இன்டீரியர் டிசைன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்!

7/15/2019 5:43:08 PM

இன்டீரியர் டிசைன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

விஷுவல் மீடியா (Visual Media) துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அப்படிப்புக்கு எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதைப் பற்றி கடந்த இதழில் விரிவாக கூறியிருந்தோம். அந்த வகையில், இந்தப் பகுதியில் இன்டீரியர் டிசைன் (Interior Design) என்னும் உள் அலங்காரம் பற்றிய படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பார்க்கலாம்.

ட்ரீம்ஸோன் ஸ்கூல் ஆஃப் கிரியேட்டிவ் ஸ்டடீஸ் (DreamZone School of Creative Studies) என்பது திறன் சார்ந்த கல்வி மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் பயிற்சிகளை அளித்துவரும் சர்வதேச நிறுவனமாகும். அதன் உரிமையைப் பெற்று கோயம்புத்தூர் காந்திபுரத்திலும் பீளமேடு ஹோப்ஸ் காலேஜிலும் பயிற்சி அளித்து வரும் சுதாகர் இன்டீரியர் டிசைன் படிப்பு பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டவற்றைப் பார்ப்போம்…

தேசிய திறன் மேம்பாட்டு கழக NSDC (National Skill Development Corporation) அங்கீகாரம் பெற்று இப்பயிற்சி நிறுவனம் நடத்தப்படுகிறது. வீடுகளை பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களால் அலங்கரிப்பது என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் வீடுகளைக் கட்டும்போதே வீட்டின் உள்அலங்காரம் குறித்தும் சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

வெளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது அமைதி தரும் விதமாக வீட்டின் தோற்றம் அமைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். அதே சமயம் வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து வீடுகள் அலங்காரம் செய்யப்படுகின்றன. வீட்டு உள்அலங்காரத்துக்கென்றே தனித்துறை  செயல்பட்டு வருகிறது. இதற்கென்று பட்டப்படிப்புகள் இந்தியாவில் அதிக அளவு இல்லை என்றே கூறலாம்.

ஆனால், சான்றிதழ் படிப்புகள் உள்ளன. வீடுகட்டும்போது பொறியாளருடன் இணைந்து பணியாற்ற இந்தப் படிப்புகள் உதவும். வீடுகள் மட்டுமின்றி அலுவலகங்களைக்கூட அலங்கரிக்கின்றனர். பொதுவாக டிசைனிங் படிப்புகள் பற்றியும் அதன் வேலைவாய்ப்பு பற்றியும் பலருக்கும் அறிமுகம் இருந்தும் முழுமையான விவரம் தெரிவதே இல்லை.

இதனால்தான், இன்றளவும் பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு மாணவர்கள் சாரைசாரையாக படையெடுத்துவருகின்றனர். ஆனால், டிசைனிங் படித்தவர்களுக்கு ஆரம்ப சம்பளமே பல ஆயிரங்களில் தொடங்குகிறது. தவிர, புதுவிதமான டிசைன்களை உருவாக்குபவர்கள் காப்புரிமை பெற்று நிலையான வருமானமும் ஈட்டமுடியும்.

பொதுவாக 10 மற்றும் +2 முடிக்கும் மாணவர்கள் கற்பனை வளம், ஓவியத்திறமை கொண்டவர்கள் ஆர்க்கிடெக்சர், ஃபேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளையே தேர்வு செய்வார்கள். இதைத் தவிர்த்து டிசைனிங் துறையில் பல்வேறு படிப்புகள் இருக்கின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை. டிசைனிங் ஏரியாவைப் பொறுத்தவரை கிராஃபிக் டிசைனிங், வெப் டிசைனிங், 3டி அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், இன்டீரியர் டிசைனிங் என நிறைய ஏரியாக்கள் உள்ளன.

ஏன் இப்படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இன்டீரியர் டிசைனிங் நமது வீட்டை அழகாக வடிவமைக்கவும், மேலும் அழகுபடுத்த வேண்டும் என்று எண்ணும் சமயங்களில் தான் ஆர்க்கிடெக்டுகளும் இன்டீரியர் டெகரேட்டர்களும் தேவைப்படுகிறார்கள். இந்த வகையான படிப்புகள் முன்பெல்லாம் பெரிய பெரிய அரண்மனை, மாளிகை, சொகுசுக் கப்பல் போன்றவற்றில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால், தற்போது ஐஸ்கிரீம் கடைகளிலிருந்து, ஃபாஸ்ட் ஃபுட் கடை வரை எங்கும் வியாபித்திருக்கிறது இன்டீரியர் டிசைனிங். இந்த வகையான படிப்பு களுக்கும் சந்தையில் மவுசு கொஞ்சம்கூட குறைந்தபாடில்லை.

வேலைவாய்ப்புகள்

இன்டீரியர் டிசைன் படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. விளம்பர நிறுவனங்கள், தொழில் உற்பத்தி நிறுவனங்கள், ஃபர்னிச்சர் நிறுவனங்கள், வர்த்தக மேம்பாட்டு நிறுவனங்கள், இன்டீரியர் டிசைன் நிறுவனங்கள், சானிட்டரிவேர் நிறுவனங்கள், கண்ணாடிப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள்... இப்படி பல்வேறு நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

இப்படிப்புகளைப் படித்த மாணவர்கள் இன்றைக்கு தொழில் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். சொந்தத் தொழில் செய்ய திறமைகளையும் மற்றும் இன்டீரியர் சம்பந்தமான கம்பெனிகளிலும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவேதான், இந்தப் படிப்பில் சேருவதில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இப்படிப்பில் சேர ஓவியத் திறமையும் படைப்பாக்க ஆற்றலும் தேவை.

இன்டீரியர் டிசைன் படிப்புகள்

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஒவ்வொரு வகையிலான பாடப்பிரிவுகள் உள்ளன. குறிப்பாக செராமிக் அண்ட் கிளாஸ் டிசைன், ஃபர்னிச்சர் அண்ட் இன்டீரியர் டிசைன், புராடக்ட் டிசைன், அனிமேஷன் ஃபிலிம் டிசைன், எக்ஸிபிஷன் டிசைன், ஃபிலிம் அண்ட் வீடியோ கம்யூனிக்கேஷன், கிராபிக் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏராளமான சிறப்புப் பாடங்கள் உள்ளன.

முதல் இரண்டு செமஸ்டர்கள் அதாவது, ஓராண்டு அடிப்படைப் பயிற்சியும் அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறப்புப் பாடங்களில் பயிற்சியும் அளிக்கப்
படுகிறது. B.Sc.., Interior Design, Diploma in Interior Design, Construction Project Management, Interior Project Management, Short Term Certificate Courses-களும் உள்ளன.

இப்படிப்புக்கு புதுமையான முறையில் சிந்தித்தல், ஆர்வம் மற்றும் பொருட்களை சிறந்த முறையில் கையாளுதல் போன்றவை அவசியம். இப்படிப்பை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றில் சேருவதற்கான கல்வித் தகுதி பற்றிப் பார்க்கலாம்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டிசைனிங்

ஒடிசாவில் உள்ள இக்கல்வி நிறுவனம், இன்டீரியர் டிசைனிங் துறையில் மூன்று வருட இளங்கலைப் படிப்பு மற்றும் ஒரு வருடத் தொழிற் படிப்புகளை வழங்குகிறது.

கல்வித் தகுதி:

+2வில், 45 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி. ஆர்க் அகாடெமி ஆஃப் டிசைன் - ஜெய்ப்பூரில் உள்ள இக்கல்வி நிறுவனம் இன்டீரியர் டிசைனிங் துறையில் இரண்டு ஆண்டு முதுகலைப் படிப்பு மற்றும் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது.

கல்வித் தகுதி:

டிப்ளமோ படிப்பிற்கு +2வில் தேர்ச்சி, முதுகலைப் படிப்பிற்கு டிப்ளமோவில் தேர்ச்சி. நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

வோக் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி

பெங்களூருவில் உள்ள இக்கல்வி நிறுவனம் டிசைனிங் துறையில் மூன்று ஆண்டு பி.எஸ்சி., படிப்பு மற்றும் ஓர் ஆண்டு டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது.
கல்வித் தகுதி: இப்படிப்பிற்கு +2வில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி.

ஏபிஜே. இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனிங்

டெல்லியில் உள்ள இக்கல்வி நிறுவனம் டிசைனிங் துறையில் மூன்று ஆண்டு டிப்ளமோ மற்றும் முதுகலையில் ஓர் ஆண்டு டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது.

கல்வித்தகுதி:

+2வில் 45 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி.

ராப்ளீஸ் மில்லினியம் இன்டர்நேஷனல்

சென்னை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள இக்கல்வி நிறுவனம் டிசைனிங் துறையில் மூன்று ஆண்டு
பட்டப்படிப்பை வழங்குகிறது.

கல்வித் தகுதி:

இப்படிப்பிற்கு +2வில் தேர்ச்சி.

இன்டீரியர் டிசைன் படிப்பு பற்றி மேலும் விவரங்களுக்கு 9655700800 மற்றும் 96556008000 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இந்தப் பகுதியில் பிளஸ் 2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்ற அடிப்படையில் உடனடி வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழில்நுட்பப் படிப்புகளாக தேர்வு செய்து கட்டுரைகளை கொடுத்துவந்தோம். நிச்சயம் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.

- தோ.திருத்துவராஜ்

X