அன்று: 3 ஊழியர்களுடன் ஆரம்பித்த சிறு நிறுவனம் இன்று: 500 ஊழியர்கள் பணிபுரியும் மெகா நிறுவனம்

2/5/2020 3:11:04 PM

அன்று: 3 ஊழியர்களுடன் ஆரம்பித்த சிறு நிறுவனம் இன்று: 500 ஊழியர்கள் பணிபுரியும் மெகா நிறுவனம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

எந்த ஒரு தொழிலின் வெற்றிக்கும் திட்டமிடுதல்தான் அஸ்திவாரம். அதுதான் ஒரு லட்சியக் கட்டடத்தின் மாபெரும் பலம். திட்டங்கள் தெளிவானதாக இருந்தால் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெறலாம். மொத்தத்தில் மனதில் கனவாய் உருவாவதை நனவாக்குவதற்கான முதல் செயல்பாடு திட்டமிடுதல். திட்டமிடுதல்தான் முயற்சியின் முதுகெலும்பு. அப்படி திட்டமிட்டு செயல்படுத்தியதால் தான் 3 ஊழியர்களுடன் ஆரம்பித்த நிறுவனத்தை இன்று 500 ஊழியர்கள் மற்றும் 5 லட்சம் வாடிக்கையாளர்களாக வளர்த்தெடுத்திருக்கிறார் 5K நெட்வொர்க் (5K NETWORK) எனும் கார்களுக்குத்  தேவைப்படும் அனைத்துச் சேவைகளையும் செய்து கொடுக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் குமார் சின்னராஜ்.

தனது வெற்றிக்கதையை இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.  ‘‘ஒவ்வொரு சாதனையாளரின் வாழ்க்கைப் புத்தகத்தையும் புரட்டி பாருங்கள். அவர்கள் கடந்துவந்த பாதை எவ்வளவு தோல்வி, அவமானங்கள் கொண்டது என்பது புரியும். தோல்வியில் அடிபட்டால் உடனே எழுந்து விடு, இல்லையேல் இவ்வுலகம் உன்னை புதைத்துவிடும் என்பது விவேகானந்தரின் வாக்கு. எனக்கு விவேகானந்தரை மிகவும் பிடிக்கும். எனது சொந்த ஊர் பழனி. எனது பள்ளிக்கல்வியை முடித்தபின் மருத்துவராகி சமுதாயத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் எனது சூழல் அதற்கு வழிவகை செய்யவில்லை. அதனைத்தொடர்ந்து பல இன்னல்களுக்குப் பிறகு மேலாண்மைத் துறையில் (எம்.பி.ஏ.) எனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக அதனைத் தொடர்ந்து படித்து வந்தேன்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே படிப்பை முடித்ததும் சுயமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்துவந்தது. குறிப்பாக மார்க்கெட்டிங் துறையில் மிகுந்த ஆர்வம் அதிகரித்தது. இதற்கிடையில் எனக்கு நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் இளம் வயது முதலே இருந்தது. குறிப்பாக அப்துல் கலாம் அவர்களின் வார்த்தைகள் எனது சிந்தனைக்கு மேலும்  வலுவூட்டியது. நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி, இதுவே இலக்கு என்பதை உறுதி செய்கையில்... பணமில்லையே உடலில் வலுவில்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே தயங்காதே... இலக்கை நோக்கி அடியெடுத்து வை.

தொடர்ந்து முன்னேறு. சோதனைகள் விலகும்; பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்., அதை யாராலும் தடுக்க முடியாது என்ற கோட்பாட்டுக்கு இணங்க என் இளம் வாழ்க்கை தொடங்கியது’’ என்றவர் தன் வாழ்வில் முன்னேறப் பின்பற்றிய அறவழியையும் விவரித்தார். ‘‘நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் செய்து கொண்டுதான் இருக்கிறார் என்னும் கோட்பாட்டை மனதில்கொண்டு வாழ்ந்தேன். நான் சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தர் கோட்பாட்டின்படி என் வாழ்வைச் சீர்படுத்திவந்தேன். பெரும் சாதனைகளைச் செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம்.

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே, என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே, ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன் என்ற வார்த்தைகள் என்னுள் வலிமையை ஏற்படுத்தியது. அதனால் ஒரு நிறுவனத்தில் நிரந்தரமாக வேலை செய்து சம்பளம் வாங்குவதைவிட பிறருக்குச் சம்பளம் கொடுத்து உதவும் நிலைக்கு வளரவேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு நிறையவே இருந்தது. சமுதாயத்தில் அனைவரது வாழ்விலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இத்தகைய எண்ணத்தின் வெளிப்பாடாக கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்த பின்னர் தனியார் நிறுவனமான எல் அண்ட் டி மற்றும் ஏசியன் பெயின்ட் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களில் பணிபுரியத் தொடங்கினேன்.

அந்தத் துறைகளில் பணிபுரிந்தபோது அவற்றில் உள்ள யுத்திகள் நெளிவுசுழிவுகளைத் திறம்படக் கற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு எளிமையான முறையில் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் என்னுள் என்னைத் தூங்கவிடாமல் தட்டிக்கொண்டேயிருந்தது. இதனைத் தொடர்ந்து எண்ண அலைகளைச் செயலாகமாற்ற நிறைய கடின உழைப்பும், ஏளனம் மற்றும் எதிர்ப்பையும் தாண்டி 2011- ல் கோயம்புத்தூரில்  உள்ள  கொடிசியாவில் 5k நெட்வொர்க் என்னும் பெயரில் முதன்முதலாக கார் (மகிழுந்து) வாஷ், டிங்கரிங் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினேன்.

5K ( King of Panchapootham) என்பதன் அர்த்தம், நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு என்ற பஞ்சபூதங்களே உலகத்தை ஆளும் ராஜாக்கள். அதனால் 5K நெட்வொர்க் என்ற பெயரில் மூன்று ஊழியர்களுடன் ஆரம்பித்தேன். 5k நெட்வொர்க்கின் நோக்கம் மிகத் தெளிவானதாக இருந்ததனால் இந்த வளர்ச்சி  மென்மேலும் பயங்கர வலுவாகிக்கொண்டே வந்து கொண்டிருக்கிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் நாமும் அதற்குத் தகுந்தவாறு தொழில் முறையை மாற்றினால்தான் அதில் வெற்றிபெற முடியும் என்பதால் 5K Network.in என ஓர் இணையதளப் பக்கத்தை ஆரம்பித்து அதில் எங்கள் நிறுவனம் வழங்கும் சேவைகளைப் பதிவு செய்து வருகிறோம்.

அதன் மூலம் இன்றைக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் எங்களை நாடி வருகிறார்கள்’’ என்று பெருமிதத்தோடு தெரிவிக்கிறார் கார்த்திக். ‘‘நாம் மட்டும் முன்னேறினால் போதாது, இளம் தொழிலதிபர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திட்டங்களோடு பல்வகையான செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தேன். அதுகுறித்த தேடலில் ஈடுபட்டபோது, கார் டீடெய்ல் மற்றும் பெயின்டிங் துறையில் மிகுந்த ஆர்வமும் அனுபவமும் அறிவாற்றலும் கிடைத்தது. மிக எளிமையான கருத்து என்னவென்றால் அயல்நாட்டவரைத் தவிர நம்மைப் போன்றவர்களாலும் கார்ப்பரேட் நிறுவனங்களை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கை என்னுள் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

எனக்குள் இருந்த நம்பிக்கையின் அடுத்தகட்டமாகப் பல்வேறு வகையிலும்  வெற்றிகளைப் பெற முடியும் என்பதில் அளவுகடந்த நம்பிக்கையாக மாறியது. குறிப்பாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல், இளம் தொழிலதிபர்களுக்கு வாய்ப்பு வழங்குதல், சமுதாயத்திற்குச் சேவை செய்யும் குறிக்கோளாக மரம் நடுதல், தொழிலாளிகள், உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைய எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்னும் கோட்பாட்டோடு நிறுவனத்தை இயக்கி வருகிறேன்.

மூன்று ஊழியர்களை வைத்து 2011-ல் ஒரே ஒரு கிளையாக துவங்கப்பட்ட 5K நெட்வொர்க் இன்று 500 ஊழியர்களையும் 5 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டு கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை, பெங்களூரு, திருப்பூர், திருச்சி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 50 கிளைகளுடன் தமிழகம் முழுவதும் வலம் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பணி இன்னும் தொடர இறைவனின் அருளும் ஆசியும் என்றென்றும் வேண்டுகிறேன்!

மனிதனால் முடியாது என்ற வார்த்தையை அழித்து, முடியும் என்னும் வார்த்தை சமுதாயத்தில் ஓங்கி உயர்ந்து நிற்க வேண்டும் என்ற உயரிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டே இந்நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மென்மேலும் இறைவன் அருளால்  பல சரித்திரச் சாதனைகளை இந்நிறுவனம் புரிந்து சமுதாயத்திற்கு சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தோடு  வெற்றிப் படிக்கட்டுகளைக் கடந்து வருகிறோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’’ என்ற இறை நம்பிக்கை வார்த்தைகளோடு முடித்தார் கார்த்திக் குமார்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X