கண்களின் சுருக்கக் கோடுகள் பொய்யான புன்னகையை உணர்த்தும்..!

12/12/2019 4:53:45 PM

கண்களின் சுருக்கக் கோடுகள் பொய்யான புன்னகையை உணர்த்தும்..!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

உடல்மொழி-23

நடை உடை பாவனை!

ஒரு உணர்ச்சியை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் மாற்றிக் காட்டும் வல்லமை புன்னகைக்கு உண்டு. ஒருவரின் புன்னகைகூட சில சமயங்களில் சூழலை மாற்றியமைத்துவிடும். உடல்மொழியில் முக்கிய இடம் புன்னகைக்கு உண்டு.ஒரு நாள் யவ்வன தேசத்து ராஜா மாறுவேடத்தில் நகர்வலம் வந்தபோது தன் எதிரில் வந்த இளம் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்படி அவளைப் பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் போலிருந்தது. காரணம், அவள் அவனைப் பார்த்து புன்னகைப்பது போலிருந்தது. அந்த இளம் பெண்ணின் புன்னகை ராஜாவுக்கு எதையோ சொல்லியது போலிருந்தது. உடனே அவளிடம் பேசவேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியது. ராஜாவைப் போலத்தான் பலரும் பல சூழலில் இருக்கிறார்கள். எதிரிலிருக்கும் ஒரு நபரின் புன்னகை எப்போதும் ஒரு ரசவாதத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

ராஜா அந்தப் பெண்ணிடம் சென்று பேச்சு கொடுத்தான். பதிலுக்கு அந்தப் பெண் ராஜாவிடம் பேசவே இல்லை. அந்தப் பெண்ணின் புன்னகையால் தூண்டப்பட்ட ராஜா மீண்டும் மீண்டும் பேச முற்பட, ஒரு கட்டத்தில் அவள் தோழி ராஜாவிடம் வந்து, “ஏன் இப்படி வந்து வழியறே? அவ உன்னை கிறுக்கன்னு நினைக்கிறா’’ என்றாள்.

ராஜா அவளை அதிர்ச்சியோடு பார்த்தார். அவள் மெல்லிய புன்னகையைத் தவழவிட்டபடி, பற்களை வெளிக்காட்டாமல், உதடுகளை இறுக்கமாக மூடிக்கொண்டபடி சிரித்துக்கொண்டிருந்தாள். பெண்களின் சிரிப்பிற்குள் இருக்கும் அர்த்தம் உலக ஆண்களுக்கு ஒரு நாளும் புரியாது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் ராஜா அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். இதுதான் புன்னகை  செய்யும் மாயம்.

“வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சிரிச்சபடி கூப்பிடு…. ஏன் சிரிக்கவே மாட்டேங்குறே, சிரிச்சா என்ன முத்தா உதிர்ந்திடப்போகுது? கலகலன்னு சிரி கண்ணு’’ என்று சிறுவர்களிடம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம். அப்படி புது மனிதர்களிடம் புன்னகையை தவழவிட்டால் அது நேர்மறையான உணர்ச்சிகளையே ஏற்படுத்தும் என்பதை உத்தேசித்தே அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

மற்ற உயிரினங்களால் வெளிக்காட்ட முடியாத உணர்ச்சிப் பாவனை புன்னகை. இந்த புன்னகைக்கும் பாவனை மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த அரிய பரிசு. அதனால்தான் புன்னகைக்கு நோயைத் தீர்க்கும் குணம் இருக்கிறது என்கிறார்கள்.புன்னகை பற்றிய முதல் ஆய்வு/விஞ்ஞான ஆராய்ச்சி 19ம் நூற்றாண்டில் நடைபெற்றது.

மனிதர்களின் முகத்தில் பூக்கும் புன்னகைக்கும் அவர்கள் மனம் கொள்ளும் உண்மையான சந்தோஷத்திற்குமான வேறுபாட்டை இனம் பிரித்து அறிய மின்தூண்டலைப் பயன்படுத்தி, ஃப்ரெஞ்ச் விஞ்ஞானி கில்லாம் டு சென் டி புலான் ஆராய்ந்தார். பல்வேறு கோணங்களில் மனித முகத்தில் தசைகளை இழுத்து, முகத்தின் எந்த தசையின் இழுப்பால் புன்னகை தோன்றுகிறது என்பதைப் பதிவு செய்தார். புன்னகை குறித்தான அவரின் முடிவு அறிக்கைதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒரு மனிதன் புன்னகைக்க அவனது முகத்தின் பக்கவாட்டில், வாயின் ஓரங்களை இணைக்கும் தசையும் (சைகோ மேடிக் மேஜர்), கண்களைப் பின்னுக்கு இழுக்கும் தசையும் (ஆர்பிகுளாரிஸ் ஆகுலை)தான் முக்கிய காரணமாக இருக்கிறது என்றார்.

சைகோ மேடிக் மேஜர் தசை வாயைப் பின்னுக்கு இழுத்து, பற்களை வெளிக்காட்டி, கன்னங்களை உப்பச் செய்கிறது. ஆர்பிகுளாரிஸ் ஆகுல் தசை கண்களைப் பின்னுக்கு இழுத்து சுருங்கச் செய்கின்றது. இவை இரண்டும் ஒரே சமயத்தில் ஏற்படுவதால் முகத்தில் தோன்றும் இறுக்க வடிவம் புன்னகையாக மாறுகிறது.

புன்னகையைத் தோற்றுவிக்கும் இந்த தசைகளைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். சைகோ மேடிக் மேஜர் தசை எப்போதும் உணர்வு ரீதியான கட்டுப்பாட்டுக்குள் இயங்கக்கூடியது. இயற்கையாகவோ, செயற்கையாகவோ சிரிக்க இந்தத் தசைதான் காரணம். அதாவது, பொய்யாகச் சிரிக்கவும், பொய்யான சந்தோஷத்தை வெளிக்காட்டவும், இது உதவுகிறது.

அதுவே கண்களை பின்னுக்கு இழுக்கும் ஆர்பிகுளாரிஸ் ஆகுல் தசை, தன்னிச்சையான செயல்பாட்டில் இயங்கக்கூடியது. உண்மையான உணர்வுகளையும், உண்மையான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி புன்னகைக்க இதுவே உதவுகிறது. பொய்யான புன்னகையின்போது கண்கள் சுறுங்காது. ஆக ஒருவர் உண்மையாக புன்னகைக்கிறாரா, பொய்யாக புன்னகைக்கிறாரா என்பதை அறிய புன்னகைக்கும்போது அவரது கண்களின் பின்னே இருக்கும் சுருக்கங்களையும், சுருக்கக் கோடுகளையும் வைத்து கண்டுகொள்ளலாம்.

இதற்கு நல்ல உதாரணம், புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கையில் படத்துல சிரிச்சமாதிரி இருக்கவேண்டும் என்பதற்காக கேமிரா மேன்கள், “சீஸ்-chees’’ என்று உச்சரிக்கச் சொல்வார்கள். ப்ளாஷ் அடிக்கப்படும் விநாடிகளில் சீஸ் சொல்லும்போது, சைகோ மேடிக் மேஜர் தசை இழுக்கப்படும், முகத்தில் ஒரு புன்னகை படரும். ஆனால் அது நிஜமான புன்னகையாக இருக்காது.

இயற்கையான புன்னகை கண்களைச் சுற்றி சுருக்கமான கோடுகளை உருவாக்கும், அதுவே பொய்யான புன்னகை வாயைச் சுற்றி மட்டுமே சுருக்கக் கோடுகளை உருவாக்கும். உண்மையான புன்னகைக்கும், பொய்யான புன்னகைக்குமான வேறுபாட்டை முகத்தின் செயல்பாடு குறியீடு அமைப்பைக் (FACS) கொண்டு வெகு சுலபமாக கண்டறிந்துவிட முடியும்.

மனித முகத்தில உண்மையான புன்னகையை உருவாக்குவது உணர்வற்ற மூளை. அது தன்னிச்சையாகச் செயல்படக்கூடியது. ஒரு பளீர்சந்தோஷத்தை உணரும்போது, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்கள் வழியே தகவல்கள் பரிமாறப்பட்டு வாயின் தசைகள் இயங்கி, கன்னங்கள் மேலெழுந்து, கண்கள் சுருங்கி, புருவங்கள் உயர்ந்து நிற்கும். அந்த கணத்தில் விலை மதிப்பில்லாத உண்மையான புன்னகை ஒரு மின்னல் கீற்றைப் போல் முகத்தில் தோன்றிப் படரும்.

உடை வழி - டர்பன் (தலைப்பாகை)

பொதுவாக டர்பனின் நீளம் சுமார் ஐந்து மீட்டர்கள் இருக்கும். இந்தியாவைப் போலவே உலக நாடுகளிலும் டர்பன் ஒரு அடையாளமாக அணியப்பட்டுவருகிறது. பல நாடுகளிலும் டர்பனை மக்கள் அத்தியாவசிய ஆடை போல் அணிகிறார்கள். ஆசிய நாடுகளில் மாத்திரம் டர்பன் அணியுமுன் தலைமுடியை இறுக்கக் கட்டிக்கொண்டு (அதற்கு பவுண்டேஷன் என்று பெயர்)அதன் பின் டர்பனை அணிகிறார்கள்.

மேலை நாடுகளில் பெண்களும் டர்பனை அணிபவர்களாக இருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டில் பெண்கள் டர்பன் அணியும் வழக்கம் (சுதந்திரம்) குறைந்திருந்தபோதும் தற்போதைய ஃபேஷன் உலகம் பெண்களுக்கு மீண்டும் டர்பன் அணியும் பழக்கதை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
உலக நாடுகளில் டர்பன் அணியும் பழக்கங்கள் பல விதங்களிலிருக்கிறது.

ஆப்பிரிக்கா :  ஆப்பிரிக்காவில் டர்பனை முஸ்லிம் மக்களும், கிறிஸ்துவப் பாதிரியார்களுமே அதிகம் அணிகிறார்கள். முஸ்லிம் மக்களுக்கு அப்பழக்கம் அவர்களை அரசாண்ட சுல்தான்களிடமிருந்து வந்திருக்கிறது. பாதிரியார்களுக்கு கிறிஸ்துவம் தோன்றிய நாட்களிலிருந்து வழிவழியாக வந்திருக்கிறது.
அரேபியா: அரேபிய நாடுகளில் டர்பன் அணியாத மக்களைப் பார்ப்பது அபூர்வம். தலையோடு கால் உடையை அணியக்கூடியவர்கள்தான் அரேபிய மக்கள். அதற்கு அவர்கள் வாழும் நிலப்பகுதி ஒரு காரணமாக இருந்தாலும், அந்த உடையை அவர்கள் தங்களின் இன அடையாளம் வெளிப்படும் விதமாகவே அணிகிறார்கள்.

அணியும் முறையிலும், டர்பனின் வடிவ முறையிலும் அரேபியாவிலும் மாறுதல்கள் இருக்கின்றன. Hijazi டர்பனுக்கும் Mecca- Madinah டர்பனுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. பொதுவாக மதம் சார்ந்த விசேஷங்களின்போது அரேபியர்கள் மஞ்சள்நிற டர்பனை அணிவார்கள். அதில் வேதமொழிகள் பதியப்பட்டிருக்கும். அரேபிய டர்பன்கள் எடையற்றதாக மெல்லிய துணியால் நெய்யப்பட்டதாக இருக்கும். ஐந்து மீட்டர் துணியையும் மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஓமன் நகரத்தில் மட்டும் பல வண்ணங்களிலான டர்பனை (Masar) அணிகிறார்கள்

ஆப்கானிஸ்தான்: டர்பனை ஒரு தேசிய உடையாகக்கொண்ட ஒரே நாடு ஆப்கானிஸ்தான்.  முழுக்க முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானில் டர்பன் அணிய வேண்டியது கட்டாயம். டர்பன் அணியாதவர்கள் தேசத்துரோகிகளாகவே கருதப்படுவார்கள்.

வீட்டிற்கு வந்ததும் கழற்ற வேண்டும் என்பதற்காகவோ என்னவோ ஆப்கானியர்கள் டர்பனை லூசாக அணிந்து கொள்வார்கள். இறுக்கமாக அணியாத காரணத்தால் அவர்கள் டர்பன் எப்போதும் சரிந்த நிலையிலேயே இருக்கும். ஆப்கானியர்கள் பளிர் நிறங்களில் டர்பன் அணிவார்கள். அது அடுத்தவரைக் கவனிக்க வைப்பதாகயிருக்கும்.

பங்களாதேஷ் : பங்களாதேஷில் டர்பனுக்கு Fagri என்று பெயர். அது இந்தியாவின் Pagri என்ற பெயரிலிருந்து மாறியது. இங்கும் முஸ்லிம் மக்களால் அதிகம் வெள்ளை நிறத்தில் அணியப்பட்டுவருகிறது.சூஃபி அறிஞர்கள் பச்சை நிற டர்பனை அணிந்ததால், பல நாடுகளிலும் அறிஞர்களும், வல்லுநர்களும் பச்சை நிற டர்பனையே அணிகிறார்கள்.

- தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு

X