வந்தாச்சு குழந்தைகளுக்கான Google!

3/7/2016 3:34:26 PM

வந்தாச்சு குழந்தைகளுக்கான Google!

உங்கள் வீட்டில் குழந்தைகள் இணைய தளத்தை பயன்படுத்துகிறார்களா? எங்கே தவறான தளங்களுக்கு சென்று திசை மாறி சென்று விடுவார்களோ என மனம் துடிக்கிறதா? கவலையை விடுங்கள். உங்கள் அச்சத்தை போக்குவதற்காகவே வந்திருக்கிறது kiddle தேடு பொறி. பெயர் புதிதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள். ‘கூகுள்’ போன்றதுதான் இந்த ‘கிட்டில்’. இணைய வசதி என்பது இன்றைய தேதிகளில் அடிப்படை தேவைகளில் ஒன்று. குறிப்பாக சிறுவர்/  சிறுமிகளுக்கு. என்றாலும் எந்த அளவுக்கு இணையம் அறிவையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறதோ அதே அளவுக்கு நைசாக நச்சையும் விதைக்கிறது. அந்த  அளவுக்கு பலான விஷயங்கள் இணையத்தில் பரவிக் கிடக்கின்றன. சிறுவர்கள் தாமாக தேடிச் செல்லாவிட்டாலும், அவர்கள் தேடும் சொற்களில் ஒன்றாக -  பத்தோடு பதினொன்றாக - நச்சு தளங்களும் தோன்றிவிடுகின்றன. இதையெல்லாம் மனதில் கொண்டுதான் ‘கிட்டில்’ உருவாகி இருக்கிறது.

குழந்தைகளுக்கான கூகுள் என்று கூறப்படும் இந்த தேடுதளம்; தேடுகிற மூலச்சொற்களின் தேடல் முடிவுகளை, குழந்தைகளுக்கு ஏற்றவாறு வடிகட்டி  அனுப்புகிறது. இது எந்த அளவுக்கு என்றால் - ஆபாசமானச் சொற்களோ, வன்முறையானச் சொற்களோ இந்த தேடல் பொறியில் தேடப்பட்டால், ‘உங்கள் தேடல்  தவறான சொற்களைக் கொண்டுள்ளது. தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்’ என்று பதிலளிக்கிறது! அத்துடன் குழந்தைகளின் கல்விக்குத் துணை புரியும்  நோக்கில், தேடல் முடிவுகள் வடிவமைக்கப்படுள்ளன. உதாரணமாக, ‘ஃபேஸ்புக்’ என்று தேடினால் அந்த இணையதளத்தின் உரலியை (URL) முதலில்  காட்டாமல், ‘ஃபேஸ்புக்’ குறித்த நடப்புச் செய்திகளையோ, அதில் பிரபலமாகியுள்ள சாதனை மாணவர்களையோ, அது குறித்த ஊடகத் தகவல்களையோ,  முதன்மைப்படுத்துகிறது இந்தத் தேடுபொறி. குழந்தைகளை ஈர்க்கும் விதமாக விண்வெளி அமைப்பு; ஏலியன் அனிமேஷன் எனக் கலக்குகிறது ‘கிட்டில்’.  முக்கியமான விஷயம் - 24 மணி நேரத்துக்கு ஒரு முறை தன் தேடுதல் பதிவுகளை அழித்து விடுகிறது ‘கிட்டில்’. நல்ல விஷயம்தான் இல்லையா?!

- ஜான்சி

X