீட்டுப் பகுதிகளிலிருந்து கேட்கப்படலாம். கட்டாயம் விடையளிக்க வேண்டிய வினா பெரும்பாலும் வேதியியல் கணக்கீடு களாகவும், வேதிவினைச் சமன்பாடுகள் மற்றும் வேதிச்சேர்மங்களின் வடிவங்களை குறிப்பிடுபவையாகவும் அமையலாம்.

பகுதி 3: வினா எண் 25 முதல் 33 வரை மூன்று மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும். மொத்தமுள்ள 9 வினாக்களில் 6-க்கு விடையளிக்கப்பட வேண்டும். அதில் குறிப்பாக ஒரு வினா கட்டாயமாக விடையளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தப் பகுதியிலும் 4 அல்லது 5 வினாக்கள் தன் மதிப்பீட்டு பகுதிகளிலிருந்து கேட்கப்படலாம். கட்டாய வினாவும் கரிம வேதியியல் அல்லது இயற்பியல் வேதியியல் பகுதிகளிலிருந்து கணக்கீடுகளாகவும் அல்லது கரிம வேதி வினைகளை எழுதுவதாகவும் அமையலாம். இரண்டு மதிப்பெண் விடைகளைப் போலில்லாமல் சற்று அதிகமான வார்த்தைகளில் மாணவர்கள் விடையளிக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் படங்களை வரைவதும் அவசியமாகும்.

பகுதி 4: வினா எண் 34 முதல் 38 வரை 5 மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும். இவை பெரும்பாலும் 2 மற்றும் 3 மதிப்பெண்களாகப் பிரித்து கேட்கப்படும். மொத்தமுள்ள ஐந்து வினாக்களிலும் இரண்டு கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும் (A or B) அவற்றில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும் அதிலும் i, ii, iii  என வினாக்கள் இருக்கும். அவற்றையும் எழுதியாக வேண்டும். வேதியியல் கணக்கீடுகளும் இந்த பகுதியில் அடங்கும். மேலும் கரிம வேதியியல் பகுதிகளும் தயாரிப்பு முறைகள், வேதியியல் பண்புகள் மற்றும் பெயருள்ள வினைகள் போன்றவை அதிகம் இடம்பெற வாய்ப்புள்ளது.

குறிப்பாக இறுதி வினா எண் 38  நேரடியாக வேதிவினைகளைக் கொடுக்காமல் சில குறிப்புகள் மூலம் வேதிச் சேர்மங்களின் பெயர்கள், வேதியியல் வாய்ப்பாடு மற்றும் வேதிவினைச் சமன்பாடுகளை எழுதும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வினாவுக்கு பதிலளிக்க மாணவர்களிடம் கரிம வேதியியல் பகுதியில் ஆழ்ந்த புரிதல் இருக்கவேண்டும். பாட எண் 11, 12, 13-ல் உள்ள கரிம வேதி வினைகளைத் தனியாகக் குறிப்புகள் எடுத்து வைத்து படித்தால் இதனை எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.  

தேர்வு அறைக்குள் நுழையும் நேரத்திலும் பதற்றத்துடன் படிப்பதை தவிர்க்க வேண்டும். பல்வேறு விதமான வினா வங்கிகளைத் தேடிப்பிடித்து அதற்குரிய விடைகளைக் காண முயற்சி செய்யவேண்டும். கால மேலாண்மையை தயார் செய்து அதற்கேற்றாற்போலத் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். தேர்வறையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள்.

(இவர் தரும் மாதிரி வினாத்தாளை அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.)

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X