மாற்றுச் சிந்தனையால் தோல்விகளைத் தூக்கி எறியலாம்!

1/30/2020 3:16:48 PM

மாற்றுச் சிந்தனையால் தோல்விகளைத் தூக்கி எறியலாம்!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

புதிதாய்ப் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!! 26

வெற்றியாளர்கள் எப்போதுமே ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் அதில் ஆராய்ச்சி செய்யக்கூடியவர்கள். ஆனால், ஒருபோதும் காரணம் கண்டு பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க மாட்டார்கள். ஆனால், தோல்வியாளர்கள் தங்களால் ஏன் ஒரு காரியத்தைச் செய்ய முடியவில்லை என்று சொல்வதற்கு சாக்குப்போக்குகள் நிறையவே வைத்திருப்பார்கள். வாழ்க்கையில் நாம் எப்போதும் மகிழ்ச்சியான வெற்றிபெற்ற நிகழ்வுகளில் இனிப்பு வழங்கிக் கொண்டாடுவோம். ஆனால், பிரச்னைகளைக் கொண்ட தோல்விகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதில்லை. பிரச்னைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதா? அது எப்படி முடியும்? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால், அந்தப் பிரச்னைகளிலிருந்து கொஞ்சம் மாற்றி யோசித்தால் சரியான தீர்வு கிடைக்கும். இந்த மாற்றுச் சிந்தனை தோன்ற, மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றிபெற்ற அனைவரும் பிரச்னைகளைப் பற்றி யோசிக்கவில்லை. புதிய வாய்ப்புகள் பற்றித்தான் யோசித்தார்கள், செயல்பட்டார்கள். சிகரத்தைத் தொட்டார்கள். இந்தியாவிற்குக் கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா. இந்த எண்ணம் அவர் உள்ளத்தில் உதித்ததும், உடனே அதனை மீண்டும் மீண்டும் உள்ளத்திரையில் பதித்து வைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் கடல்வழி மார்க்கத்தைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இந்த முயற்சியில் இறங்க வேண்டுமென்றால் கப்பல் வேண்டும். கப்பலைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

மாலுமியாக மாறி கப்பலை இயக்கவும் வேண்டும். கடலைப் பற்றிய ஆழ்ந்த அறிவு வேண்டும். இவை எல்லாம் அத்தனை எளிதா என்ன? இதனை அறிந்துகொள்வது என்பது சாதாரண ஒன்றா? ஆனால், ஆர்வம் ஆட்கொண்டிருந்த காரணத்தால் இவை அனைத்தும் கடினமானதாக அவருக்குத் தோன்றவில்லை. அத்தனையையும் வேகமாகக் கற்றார். கப்பலுக்கும் ஏற்பாடு செய்தார். வாஸ்கோடகாமாவின் ஆர்வத் திற்குச் சற்றும் குறைவற்ற ஆர்வம் கொண்டிருக்கும் இருபது பேரைத் தேடிப் பிடித்தார். அவர்களோடு துணிச்சலாகக் கடல் பயணம் மேற்கொண்டார். வழியில் சூறாவளிக்காற்று குறுக்கிட்டபோதும், புயல் தாளாமல் அலைகள் உயர்ந்து எழுந்தபோதும், கப்பல் தொடர்ந்து இயங்குவதில் சிறுசிறு கோளாறுகள் ஏற்பட்டபோதும், அனைவரும் பயந்தார்கள்.

ஒவ்வொரு வரும் ஒவ்வொரு யோசனையை கவலையோடு தெரிவித்தார்கள். அத்தனை யோசனைகளுமே முயற்சியைக் கைவிட்டு திரும்பி விடுவதைப் பற்றியதாகவே இருந்தன. ஆனால், கொண்ட லட்சியத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற விருப்பத்தை ஆர்வத்தை அத்தனை எளிதாக புறந்தள்ளிவிட வாஸ்கோடகாமாவின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அத்தனை பேரிடமும் குறைந்துபோயிருந்த ஆர்வத்தை மீண்டும் தூண்டிவிடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டார்.

வாஸ்கோடகாமா தன்னுடன் இருந்தவர்களின் ஆர்வத்தைத் தூண்டத் தூண்ட அனைவரும் பரவசம் அடைந்தார்கள். எப்படியும் இந்தியாவிற்கான கடல்வழி மார்க்கத்தைக் கண்டுபிடிக்காமல் திரும்பப் போவதில்லை என்று உறுதியெடுத்தார்கள். இதனால் அவர்களை அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அச்சம் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ ஓடி மறைந்துபோனது. கடல் வழி மார்க்கமும் கண்டுபிடிக்கப்பட்டது. மாற்றி யோசிக்கும் திறனும் ஆர்வமும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதை இதன் மூலமாகப் புரிந்துகொள்ளலாம்.

கற்பனைத் திறனில் அபார நம்பிக்கை கொண்டவர்களைத்தான் இந்த உலகம் உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பளிக்கிறது. பிறரின் அறிவுரைகளுக்காகக் காத்திருக்காமல் தனது எண்ணங்களின்மீது நம்பிக்கை வைத்து தனது சொந்த முயற்சியால் முன்னேறிச் செல்பவர்களை இந்த உலகம் விரும்புகிறது. அப்படி தனது சொந்த முயற்சியால், ஆர்வத்தால் மற்றும் கற்பனைத் திறனால் ஒரு சாதாரண இளைஞர் சாதனை இளைஞராக உருவாகியுள்ளார்.  

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்கொடுத்தவணிதம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அருண்மொழிவர்மன். அப்பா இறந்துவிட்டதால் பிளஸ் 2 படிப்பை முடித்த பிறகு தொடர்ந்து படிக்க முடியவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அம்மா, தங்கை இருவருக்கும் தேவையான அனைத்தையும் செய்யவேண்டிய குடும்பப் பொறுப்பு வந்தது. டிகிரி படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கம். ஆனால், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம் உந்துதலை ஏற்படுத்திக்கொண்டேயிருந்தது. சென்னையில் செய்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார்.

சொந்த ஊருக்குத் திரும்பியவர் இருந்த நிலத்தில் விவசாயம் பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றிவிடலாம் என்ற தைரியத்தில் இருந்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் எம்.பி.ஏ. மனிதவள மேலாண்மைப் படிப்பை முடித்தார். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள நினைத்தார். ஆங்கிலம் பேசப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றார். அத்தோடு நிற்காமல் தினசரி ஆங்கில நாளிதழ்கள் மற்றும் ஆங்கில நூல்களைப் படித்து ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டார்.

அடிக்கடி நூலகம் சென்று புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர். ஒரு நாள் நூலகத்தில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘கீதாஞ்சலி’ என்ற நூலைப் படித்தார். அப்போதுதான் அவருக்குள் இருந்த எழுத்தார்வம் துளிர்விட்டது. அன்றுதான் தானும் ஓர் எழுத்தாளராக மாறவேண்டும் என முடிவு செய்தார். இதையடுத்து ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதினார். அவருடைய கட்டுரை களைத் தொகுத்து ஐதராபாத்திலுள்ள ஒரு பதிப்பகம் மூலம் e-book ஆக வெளியிட்டார். இந்த e-bookஐ கலிபோர்னியாவில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் வாசித்துவிட்டு பல்வேறு இணையதளங்களில் வெளியிட்டார்.  இதில் குறிப்பாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அலுவலகத்திலிருந்து அவரை தொடர்புகொண்டு நூலை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

செல்போனே உலகம் என்று மூழ்கியிருக்கும் இன்றைய இளைஞர்களின் மத்தியில் தன்னுடைய எழுத்தால் கிராமத்து இளைஞர் ஒருவர் கனடா பிரதமரிடமிருந்து பாராட்டு பெற்றுள்ளார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. இது அவரது முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். இப்போது அமெரிக்காவிலுள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பிஹெச்.டி. படிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்கிறார் அருண்மொழிவர்மன். மனிதன் சாதிப்பதற்குப் பணமோ, படிப்போ, குடும்பச்சூழலோ தடையாக இருக்கமுடியாது. மாற்றி யோசிக்கும் திறனும், ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்துள்ளார் இந்த தமிழக இளைஞர்.  

அருண்மொழிவர்மனின் வாழ்க்கை நமக்குச் சொல்வது என்னவென்றால், ‘தோல்விப் பயத்தோடும், மன இறுக்கத் தோடும் புலம்பித் திரிவதைவிட நல்லதைத் தேடி நம்மைப் பக்குவப்படுத்திக்கொண்டு வெற்றி பெற வேண்டும். மாற்றுச் சிந்தனையோடு ஆர்வத்தைக் கடைப்பிடித்து முயற்சி செய்யும்போதுதான் வெற்றி கிட்டுகிறது. கொஞ்சம் மாத்தி யோசித்துப் பாருங்கள். வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.

(புதுவாழ்வு மலரும்)

X