அன்று: பத்துக்கு பத்து இடத்தில் அழகு நிலையம் தொடங்கியவர், இன்று: படகு இல்லத்தின் உரிமையாளர்

1/9/2020 4:22:28 PM

அன்று: பத்துக்கு பத்து இடத்தில் அழகு நிலையம் தொடங்கியவர், இன்று: படகு இல்லத்தின் உரிமையாளர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

* வெற்றிக்கதை

எந்த ஒரு செயலைச் செய்தாலும் காலமும் இடமும் அறிந்து செய்தால் அச்செயலில் நிச்சயம் வெற்றி பெறலாம். எது நம்மால் முடியும் என்று ஆராய்ந்து செய்யவேண்டும். நம் வலிமை எது என்பதைப் புரிந்துகொண்டு, அதனை நன்றாக ஆராய்ந்து, அதில் கருத்து மற்றும் மன வலிமையைச் செலுத்தி அந்தக் காரியத்தைச் செய்தால் வெற்றி நிச்சயம் என்கிறார் வள்ளுவர். இது தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. அதுபோல ஒரு செயலில் வெற்றி பெற்றுவிட்டோமானால் இன்னொன்றில் எளிதாக வெற்றி பெறலாம். என்ன காரணமென்றால், ஒரு செயலை நேர்த்தியாகச் செய்தால் மற்றவையும் இயல்பாகச் சாத்தியப்படத் தொடங்கிவிடும்.

ஒரு சராசரி பெண்ணாக வீட்டிற்குள்ளேயே முடங்கிவிடாமல் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற முயற்சியால் வீட்டில் கார் பார்க்கிங் இடத்தில் சிறியதாக ஓர் அழகு நிலையம் ஆரம்பித்து திறம்பட செயல்படுத்தியதால் இன்றைக்கு பல கிளை நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். அடுத்தக்கட்ட முயற்சியாக சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் படகு இல்லம் என ஒரு தொழில்முனைவோராக வெற்றி பெற்ற அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சில்பிரீஸ் சலூன் அண்ட் ஸ்பா (ChillBreeze Salon & Spa) மற்றும் மந்த்ரா ஹவுஸ்போட் (Mantra Houseboat) நிறுவனங்களின் உரிமையாளர் அனு ரமேஷ்… ‘‘சென்னை ஓட்டேரியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா சிறியதாக இண்டஸ்ரியல் நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பது விற்பது என தொழில் செய்துகொண்டிருந்தார்.

அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில்படித்துவிட்டு, அடுத்து  சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.காம் படித்து முடித்தேன். வேலையைவிட சொந்த தொழில் செய்பவருக்குத்தான் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது பெற்றவர்களின் ஆசைபோலும், சொந்தமாக சிறு கம்பெனி நடத்திக்கொண்டிருந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர். என் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் அனுசரணையான கணவர். நான் படித்திருந்தாலும், வெளியில் என்னை வேலைக்கு அனுப்புவதில் யாருக்கும் விருப்பமில்லை. பொதுவாக ஓர் ஆண் ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்தால், மற்றொரு வேலையில் கவனத்தைச் செலுத்தமாட்டார்.

ஆனால், ஒரு பெண் ஒரு வேலையிலிருந்தாலும் அடுத்து என்னென்ன செய்யலாம் என எல்லா வகையிலும் கவனத்தைச் செலுத்திக்கொண்டேயிருப்பார். உதாரணமாக, ஒரு பெண் வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கும்போதே ஆயிரம் விஷயங்களை யோசிப்பார். அப்படித்தான், நானும் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அழகுக்கலை பயிற்சி பற்றிய ஓர் அறிமுகம் கிடைத்தது’’ என்று தான் தொழில்துறையில் கால்பதித்ததை நினைவுகூர்ந்தார் அனு.‘‘இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பியூட்டீஷியன் கோர்ஸ் என்பதெல்லாம் பெரிய அளவில் கிடையாது. ஆனால், எதிர்காலத்தில் இந்தத் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும் என்று எனக்கு தோன்றியதால் சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்டிடியூட்டில் அழகுக் கலை பயிற்சியில் சேர்ந்து படித்தேன்.

படித்து முடித்ததும், வீட்டிற்கு அருகிலுள்ள அக்கம்பக்கத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு முக அலங்காரம் மற்றும் சிகை அலங்காரம் செய்துவந்தேன். அது தரமானதாகவும், அவர்களுக்குப் பிடித்தமாதிரி இருந்ததாலும் அவர்கள் பலருக்கும் சொல்ல ஆரம்பித்தனர். இதனையடுத்து அவர்களது அக்கம்பக்கத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களும் வரத்தொடங்கினர். இன்றைக்கு திருமணத்திற்கென்றே அலங்காரம் மற்றும் ஆடைகள் தைப்பது போல் அன்றைக்கு பெரிய அளவில் கிடையாது. அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. அதனால் நாம் ஏன் ஓர் அழகு நிலையத்தைத் தொடங்கக்கூடாது என வீட்டின் கார் பார்க்கிங் இடத்தில் பத்துக்கு பத்து சதுர அடி அளவில் ஓர் அழகு நிலையத்தைத் தொடங்கினேன்.

அந்த நேரத்தில் பல பிரபல கார்ப்பரேட் அழகு நிலையங்களும் வரத்தொடங்கின. எனது அழகு நிலையமும் வளர்ச்சியடைந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக வரவேண்டுமென்றால், அதற்கு பிரதானமான ஓர் இடத்தை தேர்வு செய்யவேண்டுமல்லவா, அதனால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மவுண்ட்ரோட்டிலுள்ள ஸ்பென்சர் பிளாசாவில் முதல் அழகு நிலையத்தைத் தொடங்கினேன். இரண்டாவதாக அடையாறு பகுதியில் ஓர் அழகு நிலையத்தைத் தொடங்கினேன். பிரபலமானதையடுத்து, ஃப்ரான்சைஸி கேட்டு வரத்தொடங்கினர். சென்னை மட்டுமல்லாது மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் ஃப்ரான்சைஸி கொடுக்கத் தொடங்கினேன்.

இன்றைக்கு சில்பிரீஸ் என்ற பெயரில் ஃப்ரான்சைஸியாக பன்னிரண்டு அழகு நிலையங்களும், சொந்தமாக இரண்டு அழகு நிலையங்களும் என பதினான்கு அழகு நிலையங்கள் இயங்கிவருகின்றன. நம்மைப்போல் பிறரும் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் ஃப்ரான்சைஸி கொடுத்து வருகிறேன். அழகுக்கலை சார்ந்து மேலும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் அமெரிக்க பல்கலையில் சேர்ந்து படித்து 2019ஆம் ஆண்டு அழகுக் கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்’’ என்ற அனு மேலும் ஒரு தொழிலில் தடம் பதிப்பதற்கான சூழ்நிலைகளை விவரிக்கலானார். ‘‘புதுச்சேரியிலுள்ள அன்னை ஆஸ்ரமத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்படி போகும்போது ஒருநாள் கடலூருக்கு செல்லவேண்டிய வேலையிருந்தது.

அப்போது சுண்ணாம்பாற்றைப் பார்த்தேன். அங்கு சின்ன சின்ன படகுகள் நிறைய ஓடிக்கொண்டிருந்தன. அதனையொட்டி பாரடைஸ் பீச்சும் உள்ளது. இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளிமாநிலத்தவர்களும் விடுமுறையைக் கொண்டாடுவது வழக்கம். அதனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. படகு சவாரிக்கு வருகின்றவர்களை இடமில்லை என துரத்தும் அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம். சில நேரங்களில் படகை நிறுத்தியாச்சு, இனிமேல் ஓட்ட முடியாது என சொல்லும் அளவுக்கு இருந்தது. அதைப் பார்த்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

பொதுவாக ஒரு தொழில் நடத்துவதற்கு விளம்பரம் செய்து அழைப்போம், ஆனால் இங்கு மகிழ்ச்சியைக் கொண்டாட வரும் மக்களை துரத்துகிறார்களே, அப்படியானால் நாம் ஏன் இந்த இடத்தில் ஒரு ஹவுஸ்போட் அமைத்து தொழிலைத் தொடங்கக்கூடாது என தோன்றியது. அப்படி யோசித்ததின் அடையாளமாக உதயமானதுதான் ‘மந்த்ரா ஹவுஸ்போட்’(Mantra House boat) சர்வீஸ்’’ என்கிறார் அனு. மேலும் தொடர்ந்த அவர், ‘‘நம்முடைய தமிழ்நாட்டிலும் முட்டுக்காட்டில் நல்ல தண்ணீர் உள்ளது. ஆனால், பொழுதுபோக்க வருகின்றவர்கள் குறைவுதான். காரணம், பெரிய அளவில் போட் வசதிகள் செய்யப்படவில்லை. முட்டுக்காட்டில் ஒரு ஹவுஸ்போட்டுக்கு அனுமதி வாங்க நான் பெரிய அளவில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

தினமும் சென்று மினிஸ்டரப் பார்க்கணும், சிஎம்மைப் பார்க்கணும், செக்ரட்டரிய பார்க்கணும். எல்லோரையும் சந்தித்து தொழில் குறித்து விளக்கிச் சொல்லவேண்டும். தமிழ்நாடு டூரிஸம் அனுமதி கொடுத்துட்டாங்க, ஆனாலும் செக்ரட்டரிக்கிட்ட என்னோட ஃபைல் இன்னும் நிற்கிறது.புதுச்சேரியில் இந்த கஷ்டம் இல்லை. அதிக நேரம் காத்திருக்க வைக்கமாட்டார்கள். போனோமா, சி.எம்-ஐ பார்க்கணுமா, சி.எம். அப்பாயின்மென்ட் இல்லையென்றாலும் வெயிட் பண்ணினால் போய்ப் பார்க்கலாம். டூரிஸம் மினிஸ்டரப் பார்க்கணுமா அதே மாதிரிதான். அந்த வழியாகவே போனால் அவரையும் பார்க்கலாம். இந்த மாதிரி சுலபமான ஒரு அணுகுமுறை இருந்ததால், செக்கரட்டரியேட் சேர்மன்கிட்ட குறைந்த அளவு, அதிக அளவு, சிறிய அளவிலான நீர்த்தேக்கம் பற்றியெல்லாம் விளக்கினேன்.

சில நேரங்களில் தண்ணீரின் அளவு குறையும், அப்போது இந்த பெரிய போட் நிற்குமா என்பது போன்றவற்றையும் விளக்கினேன், அனுமதி கொடுத்தார்கள்’’ என்று தன் புதிய முயற்சியில் சந்திக்கும் கஷ்டங்களையும் வெளிப்படுத்தினார்.  ‘‘நாம் அங்கே ஒரு மூன்று கிலோ மீட்டர் தூரம்தான் படகு சவாரி செய்ய முடியும். அதிலேயே அதிக மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளுடன் ஆரம்பித்தோம். புதுச்சேரியில் பாரடைஸ் பீச் என்ற ஓர் இடம் உண்டு அங்கேதான் எனக்கு போட் கட்டுவதற்கான இடம் கொடுத்தார்கள். அங்கேயே ஒரு கொட்டகை போட்டு, அன்னம் போன்ற வடிவில் போட் கட்டுவதற்கு 6 மாத காலம் ஆனது. ஏனெனில், முதல்தடவையாக நாம் பண்ணுகிறோம்.

கேரளாவில் எல்லா மெட்டீரியல்களும் இருக்கு, ஏற்கனவே படகு இல்லங்களை அவர்கள் அமைத்துள்ளார்கள். ஆனால், இங்கே அந்த வசதியில்லை, அதனால் கேரளாவிலிருந்து அந்த மூங்கில் தட்டி எல்லாம் கொண்டு வந்தேன். அதனால் ஆறு மாத காலம் ஆனது. அதுவே, இப்போதென்றால் மூன்று மாதங்களில் அமைத்துவிடலாம். மிகுந்த மெனக்கெடல்களுக்கு மத்தியில் படகு கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள் செகரட்டரியேட் சேர்மன் வந்து படகில் தங்கினார். முதல் நாள் பயணம் திருப்தியாக இருந்ததாகக் கூறினார். அதற்கடுத்து வெற்றிகரமாக இன்று வரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் நிறைய புக்கிங் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆலப்புழாவில் ஹவுஸ்போட் இருக்கு. ஆனால், இங்கு மட்டும்தான் கடற்கரையையொட்டி ஹவுஸ்போட் இருக்கிறது.

அதனால், நாம் தான் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும். நம்முடைய ஹவுஸ்போட்டைப் பொறுத்தவரையிலும் நூறு சதவிகிதம் கடலை ரசித்தவாறுதான் இருப்போம். ஹவுஸ்போட்டில் கீழே அறைகளும், மேலே ஒரு பெரிய ஹாலும் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிலே  ஈவென்ட் மேனேஜ்மென்ட் வைத்து நடத்தலாம். உதாரணத்திற்கு, நிறைய குழந்தைகளை அழைத்து வந்திருந்தால் பிறந்தநாள் கொண்டாட்டம், மெஜிஸியன்ஸ் கூட்டி வந்து பண்ணுவார்கள், நடன நிகழ்ச்சி நடத்துவார்கள். இதுமாதிரியான ஈவென்ட் எல்லாம் அவர்களே நடத்திக்கொள்வார்கள். ஒரு சாதாரண பெண்ணாக இருந்து விடாமல்  சிறந்த தொழில்முனைவோராக வேண்டும் என்பதில் முயற்சித்தேன், விடாமல் முயற்சித்தேன், இன்றைக்கு எனக்கு எல்லாமே வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது’’ என்று வெற்றிக்களிப்போடு பேசினார் தொழில்முனைவோர் அனு ரமேஷ்.

- தோ.திருத்துவராஜ்.

X