அதிக வேலை வாய்ப்புகளைத் தரப்போகும் டேட்டா சயின்ஸ்!

9/27/2018 2:30:24 PM

அதிக வேலை வாய்ப்புகளைத் தரப்போகும் டேட்டா சயின்ஸ்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உயர்கல்வி

தனிமனிதர்களின் தகவல்களை வைத்து அவர்களின் தலையெழுத்தையே ஒருவர் தீர்மானிக்கலாம் என்பதை சமீபத்தில் இரும்புத்திரை படம் வெளிச்சம் போட்டு காட்டியது. அமெரிக்கர்களின் தகவல்களைத் திருடிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்தது. ஆமாம் அந்த அளவில்,  இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த உலக வாழ்க்கையில் இன்றியமையாததாக உள்ளது தனிமனிதர்களின் தகவல்கள். அதனால்தான் தகவல்களைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அலசும் டேட்டா சயின்ஸ் எனும் துறையே உருவானது.

இந்த டேட்டா சயின்ஸ் துறையானது கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு வரை இல்லை. ஆனால், அடுத்துவரும் காலகட்டங்களில் பயோடெக்னாலஜி, டெக்னாலஜி மற்றும் வணிகத்துறைகளில் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக வளர்ந்துவருகிறது டேட்டா சயின்ஸ். இந்த அடிப்படையில்தான் ‘‘இன்றைய டெக்னாலஜி யுகத்தில் அரங்கேறும் அனைத்து மெகா டிரென்டிற்கும் மூல காரணம் பிக் டேட்டா’’ என்கிறார் வெர்டிகா சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிரிஸ் லின்ச்.  இன்றைய டிஜிட்டல் உலகில் மக்களின் அனைத்துச் செயல்பாடுகளும் தகவல்களாகத்தான் பதியப்படுகின்றன.

இதன் தொடர்ச்சி யாகத்தான் டேட்டா சயின்ஸ் துறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் 1.7 மெகாபைட்ஸ் அளவிலான புதுப் புதுத் தகவல்கள் ஒவ்வொரு நிமிடமும் உருவாகிறது. அவை இணையதளங்களிலும், சமூக வலைத் தளங்களிலும், கணினி, லேப்டாப், செல்போன் என பலவற்றிலும் பதியப்படுகின்றன. அதன் விளைவாக 2020ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவிலான அசுரத்தனமான வளர்ச்சியை டேட்டா சயின்ஸ் துறை எட்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது போர்ஃப்ஸ் இதழின் கட்டுரை ஒன்று.

மேலும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் மிகவும் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புத் துறையாக டேட்டா சயின்ஸ் மாறப்போகிறது. தேர்தலில் ஓட்டு போடுவதில் ஆரம்பித்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் போட்டோக்கள், இணைய தேடல்கள், கேமிங் என நாம் பயன்படுத்தும் அனைத்தும் தகவல்கள்தான். இந்தத் தகவல்களை மொத்தமாக தொகுப்பதே பிக் டேட்டா. இந்த பிக் டேட்டாவின் உதவியால் தான் வருங்காலங்களில் தொழில்துறை, உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புத் துறைகளில் சீர்மிகு வளர்ச்சியைக் காணமுடியும் எனக் கருது கின்றனர் டேட்டா ஆராய்ச்சியாளர்கள்.

டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா, டேட்டா அனலிடிக்ஸ் போன்ற மூன்று துறைகளும் தகவல்களுடன் தொடர்புடையவை. ஆனால், மூன்றும் வெவ்வேறானது. தகவல்களைப் படித்தும் அல்காரிதங்கள் மற்றும் மாடல்களை உருவாக்கியும் செயல்படுவது டேட்டா சயின்ஸ். தகவல்களை ஆராய்ந்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், வணிகத்துறையில் சிறப்பான முடிவுகளை எடுக்கவும் பயன்படுவது டேட்டா அனலிடிக்ஸ். திரட்டப்
பட்ட தகவல்களின் முழுத் தொகுப்பே பிக் டேட்டா.

இது ஒரு தனித் துறை அல்ல. ஆனால், பல துறைகளில் இதன் பயன்பாடு இருக்கும். நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகளில் தகவல்களோடு தொடர்புடைய இத்துறைகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆகையால் முழுக்க முழுக்க தொழில்நுட்பங்களால் இயங்கப்போகும் வருங்கால நவீன உலகை கட்டமைக்க, டேட்டா சயின்டிஸ்ட்டுகளின் தேவை அதிகமாகவே இருக்கும்.

கல்வித் தகுதி

Engineering, Statistics, Econometrics, Computer Science, Physics, Applied Mathematics போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் டேட்டா சயின்ஸ் படிக்கத் தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால், தகவல் அறிவியல் துறையில் சிறப்பாகச் செயல்பட பிசினஸ் துறைகளில் ஈடுபாடு கொண்டிருத்தல் அவசியமாகிறது. மேலும் தகவல்களை சிறப்பாக ஆய்வு செய்யும் திறன், தொழில்நுட்பம் மற்றும் வியாபார யுத்திகள் மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் சார்ந்த அறிவு கொண்டிருத்தல் போன்றவை ஒரு சிறந்த டேட்டா சயின்டி ஸ்ட்டின் அடிப்படை தகுதிகளாக கருதப்படுகிறது. டேட்டா சயின்ஸ் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளை இந்தியாவில் உள்ள பல முன்னணிக் கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்புகளை வழங்கும் முன்னணிக் கல்வி நிறுவனங்கள்

1. Indian Statistical Institute (ISI)
2. IIT Kanpur
3. Indian Institute of Science Education and Research
4. Indian School of Bussiness (ISB)
5. IIM Bangalore and Calcutta
6. IIM Lucknow
7. IIT Kharagpur
8. IIT Bombay
9. National Institute of Securities Markets (NISM)

வேலை வாய்ப்புகள்

இனி வரும் காலம் நவீன தொழில்நுட்பம் சார்ந்தே கட்டமைக்கப்படவிருப்பதால் டேட்டா சயின்டிஸ்ட்டுகளின் தேவை அதிகமாகவே உள்ளது. குறிப்பாக வணிகத் துறை, உற்பத்தித் துறை, தொழில்துறை, புள்ளியியல் துறைகளில் டேட்டா சயின்டிஸ்ட்டுகளின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆற்றல், வணிகம், கேமிங், ஹெல்த் கேர், இன்டர்நெட், இன்சூரன்ஸ், மருத்துவம், டெலிகாம் உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. நல்ல எதிர்காலம் கொண்ட பணி வாய்ப்பை வழங்கக்கூடிய துறையாக வளர்ந்துவரும் டேட்டா சயின்ஸ் படிப்பை தேர்வு செய்து வாழ்க்கையை வெற்றிகரமானதாக அமைத்துக்கொளுங்கள் இளைஞர்களே!  

- துருவா

X