CBSE பாடத்திட்டத்தில் மீண்டும் ‘ரேங்கிங்’..!

1/10/2018 12:44:38 PM

CBSE பாடத்திட்டத்தில் மீண்டும் ‘ரேங்கிங்’..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டப் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மூன்று மாணவர்கள், தேசிய அளவில், முதல் மூன்று ‘ரேங்க்’ பெறுவர். இந்நிலையில் 2009 முதல் 10ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வுமுறை ரத்து செய்யப்பட்டது. அதாவது, சி.சி.இ. எனப்படும், தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டு, பள்ளிகளிலேயே ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டது.

அதனால், மாணவர்களுக்கு, ‘ரேங்கிங்’ முறை ரத்து செய்யப்பட்டு, படிநிலை என்ற, ‘கிரேடு’ முறை அறிமுகம் ஆனது. இதற்கிடையில் பொதுத்தேர்வு இல்லாததால் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் வழங்கி +1க்கு தேர்ச்சி பெற வைப்பதாகப் புகார் எழுந்தது. அதனால், கல்வித் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

இது குறித்து, மத்திய அரசின் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு நடந்தது. ஆய்வு அறிக்கையின்படி, 10ம் வகுப்புக்கு, மீண்டும் தேசிய அளவில் பொதுத்தேர்வு வந்துள்ளது. இந்த ஆண்டு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் மார்ச்சில், பொதுத்தேர்வை எழுத வேண்டும். அதன் முடிவுகள், மே மாதம் வெளியாகும். இந்த முடிவுகளில், மீண்டும் மதிப்பெண் முறையும், தரவரிசை என்ற ‘ரேங்கிங்’ முறையும் வரவுள்ளது.

X