தடைகளை எதிர்கொள்பவர்களே வெற்றியாளர்கள்!

1/28/2020 2:48:22 PM

தடைகளை எதிர்கொள்பவர்களே வெற்றியாளர்கள்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

* இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர் 24

இளமைக்கு முதலிடம் அளிக்காத அறிஞர்களே கிடையாது. இனிமையான பருவம் இளமைக் காலம்தான். அரிஸ்டாட்டில் இளமையைப் பற்றி கூறும்போது “மகிழ்ச்சி நிரம்பியது, துன்பத்தோடு யாதொரு தொடர்பும் கொள்ளாதது” என்கிறார். இளமையைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் பிறகு எவ்வளவுதான் முயன்றாலும் அது திரும்பி வராது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயலாற்றினால் சிறப்பளிக்கும், வாழ்வும் வளமாக அமையும்.

வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளும், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பும், கொட்டிய பாலும் திரும்பப் பெற முடியாது என்பது போலவே, இளமையும் மீண்டும் பெற முடியாது. இளமை ஒரு பறவை, அதை விட்டுவிட்டால் மீண்டும் பிடிக்கமுடியாது. கடமை எவ்வளவு முக்கியமானதோ, அதேபோன்று முக்கியமானது இளமையும். இளமையில் நம்முடைய எண்ணங்கள் பசுமையாக இருக்கும், பசுமையான நேரத்தில்தான் நம்முடைய பணிகளைச் சிறப்பாக ஆற்றமுடியும். இளமைக் காலத்தில் கஷ்டப்படாமல் இருந்தால் முதுமையில் வருந்த நேரிடும். இளமை நம்பிக்கைக்குரிய பருவம். இளமையை உதறிவிட்டால், அதுவும் நம்மை உதறிவிடும்.

நிலம் எவ்வளவுதான் வளமுடையதாக இருந்தாலும், அதனை உழுது பயிரிடாமல் தரிசாக விட்டுவிட்டால், நிலத்தால் என்ன பயன்? அதேபோல்தான் இளமைக் காலமும். இளமையில் இருக்கும் கெட்ட பழக்கங்களை ஒழித்தால் மட்டுமே, நம்மிடமுள்ள நல்லவைகளைத் தேர்ந்தெடுக்க முடியும். இளமையில் எதுவும் பசுமரத்தில் அடிக்கும் ஆணிபோல் பதிந்துவிடுகிறது. இளமைப் பருவத்தில் ஒருவர் தன்னுடைய வாழ்வின் இலக்கைத் தீர்மானித்தால், அது அவருடைய ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. அப்படி இலக்கைத் தீர்மானித்த பிறகு அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் தோல்விகள் தடைகளாக வரும்.

ஆனால், அந்தத் தடைகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்பவர்களே வெற்றி பெறுவார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது ஒரு கதை.ஊருக்கு வெளியே ஆசிரமம் ஒன்றை அமைத்து குரு ஒருவர் வாழ்ந்துவந்தார். அவரைச் சந்தித்த இளைஞர் ஒருவர், ‘‘இத்தனை பெரிய நிலைக்கு உயர்ந்த மகானாக இருக்கிறீர்கள், உங்களுடைய குரு எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார். அவர் யார் என்று நான் தெரிந்துகொள்ளலாமா?’’ என்று கேட்டார். குரு சிரித்தபடி, ‘‘என் குருவைத் தெரிந்து உனக்கு என்ன ஆகப்போகிறது’’ என்றார். அந்த இளைஞர், ‘‘தாங்களே இவ்வளவு சக்தியுள்ளவராக இருக்கும்போது உங்கள் குரு இன்னும் சிறந்தவராக இருப்பார் அல்லவா? அவரிடம் ஞானம் பெற்றால் என் வாழ்வு உங்களைப் போன்றே உயருமல்லவா?’’ என்றார்.

‘‘நான் குருவைக் காட்டுவேன். ஆனால், நீ நம்பமாட்டாய், நம்பினால் சொல்கிறேன்’’ என்றபடி எதிரே மரத்தடியில் படுத்திருந்த ஒரு நாயைக் காட்டி “அதோ அவரே என் குரு”என்றார் துறவி. இளைஞன் திகைத்து நின்றார். இளைஞரைப் பார்த்து குரு சொன்னார், ‘‘ஞானம் தேடி நான் அலைந்தபோது இந்த நாயை ஒரு நாள் கண்டேன். அது பக்கத்திலுள்ள குளத்தில் நீரைப் பருக ஓடியது. ஆனால், நீருக்கு அருகே போனதும் குரைத்துவிட்டு திரும்ப ஓடிவந்துவிட்டது. பயந்தது, தயங்கியது. மீண்டும் ஓடியது, குரைத்துவிட்டு திரும்பிவந்தது. நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். தண்ணீரிலுள்ள தனது நிழலைக் கண்டே குரைக்கிறது என்று எனக்குப் புரிந்தது.

நாலைந்து முறை பயந்து திரும்பிய நாய் துணிந்து ஒரு முறை தண்ணீரைக் குடித்தது, நிமிர்ந்து பார்த்தது. பிறகு நிழலில் தெரிந்த நாய் தன்னை ஏதும் செய்யவில்லை என்றதும் நிம்மதியாக நீரைக் குடித்தது. இந்தச் செயல் என்னுள் ஒரு பொறியை ஏற்படுத்தியது. நமக்கு நாம் தான் தடை, நம்முடைய மனம்தான் நமது வெற்றிக்கு எதிரியாக இருக்கிறது. நமது முன்னேற்றத்திற்கு நாம் தான் தடையாக இருக்கிறோம். இப்படி இல்லாத ஒன்றை… அதாவது, தன் நிழலைத் தனக்குத் தடையாகக் கருதிய நாயைப் போல, இல்லாத ஒன்றை நமது மனமே தடையாக நினைக்கின்றது. இந்த உண்மையை எனக்கு உணர்த்திய குருவே இந்த நாய்தான்! முடிவில் அந்த நாய், பயம் தயக்கத்தைத் தள்ளிவிட்டு, ஆவது ஆகட்டும் என்று துணிவோடு நீரைக் குடித்தது. தாகம் தீர்ந்தது.

இப்படி மனம் சார்ந்த தடையைப் புறக்கணித்து நாம் துணிச்சலுடன் காரியத்தில் குதித்துவிட்டதால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் எனக்குள் பிறந்தது’’ என்றார் குரு. அதுபோலத்தான் தன் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி என்னும் தடையை இளம் வயதிலே துணிவோடு எதிர்கொண்டு வெற்றி பெற்ற சாதனைப்பெண் ஒருவரை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.சென்னையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தமீம் அன்சாரியா. தந்தை முகம்மது அப்துல்லா பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் வியாபாரம் செய்து வந்தார். சைதாப்பேட்டை மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற தமீம், படிப்பில் கெட்டிக்காரப் பெண்ணாகத் திகழ்ந்தார். 10ஆம் வகுப்பில் சென்னை மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்தார்.

+2-வில் முதல் பாடப்பிரிவை தேர்வு செய்த தமீம், குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு படிப்பில் அக்கறை செலுத்தி பள்ளிப் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் பட்டம் பெற்றார். பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பைக் கல்வி உதவித்தொகை கொண்டும் படித்து பெற்றோருக்கு எந்த சிரமமும் அளிக்கவில்லை. பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்டு ஏராளமான பரிசுகளையும் பெற்றார். பொறியியல் பட்டம் பெற்ற பின்பு கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் (கேம்பஸ் இண்டர்வியூ) சி.டி.எஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

ஆனால், லட்சங்கள் முக்கியமல்ல, லட்சியம்தான் முக்கியம் என்று உயர்ந்த இலக்கைத் தீர்மானித்தார். ஐந்தாம் வகுப்பு படித்தபோதே தமீமின் தந்தை ஒவ்வொரு வருடமும் யூ.பி.எஸ்.சி தேர்வில் வென்றவர்கள் பற்றி வெளியாகும் செய்தியை தமீமுக்கு படித்துக்காட்டி ஊக்கப்படுத்துவார். இது அவருடைய மனதில் சிறுவயதிலேயே ஆழமாகப் பதிந்தது. அதனால்தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பதைத் தன் வாழ்வில் ஓர் இலக்காகக் கொண்டிருந்தார். 2011-ல் யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதி தனது முதல் முயற்சியிலேயே நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வியடைந்தார்.

இரண்டாவது முயற்சியில் ஐ.சி.ஏ.எஸ் என்னும் இந்தியன் சிவில் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ் கிடைத்தது. இருந்தபோதும் ஐ.ஏ.எஸ் கனவை அடைய மீண்டும் மூன்றாவது முறையாக முயற்சியெடுத்து அதிலும் நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வியடைந்தார். குடும்பம் இருக்கும் சூழலில் ஐ.ஏ.எஸ் கனவு தேவையற்றது என உறவினர்களும், நண்பர்களும் விமர்சனம் செய்தார்கள். ஆனாலும் தமீம் அன்சாரியா மனம் தளரவில்லை. தனது இலக்கை அடைய விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நான்காவது முயற்சியில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார்.  

பொறியியல் படித்த மாணவர்களுக்கு ஆப்டிடியூட், திட்ட அறிக்கை தயாரிப்பது, குழு விவாதத்தில் பேசுவது, நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டுவது போன்றவை படிக்கும்போதே பாடமாக இருப்பதால், பொறியியல் மாணவர்கள் யூ.பி.எஸ்.சி தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் என்கிறார் தமீம். ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து, மூன்று முறை ஐ.ஏ.எஸ் தேர்வில் தோல்வியடைந்து நான்காவது முறை வெற்றி பெற்ற தமீம் அன்சாரியா முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணம்.இளமையில் தன்னம்பிக்கை இருந்தால் தமீம் அன்சாரியா போல வாழ்வில் எந்தத் தடையையும் எளிதாகக் கடந்து இலக்கை அடைந்து வெல்ல முடியும் என்பதில் ஐயமில்லை.

இந்தக் கட்டுரையைப் படித்த வுடன் என்ன செய்யப்போகிறீர்கள். செயல்படப்போகிறீர்களா? நம்மால் முடியுமா? என்று மீண்டும் சிந்திக்கப் போகிறீர்களா? நீங்கள் எடுக்கப்போகும் நல்ல முடிவில்தான் உங்கள் வெற்றியும் அடங்கியிருக்கிறது. வாழ்க்கையில் எப்போதும் வெற்றியேதான் நமக்கு வேண்டுமென்றால் உடனே செயல்படத் தொடங்குங்கள். அப்படி செயல்படுபவர்களைத்தான் வெற்றியும் தேடிக்கொண்டிருக்கிறது.

(புதுவாழ்வு மலரும்)
பேராசிரியர் முனைவர் அ.முகமது அப்துல்காதர்

X