புன்னகை காட்டும் முகபாவனை!

2/13/2020 5:07:10 PM

புன்னகை காட்டும் முகபாவனை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

நடை உடை பாவனை 26

சிரிக்கத் தெரிந்த ஒரே மிருகம் மனிதன்தான் என்று சொல்வார்கள். ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு மகிழ்ச்சியான சூழலிலும் மனிதர்கள் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், மனம் விட்டு உணர்ந்து சிரிக்கிறார்களா என்று கேட்டால் அது பெரிய கேள்விக்குறிதான். புன்னகை எனும் பாவனையை அனைவரும் வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறோம். ஆனால், சில வேளைகளில் பார்ப்பது, கேட்பது, பேசுவது போல் புன்னகையையும் ஒரு தன்னிச்சையான செயலாக உணர்ச்சிகளின் வெளிப்பாடு இல்லாமல் சிரித்துக்கொண்டிருக்கிறோம். மனிதர்களின் முக பாவனைகளில் ஒளிரும் புன்னகை மொத்தம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது

உறைந்த புன்னகை

உதடுகளை இறுக்கமாக மூடிக்கொண்டு பற்களை வெளியில் காட்டாமல் உறைந்த நிலையில் இருக்கும் இந்தப் புன்னகை, உதடுகள் மூடிய நிலையில் இருக்கும்போதும், அது பார்க்க முகத்தின் குறுக்கே ஒரு கோடு போட்டது போல் இருக்கும். புன்னகையை வெளிப்படுத்துபவருக்கு மனதில் ஏதோ ஒரு ரகசியத்தை, ஒரு கருத்தை வெளிப்படுத்தாமல் வைத்திருக்கிறோம் என்ற உணர்வைத் தரும். அதேபோல் அந்தப் புன்னகையைப் பார்ப்பவருக்கும் ‘இவுரு எதையோ சொல்ல வந்துட்டு பேசாம நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

பெண்களைப் பொறுத்தவரை தங்களுக்கு விருப்பமில்லாதவர்களுடன் பேச வேண்டிய சூழல் வரும்போது தங்கள் விருப்பமின்மையை இப்படி உறைந்த புன்னகையோடு எதிர்கொள்வார்கள். இது ஒரு புறக்கணித்தலின் அறிகுறி என்றே சொல்லலாம். உறைந்த புன்னகை வெளிவரும்போது உதடுகள் மட்டுமே இறுக்கமாக விரியுமே தவிர கண்களோ, புருவங்களோ அல்லது முகத்தில் வேறு அங்கங்களோ எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் இருக்கும்.

வஞ்சகப் புன்னகை

உதட்டுச் சுழிப்போடு கன்னங்களில் சுருக்கத்தோடு ஒரு பக்கமாக இழுத்து வெளிப்படும் சிலரின் புன்னகை பார்க்க கோரமானதாக இருக்கும். முகத்தில் ஏதோ ஒரு வில்லத்தனம் பட்டவர்த்தனமாகத் தெரியும். புன்னகையின் வசீகரத்திற்குள் வஞ்சகம் நுழையும்போது முகபாவனைகளும், புன்னகையும் வஞ்சகப் புன்னகையாக வெளிப்பட்டு நிற்கும். இந்த கோட்டோவிய முகங்களைப் பாருங்கள்.
 

உதட்டுச் சுழிப்பால், புன்னகையின் பாவனையால் முக உணர்ச்சிகள் மாறிக் கொண்டே வருவதைப் பார்க்கலாம். முகத்தில் தோன்றும் சைக்கோமேடிக் தசைகளின் இயக்கம் புன்னகையைத் தோற்றுவிக்கும் அதே நேரம் கோபம்/வஞ்சகத்தின் சுவடுகளும் கலந்து நிற்கிறது. இப்படி எதிரும்புதிருமான உணர்வுகளை முகம் பாவனையாக எதிர்கொள்கையில் அது வஞ்சகப் புன்னகையாக மாறிவிடுகிறது.

கோமாளிப் புன்னகை

புன்னகைக்கும்போது சிலர் கீழ்த் தாடையை அகலமாக இறக்கி (சிம்பன்சிகளின் உபயம்) விளையாட்டுத்தனத்தையும், கிறுக்குத்தனத்தையும் முகபாவனைகளாகப் பிரதிபலிப்பார்கள். இதை கோமாளிப் புன்னகை என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வகையான புன்னகையை பெரும்பாலும் அடுத்தவரை மகிழ்விக்கும் மேடைக் கலைஞர்கள் பார்வையாளர்களை வசீகரிக்கவும், கவனத்தை ஈர்க்கவும் செய்வார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போது இந்த கோமாளித்தனமான சேஷ்டைகள் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அருகில் நெருங்க நெருங்க அந்த போலித்தனம் ரசிக்க முடியாததாக இருக்கும். சிறு குழந்தைகளை மகிழ்விக்க பெரியவர்கள் இப்படி கோமாளித்தனமான புன்னகையை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடியும்.

வசீகரப் புன்னகை

ஒருவரின் புன்னகை அடுத்தவருக்கும் விருப்பமானதாக, நெருக்கமானதாக இருக்கும் உணர்வை ஏற்படுத்தித் தருவது வசீகரப் புன்னகை. இதை பலரும் ரசித்து விரும்புவார்கள். தலையைச் சற்று கீழாகச் சரித்து பக்கவாட்டில் மேலே பார்த்தபடி முகத்தில் புன்னகையைத் தவழவிட்டால், யார் எப்படி இருந்தாலும், எந்த வயதில் இருந்தாலும் பார்க்க இளமையானவராகவும், ரம்யமானவராகவும் இருப்பார்கள். அந்தப் புன்னகை எல்லோருக்குமே ஒரு வசீகரமான தோற்றத்தை உருவாக்கித்தரும். புருவம், கண், கருவிழிகள், கன்னம், உதடுகள் என்று அனைத்தும் புன்னகையோடு கலந்து வெளிப்படும் அழகுதான் வசீகரம்.

பெண்கள் இப்படி வசீகரமாக புன்னகைக்கும்போது அவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய நாணம் படர்ந்திருக்கும். அந்த நாணம் ஆண்களுக்குப் பெண்களிடம் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தித்தரும். வசீகரப் புன்னகையைப் பொறுத்தவரை இங்கிலாந்து இளவரசி டயானாதான் நம்பர் ஒன். டயானாவின் வசீகரப் புன்னகைதான் அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்களையும், மக்களின் ஆதரவையும், ஈர்ப்பையும் பெற்றுத் தந்தது. அன்றைய காலகட்டத்தில் டயானாவை இமிடேட் செய்வது போல் பல பெண்களும் அப்படி புன்னகைத்தார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

மந்திரப் புன்னகை

சிலரின் முகத்தில் புன்னகை எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். அவர்களைப் பார்த்தால் புன்னகைத்துக்கொண்டேயிருப்பது போலிருக்கும். ஆனால், எதற்காகப் புன்னகைக்கிறார்கள் என்பதை அறியமுடியாது. ஏதோ ஒரு காரணத்திற்காக புன்னகைக்கிறார் என்பது புரியும், ஆனால் என்னவிஷயம் என்று கேட்க வைப்பதாக இருக்காது. முகத்தில் ஒரு மந்தகாசம் நிறைவாக இருக்கும். ஒரு முறைகூட புன்னகை முகத்திலிருந்து விலகாமலேயே இருக்கும்.

முகம் சிவக்க வைக்கும் புன்னகை

புன்னகையை ஒரு இயல்பான பாவனையாக, வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். புன்னகைத்தபடி இருப்பவர்களைப் பாருங்கள் அவரைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். ஒரு சிறிய புன்னகைதான் ஆனால் அது உடலுக்குப் பல நன்மைகளைச் செய்யும். புன்னகைப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். புன்னகைக்கும்போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் நேர்மறையான விதத்திலேயே இயங்கும். புன்னகைக்கும்போது மூச்சு சீராகும். மார்பு, கழுத்து, வயிறு, முகம், கன்னம், தோள்களுக்கு இயங்குசக்தி அதிகரிக்கும். தோலின் அடியிலிருக்கும் ரத்த நாளங்கள் விரிவடைவதால் சிரிக்கும்போது முகம் சிவக்கிறது.

(தொடரும்)

X