மனதிடம்தான் வெற்றிக்கான முதல் தேவை!

12/12/2019 4:55:04 PM

மனதிடம்தான் வெற்றிக்கான முதல் தேவை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர்-23

புதிதாய்ப் பிறப்போம்!சரித்திரம் படைப்போம்!!

நம்மில் பல பேர், ‘வாழ்க்கையில் எனக்கு வெற்றி இல்லை’, ‘வியாபாரத்தில் எனக்கு முன்னேற்றமில்லை’, ‘உத்தியோகத்தில் எனக்கு உயர்வில்லை’, ‘பிள்ளைகளால் எனக்கு பிரயோஜனமில்லை’, ‘நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை’ என்றெல்லாம் குறைபட்டுக்கொள்கிறார்கள் அல்லவா? இவை எல்லாவற்றிலும் ஒரு வார்த்தையைத் தொடர்ந்து சொல்கிறார்கள். அது என்ன வார்த்தை? ‘இல்லை… இல்லை’ என்பதுதான். இதை நீங்கள் முதலில் மாற்ற வேண்டும்.

தோல்வி உங்கள் வாழ்க்கையில் இல்லை, உங்கள் செயலில் இல்லை, உங்கள் மனதில்தான் இருக்கிறது. இந்த உலகத்தில் எல்லோரும் உங்களைப்போல் தோல்வியையே நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்றால், உலகில் சாதனையாளர்களே இருந்திருக்க முடியாது. நாம் எந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறோமோ அந்த வார்த்தை நம் மனதில் பதிந்துவிடுகிறது. ஆகவே, எப்போதுமே நேர்மறை வார்த்தைகளை நாம் பயன்படுத்த வேண்டும்.

எப்போதும் நீங்கள் தோல்வி என்ற வார்த்தையைத் தவிர்த்துவிடுங்கள். வீழ்ச்சி என்ற வார்த்தையை வீழ்த்திவிடுங்கள். முடியாது என்ற வார்த்தையை முடித்துவிடுங்கள். நடக்காது என்ற வார்த்தையை நகர்த்திவிடுங்கள். இல்லை என்ற வார்த்தையை தள்ளிவிடுங்கள். வேண்டாம் என்ற வார்த்தையை வென்றுவிடுங்கள்.

ஆனால், இந்த வேண்டாம் என்ற வார்த்தையை பெயராகவே சூட்டியபோதும் எதிர்மறை எண்ணத்தை விரட்டி அடித்து வென்று சாதித்திருக்கிறார் ஒரு மாணவி. அவரைப்பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால், மூன்றாவது பிறக்கும் பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் சூட்டுவார்களாம்.

அப்படி பெயர் சூட்டினால் தான் அவர்களுக்கு நான்காவதாக ஆண் குழந்தை பிறக்கும் என்பது அந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மற்றும் கௌரி என்ற தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண்குழந்தை உள்ள நிலையில் மூன்றாவதாகப் பிறந்த பெண்குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயரிட்டுள்ளனர். இந்த குழந்தை அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பின் நல்ல மதிப்பெண் பெற்றதால் சென்னை குன்றத்தூரிலுள்ள சி.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது.

பொறியியல் கல்லூரியில் அன்றைக்கு முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த கல்லூரி முதல்வர் ஒரு மாணவியிடம் ‘‘உன் பெயர் என்ன, எந்த துறையைத் தேர்ந்தெடுத்துள்ளாய்?’’ என்று கேட்டார். அதற்குப் பதில் சொன்ன மாணவி, ‘‘எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் டிபார்ட்மென்ட்’’ என்று தன் துறையின் பெயரை சத்தமாகச் சொல்லிவிட்டு, தன் பெயரை மட்டும் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டார்.

அந்த மாணவி சொன்னது காதில் சரியாக விழாததால், கல்லூரி முதல்வர் மறுபடியும் பெயரைக் கேட்க, அதற்கு அந்த மாணவி மறுபடியும் அதே தொனியிலேயே தன் பெயரைச் சொல்ல இந்த முறை அந்த மாணவியின் அருகிலிருந்த மற்ற மாணவிகள் ‘வேண்டாம்’ என்று ஒரே குரலில் சத்தமாகச் சொல்கிறார்கள். ‘‘என்னது ‘வேண்டாம்’ என்று ஒரு பெயரா?’’ என்று வியப்போடு கேட்கிறார் கல்லூரி முதல்வர்.

அன்றைக்கு அந்தக் கல்லூரியே அந்த மாணவியின் பெயரைக் கேட்டு அதிர்ந்துபோய்விட்டது. ஆனால், வேண்டாம் மட்டும் அமைதியாக நின்றுகொண்டிருந்தார். அந்த இளம்பெண்ணின் முகத்தில் மிகுந்த கவலை, கண்ணோரங்களில் நீர்த்துளிகள் உதிர்ந்துவிடட்டுமா? என எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன.

அவருடைய பெயரை முதல் தடவை கேட்கிற ஒவ்வொருவரும் இப்படித்தான் வியப்பாகப் பார்ப்பார்கள் என்பதை தெரிந்திருந்தாலும், அந்த அனுபவத்தை ஒவ்வொரு தடவை கடக்கின்றபோதும் மிகவும் மனம் தடுமாறிப் போவார். அக்காக்களுக்கு ‘ஷன்மதி’,
‘யுவராணி’, தங்கச்சிக்கு ‘சரண்யா’ என்று அழகாகப் பெயர் வைத்த அவருடைய அப்பா அம்மா இவருக்கு மட்டும் இப்படி பெயர் வைத்ததால் பள்ளி, கல்லூரி என வெளியே போகின்ற இடங்களிலெல்லாம் எங்கு பார்த்தாலும் இவருடைய பெயரால் கேலி, கிண்டலை சந்தித்துக்கொண்டே யிருந்தார்.ஒரு நாள் ரொம்பவும் வருத்தப்பட்டு, அவருடைய அப்பாவிடம் போய் சண்டை போட்டுள்ளார்.

ஆனால், அவருடைய அப்பா, ‘‘தப்புப் பண்ணிட்டேன்மா’’ என்று சொல்லி கண் கலங்கியுள்ளார். பெயர் விஷயத்தை தவிர அவருடைய அப்பாவைப் பற்றி சொல்வதற்கு நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நான்கு பெண் குழந்தைகளையும் வளர்ப்பதற்கு அவருடைய அப்பா மிகவும் சிரமப்பட்டார். தறி நெய்கிற வேலைதான் பார்த்துள்ளார். இவர்களை வளர்ப்பதற்கு, படிக்கவைப்பதற்கு தறி நெய்து வரும் சொர்ப்ப வருமானம் போதவில்லை. விவசாயமும் செய்ய ஆரம்பித்து நான்கு மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்தார்.

ஊரில் எல்லோரும் வேண்டாமின் அப்பாவிடம், ‘பெண்களை எதுக்கு படிக்க வைக்கிற? அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற வீட்டுக்குப் போயிட்டா அவங்களுக்குத்தானே சம்பாதிச்சுக் கொடுப்பாங்க’ என்று சொல்லும்போது அதை கேட்டு அம்மா கௌரி, ‘அவங்க சொல்றதெல்லாம் நிஜந்தானே!’ என்று எண்ணி மனசு உடைந்து வருந்துவார். ஆனால், வேண்டாமின் அப்பா மட்டும் அதையெல்லாம் காதில் வாங்குவது கிடையாது. கடன் வாங்கியாவது நான்கு பெண் பிள்ளை களையும் நன்றாகப் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.

அப்பாவின் விடாமுயற்சியாலும் அவர் தந்த ஊக்கத்தாலும் வேண்டாம் எப்படியாவது நன்றாகப் படித்து சாதிக்க வேண்டும் என்பதே இலக்காகக் கொண்டிருந்தார். தன்னுடைய பெயரைப் பற்றி ஒருபோதும் வருந்தப்போவதில்லை என்று முடிவு செய்தார். மேலும் பொறியியல் படிப்பில் சிறந்து விளங்கி ப்ராஜக்டுக்காக தன்னுடைய துறை ரீதியான கண்டுபிடிப்பான தானியங்கிக் கதவு ஒன்றை உருவாக்கினார்.

இந்தச் சூழ்நிலையில்தான் கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான வளாக நேர்காணல் ஒன்றும் நடைபெற்றது. ஜப்பான் நிறுவனம் ஒன்று அந்த நேர்காணலில் பங்கு பெற்றது. அன்றைய தினம்தான் வேண்டாமின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத தினம். தன்னால் உருவாக்கப்பட்டத் தானியங்கி கதவை ஜப்பான் நிறுவனத்திடம் அறிமுகம் செய்தார் மாணவி வேண்டாம். இதனையடுத்து அந்த ஜப்பான் நிறுவனம் ஆச்சரியத்தால் ‘அருமையான கண்டுபிடிப்பு’ என பாராட்டி இந்த மாணவி எங்கள் நிறுவனத்துக்கு வேண்டும் என சொல்லி தேர்ந்தெடுத்து ஆண்டுக்கு 22 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு எடுத்தது.

தன்னுடைய பெயரைச் சொல்லும்போதெல்லாம் சிரித்தவர்களைப் பார்த்து ஒவ்வொரு முறையும் மனம் நொந்துபோன வேண்டாமின் வாழ்வில் அந்த வளாக நேர்காணலில் கிடைத்த வேலையும், பாராட்டும் மிகுந்த மகிழ்ச்சியும், ஊக்கத்தையும் தந்தது. அதன் பிறகு மிகச்சிறந்த வேலைவாய்ப்பைப்பெற்ற வேண்டாம் கல்லூரி முழுவதும் பிரபலம் ஆனார்.

அதுமட்டுமல்ல பத்திரிகைகளிலும் வேண்டாம் பற்றிய செய்திகள் வெளிவந்தன. செய்தியை பார்த்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டாமை நேரில் அழைத்து வாழ்த்தி ‘பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்’ என்ற திட்டத்திற்கு தூதுவராக நியமித்து கௌரவப்படுத்தினார்.

வேண்டாம் என்ற பெயரால் வேதனை அடைந்தபோதும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியின் மூலமாக வென்று எல்லோரும் தன்னை வேண்டும் என்று எண்ணும்படி செய்து சாதித்துள்ளார். அது மட்டுமல்ல பெண் குழந்தைகளுக்கு கல்வியே மிகப்பெரிய ஆயுதம் என்பதையும் உணர்த்தியுள்ளார். என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்ற மனதிடம்தான் இன்றைய உலகில் வெற்றிக்கான முதல் தேவை. அதை மாணவி வேண்டாமை போன்று இளவயதிலே வளர்த்துக்கொண்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க அது உடனிருக்கும், அனுபவத்தால் இன்னும் மெருகேறும்!

(புதுவாழ்வு மலரும்)

X