பொய்யர்களுக்கு புன்னகை ஒரு முகமூடி!

1/28/2020 2:49:43 PM

பொய்யர்களுக்கு புன்னகை ஒரு முகமூடி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நடை உடை  பாவனை-25

* உடல்மொழி

புன்னகையை முகத்தில் எந்த அளவுக்குப் படர விடுகிறோமோ அதை விட அதிகமாக அறுவடை செய்யலாம். அதுதான் புன்னகை செய்யும் மாயம். புன்னகை எந்த வடிவில் இருந்தாலும் அது முதல் பார்வைக்கு ஒரு பாதுகாப்பான மென்மையான உணர்வையே உண்டாக்கித் தரும். புன்னகை எப்போதும் ஒரு நட்பை, தோழமையை, பணிவை அடையாளப்படுத்தித் தரக்கூடியது. புன்னகைத்தபடி வரும் மனிதரை நாம் ஒருபோதும் எதிரியாக ஏற்றுக்கொள்வதே இல்லை.

புன்னகையால் வேறு என்ன செய்ய முடியும்….?
இந்தப் படத்தைப் பாருங்கள்

படத்தை (புத்தகத்தை)த் திருப்பாமல் அந்த நடிகர் யாரென்பதைக் கண்டறிய முடிகிறதா? படத்தில் இருப்பவரது முகத்தில் தெரியும் உணர்ச்சிகளைக் கவனிக்கமுடிகிறதா?முதல் பார்வைக்கு முடியாதது போலவும், லேசாக புன்னகைப்பது போலவும் தெரியும். அதேநேரம் (படம் தலைகீழாக இருக்கும்போதுகூட) மூளையால் புன்னகையை அடையாளம் காணமுடியும். அதைவிட முக்கியமாக முகத்தில் பிரதிபலிக்கும் மொத்த உணர்ச்சிகளிலிருந்து புன்னகையை மட்டும் தனியே பிரித்து அறிந்துகொள்ளவும் முடியும். அதுதான் புன்னகைக்கும் மூளைக்குமான நேரடித் தொடர்பு.படத்தில் இருப்பவர் யார் என்பதும், அவர் வெளிப்படுத்தும் நிஜமான உணர்ச்சிப் பாவனை என்ன என்பதையும் அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.

பொய்யான புன்னகைகள்

புன்னகை எப்போதும் மனிதர்கள் மீது ஒரு சக்திவாய்ந்த பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். மனிதர்களால் நிஜமான புன்னகையையும், பொய்யான புன்னகையையும் பார்த்த மாத்திரத்தில் வேறுபடுத்திப் பார்க்கமுடியாது. உண்மையானதோ, பொய்யானதோ புன்னகை எப்படி இருந்தாலென்ன புன்னகைத்தால் போதும் என்றே பலரும் திருப்திபட்டுக் கொள்கிறார்கள்.மூளையிலிருந்து வரும் அலைவரிசையால் விரியும் நிஜமான புன்னகை முகத்தின் இரு பக்கங்களிலும் விரிந்து நிற்கும். அதுவே பொய் பேசும்போது வெளிப்படும் பொய்யான புன்னகை முகத்தில் இடது பக்கத்தில் அதிகமாக வெளிப்படும். பொதுவாக மனிதர்களுக்கு வலதுபக்க மூளை அதிகம் இயங்குவதால் செயற்கை உணர்ச்சிகளை முக பாவனைகளாகத் தோற்றுவிக்கும் பகுதி இடதுபுறம் தூண்டப்படுகிறது. இதனால் பொய் சொல்லும்போது புன்னகை இடது பக்கமாக நீண்டு வெளிப்படுகிறது.

புன்னகைப்பது ஒரு வெகுளித்தனமான வெளிப்பாடாகவும், திரை மூடிய கவசமாகவும் இருக்கிறது. மக்கள் பொய் பேசும்போது தங்கள் பொய்யை மறைப்பதற்காக புன்னகையை ஒரு கவசம் போல் அணிந்துகொள்கிறார்கள். பொய்யர்களுக்குப் புன்னகை ஒரு முகமூடியாகப் பயன்படுகிறது. இது ஒரு பொதுவான நம்பிக்கை. நிஜமற்ற புன்னகையை ஒருவர் வெளிப்படுத்துகிறார் என்றால் உடனே அவர் பொய்தான் சொல்கிறார் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. எப்போதும் அது நிகழும் சூழ்நிலையைக் கவனிக்க வேண்டும்.1980-களில் பிற்பகுதியில் கடத்தல்காரர்களின் ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கைகளின்போது ஆஸ்திரேலியா அரசு சில உடலியல் ஆய்வாளர்களை நியமித்தது.

ஆஸ்திரேலிய போலீசார் சந்தேகப்படுபவர்களை விசாரணை செய்யும்போது உடலியல் ஆய்வாளர்களும் உடனிருந்து கவனித்தார்கள். போலீசாரின் கேள்வியை எதிர்கொண்டதும் சந்தேகப்படும் நபர் எப்படி நடந்துகொள்கிறார், அவரது உடலசைவுகள் எப்படி இருக்கிறது, எப்படி பதிலளிக்கிறார், எப்படி புன்னகைக்கிறார், பதிலளிக்கும்போது குரல் எப்படி ஒலிக்கிறது, கிடுக்கிப்பிடி கேள்வியின்போது எப்படி நடந்துகொள்கிறார் என்று நுணுக்கமாக (Lie detection இயந்திரம் வரும் வரை இப்படித்தான் இருந்தது) ஆராய்ந்தார்கள். விசாரணைகளெல்லாம் வீடியோ பதிவு செய்யப்பட்டன.  

விசாரணையின் ஒரு கட்டத்தில், கடத்தல்காரர்கள் பொய் சொல்வது தெரிந்தது. அப்போது அவர்கள் சிரித்து மழுப்புவார்கள் என்றே பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால், கடத்தல்காரர்கள் பொய் சொன்னபோது சிரிக்கவே இல்லை. அதேநேரம் விசாரணையிலிருந்த உண்மையான மனிதர்கள் தங்கள் நேர்மையை விவரிக்கும்போது மென்மையாகப் புன்னகைத்தார்கள். உலகம் முழுக்க கடத்தல்காரர்கள் விசாரணைக்காக போலீஸ்கார்கள் முன் பொய் பேசும்போது மட்டுமில்லாமல் பொதுவாகவே புன்னகைப்பதில்லை.  

இறுக்கமாக, உணர்ச்சியற்ற நிலையிலேயே பேசுகிறார்கள். இதுவும் ஒரு உளவியல் ரீதியான செயல்பாடுதான். சக மனிதர்களிடம் பேசும்போது இயல்பாகப் புன்னகைப்பவர்கள்,விசாரணை அதிகாரியிடம் பேசும்போது புன்னகைக்க மாட்டார்கள்.மனிதர்கள் பொய் பேசும்போது தங்கள் பொய்யை யாரும் கவனிக்கவில்லை  என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே பொய்யை மறைக்க புன்னகைக்கிறார்கள். அதே நேரம், உண்மை பேசுபவர்கள் தங்கள் உண்மையையே ஒரு கவசமாக மாற்றிதைரியமாகப் புன்னகைக்கிறார்கள்.

புன்னகைப்பது பணிவின் அறிகுறி என்பதால் வெகுளித்தனமான உணர்வு நிலை கொண்டவர்கள் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும்போது, அதைச் சொன்னவரை சமாதானப்படுத்துவதற்காக புன்னகைக்கிறார்கள். இதை யதார்த்த வாழ்க்கையிலும் பார்க்க முடியும். திடீரென்று யாராவது ஏதாவது ஒரு அபத்தமான குற்றச்சாட்டை முன்வைக்கும்போது… (நீங்கதானே நேத்து வந்து ஏமாத்திட்டுப் போனது?) ‘ஐயோ… அது நான் இல்லைங்க’ என்று மறுத்துச் சொல்லும்போது பலரும் வரவழைத்துக்கொண்ட புன்னகையுடனேயே சொல்வதைப் பார்க்கலாம். இந்த இடத்தில் பொய் சொல்லவில்லை, அதே நேரம் நிஜமான புன்னகையையும் வெளிப்படுத்தவில்லை.

மொத்தத்தில் பொய்யான புன்னகை எப்போது எப்படி பிரதிபலிக்கிறது என்பது அது நிகழும் இடத்தைக் கொண்டே கவனிக்க வேண்டும். மதிப்பிட வேண்டும்.மனிதர்கள் நிஜமான உணர்ச்சிகளுடன் ஒளிவு மறைவின்றி புன்னகைக்கிறார்களோ இல்லையோ பொய் சொல்லும்போது பெரும்பாலும் புன்னகைக்கிறார்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு நிஜமான புன்னகையை விட பொய்யான புன்னகைதான் அடுத்தவரிடம் வேகமாக பற்றிக் கொள்கிறது. பொய்யான புன்னகை ஒரு முகமூடி அணிந்த முகம். மனிதர்களுக்கு எப்போதும் முகத்தைவிட முகமூடிதான் வசீகரமானதாக, பிடித்தமானதாக இருக்கிறது.

- தொடரும்
-ஸ்ரீநிவாஸ் பிரபு

உடை வழி - டர்பன் (தலைப்பாகை)

தலைப்பாகை துணி என்பதைத் தாண்டி ஒரு கம்பீரத்தைத் தரக்கூடியது. தலைப்பாகை ஆண்களுக்கு வீரம், கம்பீரம், துணிவு, உறுதி, பலம் என்று ஆண்மைக்கான அனைத்து அம்சத்தையும் தரவல்லது. இந்தியாவைப் பொறுத்தவரை தலைப்பாகைதான் கிராமத்தையும் நகரத்தையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டில் அரசியல் தலைவர்களை மக்கள் மனதில் ஒரு Icon- ஆக நிறுத்தியது தலைப்பாகைதான்.பாலகங்காதர திலகர், பகத்சிங், வ.உ.சிதம்பரனார், பாரதியார், சர் சி.வி.ராமன், முன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் ஆகியோரை தலைப்பாகை இல்லாமல் கற்பனை செய்யவேமுடியாது.

இன்றளவும் சிலருக்குத் தலைப்பாகை ஒரு அடையாளமாகவே இருந்துகொண்டிருக்கிறது.மகாத்மா காந்தியும் குஜராத்தி பாணியில் தலைப்பாகை அணிந்திருந்தவர்தான் 1893-ல் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றத்தை பார்க்கச் சென்றபோது காந்தி தலைப்பாகையுடனேயே இருந்தார். அப்போது நிற வெறி அதிகமிருந்த நேரம், நீதிபதி காந்தியிடம் தலைப்பாகை அணியக்கூடாது என்று கழற்றச் சொன்னார். காந்தி தலைப்பாகையைக் கழற்றாமல், நீதிமன்றத்தினின்றும் வெளியேறினார். ‘தலைப்பாகை பேசும், தொப்பி பேசாது’ என்கிறார் காந்தி.

மேல் துண்டால் தலையைச் சுற்றி தலைப்பாகையாக அணியும் வழக்கம் தென்னிந்தியாவில் உண்டு. அப்படியான தலைப்பாகையை இன்றளவும் விவசாயிகள்தான் அணிகிறார்கள். அன்றைய நாட்களில் தென்னிந்தியாவின் தலைப்பாகை முறையை விரும்பிய டில்லி அரசர்கள் ‘அவர்ஸாஃபா’ என்றும், கர்நாடக மன்னர்கள் ‘பெட்டா’ என்றும் அணிந்து மகிழ்ந்தார்கள்.தலைப்பாகை ஒரு அணிகல வகை உடையல்ல. அதில் நாகரிகம், பண்பாடு, அர்த்தங்கள், காலமெல்லாம் அடங்கியிருக்கிறது.

தலைப்பாகை இன்றளவும் ஒழுக்கம், நடைமுறை, மரியாதை ஆகியவற்றின் சின்னமாகவும் இருக்கக்கூடியது..கிராமப்புறங்களில் தலைப்பாகை அணிந்தவர்கள் நியாயம்தான் பேசுவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. தலைப்பாகை அணிந்ததும் பஞ்சாயத்தார்களுக்கு கடமையும், பொறுப்பும், விருப்பு வெறுப்பற்ற தன்மையும் வந்து சேர்கிறது. தமிழர்களுக்கு தலைப்பாகை ஒரு வாழ்வியல் உடையாகவே இருக்கிறது.

தலைப்பாகையைக் கட்டிவிடுவது கௌரவப்படுத்துவது (கோயில்களில் முதல் மரியாதை தலைப்பாகையை அணிவித்துத்தான் செய்யப்படுகிறது) தலைப்பாகையை அவிழ்த்துவிட்டால் அவமானப்படுத்துவது, தலைப்பாகையை மாற்றிக்கொண்டால் சம்பந்தம் செய்துகொள்வது, தலைப்பாகையைக் கழற்றிக்கொண்டால் துக்கத்தை/வருத்தத்தை தெரிவிப்பது என்று அர்த்தபூர்வமான செயல்களாகவும் இருக்கிறது.

குடும்பத்தில் மறைந்தவர்களுக்கு நிகழ்த்தும் சடங்கில் (உருமாலைக்கட்டு என்று குறிப்பிடுவார்கள்) வாரிசுகளுக்கு தலைப்பாகை கட்டிவிடுவார்கள். இதன் அர்த்தம் மறைந்த நபரின் பொறுப்பு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்பதை குறிக்கும்.தலைப்பாகை என்ற துணிவகை தலையோடு இணைந்து மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக அடையாளப்படுத்துவதுதான் அழகு.

X