கல்விக்கு உதவும் கலக்கல் ஆப்ஸ்!

3/19/2016 10:51:30 AM

கல்விக்கு உதவும் கலக்கல் ஆப்ஸ்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

ஆப்ஸ் இன்றி ஓர் அணுவும் அசையாது என்றாகிவிட்டது இன்றைய நிலை. வாசல் தெளிப்பதில் துவங்கும் தமிழர் வாழ்வு, இன்று  வாட்ஸ்அப் பார்ப்பதில் துவங்குகிறது. கிராமங்களில் இருந்து நேராக இன்ஸ்டாகிராமுக்குள் குதித்துவிட்டோம். அதேபோலத்தான்  தெருமுக்கில் இருந்து ஃபேஸ்புக்! இந்த மாற்றம் நம்மில் சிலருக்கு கசக்கலாம். ஆனால், நாம் நினைக்கும் அளவுக்கு இந்தத் தொழில்நுட்பப்  புரட்சி முற்றிலும் கெட்ட விஷயம் அல்ல. கேளிக்கைகளுக்கு உதவும் அதே ஸ்மார்ட் போன் ஆப்கள், இளைஞர்களின் கல்விக்கும்,  வேலைக்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் உதவுகின்றன. அப்படிச் சில ஆண்ட்ராய்டு ஆப்கள் இங்கே...
கல்வியை நேசிக்க...


BYJU’S
முகநூலில் ஆறரை லட்சம் லைக்ஸ் பெற்ற இந்தியாவின் சிறந்த கல்வி ஆப் இது. சிறு சிறு வீடியோக்கள் மூலம் கணிதம் மற்றும் அறிவியல்  தொடர்பான அடிப்படைகளை சிம்பிளாகப் புரியவைத்து விடுவது இவர்களின் ஸ்பெஷாலிட்டி. பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர்கள்  உருவாக்கும் இந்த வீடியோக்கள் யூடியூபிலேயே கிடைக்கின்றன. ஆனாலும் மாதிரி வினாத்தாள், ஆன்லைன் பயிற்சித் தேர்வுகள் போன்றவை  ஆப் மூலமே கிடைக்கும். Fall in Love with learning என்ற முழக்கத்தோடு துவங்கும் இந்த ஆப், நிஜமாகவே கல்வியை நேசிக்க வைக்கும்!
https://play.google.com/store/apps/details?id=com.byjus.thelearningapp

பொது அறிவுக்கு...
GK Current Affair for SSC,IBPS
போட்டித் தேர்வு எழுதுகிறவர்கள் நிகழ்கால செய்திகள் குறித்த கேள்விகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதற்காக பேப்பரைத் திறந்தால்  கொலை, கொள்ளை எனத் தேவையில்லாதவை வந்து கவனத்தைத் திருப்பும். இதற்குத் தீர்வுதான் இந்த ஆப். செய்திகளில் படிப்புக்குத்  தேவையானவை எவை என மிகச் சரியாக வடிகட்டி அதை மட்டும் தரும். அதுவும் வங்கிப்பணிகளுக்கு எது தேவை, ஆட்சிப்பணிகளுக்கு  எது தேவை என வகை பிரித்து வைத்திருப்பதால் SSC (CGL, CHSL, 10+2), IBPS, UPSC, Railways, Insurance, GATE என எல்லா  தேர்வுகளுக்கும் தயாராக முடியும். ஒரே குறை, இப்போதைக்கு இது இந்தி, ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது.
https://play.google.com/store/apps/details?id=com.hinkhoj.questionbank

கணக்கு விளையாட்டு...
Math Tricks
கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்கிற மாணவரா நீங்கள்? அந்தக் கணக்கே ஒரு விளையாட்டாகி சுவாரஸ்யம் கூட்டினால்  விளையாடாமலா போவீர்கள்? அதைத்தான் செய்கிறது இந்த ஆப். அடிப்படையான கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கலில் உள்ள குறுக்கு  வழிகளைச் சொல்லிக் கொடுத்து அதையே விளையாட்டாக்கி ஸ்கோர் செய்ய வைக்கிறது. அடுத்தடுத்த லெவல்களில் ஸ்கொயர் நம்பர்கள்,  இரட்டை இலக்க எண்களை பெருக்குவது, சதவிகிதம் கண்டுபிடித்தல் என விவகாரமான கணக்குகளை விளையாட்டாக்கி அசத்துகிறது.
https://play.google.com/store/apps/details?id=example.matharithmetics

போட்டித் தேர்வுக்கு...
GradeUp - Exam Preparation
போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கென்றே வெட்டித் தைத்த ஆப் இது. நீங்கள் IBPS, LIC, SSC, GATE ஆகிய தேர்வுகளுக்குத்  தயாராகிறவர் என்றால் கட்டாயம் இந்த ஆப் உங்கள் வசம் இருக்க வேண்டும். இந்தத் தேர்வுகள் குறித்த எல்லா அறிவிப்புகளையும் இந்த  ஆப் உடனுக்குடன் வழங்கி உங்களை அலர்ட் செய்யும். அத்தோடு அடிக்கடி குட்டிக் குட்டி தேர்வுகளையும் நடத்தி இன்ஸ்டன்ட் ரிசல்ட்  தரும். இதன் மூலம் நாம் எந்த அளவுக்கு தேர்வுக்கு தயார் நிலையில் இருக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details?id=co.gradeup.android

ஆப்டிடியூடில் அசத்த...
Aptitude Test and Preparation
பெரிய பெரிய போட்டித் தேர்வுகள் மட்டுமல்ல... இப்போதெல்லாம் சின்னதொரு தனியார் நிறுவனத்துக்கு இன்டர்வியூ போனால் கூட  ஆப்டிடியூட் கேள்விகள் கேட்கிறார்கள். ஆப்டிடியூட் எனும் அக்னிபரீட்சையைக் கடக்காமல் எந்த வேலையும் இல்லை என்ற நிலையில் அந்த  ஆப்டிடியூட்டில் நம்மைப் பட்டை தீட்ட உதவுகிறது இந்த ஆப். சுமார் 37 வகையான ஆப்டிடியூட் கேள்விகள் இதில் இடம்பெற்றுள்ளன.  நாம் விரும்பும் நேரத்தில் இந்த ஆப் மூலமாக பயிற்சித் தேர்வுகள் எழுதலாம். புகழ் பெற்ற போட்டித் தேர்வு
களில் இதுவரை கேட்கப்பட்ட ஆப்டிடியூட் கேள்விகளும் தொகுப்பும் இதில் உண்டு!
https://play.google.com/store/apps/details?id=nithra.math.aptitude

ஆங்கிலம் சரளமாக...
360 தமிழ் Spoken English 360 Tamil
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கற்றுத்தருவதற்கு ஆயிரக்கணக்கில் ஆப்ஸ் உள்ளன. ஆனால், தமிழ் வழியாகக்
கற்றுத் தரும் ஆப்களில் இது முக்கிய இடம் வகிக்கிறது. அதிகம் பயன்படும் ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும்  இதில் அறியலாம். அது தவிர, முக்கிய தமிழ் வார்த்தைகளுக்காக ஆங்கில பொருள். ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்பு போன்றவற்றையும் இது  வழங்கும். https://play.google.com/store/apps/details?id=com.bigknol.spokenenglishtamil&hl=en

நேர்முகத் தேர்வுக்கு...
HR Interview Preparation Guide
நேர்முகத் தேர்வுகளுக்கு உங்களைத் தயார்படுத்துவதற்காகவே கிடைக்கும் அசத்தல் ஆப் இது. அதிகம் கேட்கப்படும் கேள்விகளும் அதற்குத்  தர வேண்டிய சிறந்த பதில்களும் இதில் நூற்றுக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன. இது தவிர குரூப் டிஸ்கஷன்களுக்கான பாப்புலர்  தலைப்புகளும் நேர்முகத் தேர்வுகளுக்காக பயனுள்ள டிப்ஸ்களும் இங்கே உண்டு. இணையம் மூலமாக கேள்விகளையும் பதில்களையும்  டிப்ஸையும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்ளும் இந்த ஆப், மற்ற நேரங்களில் இணையத்தைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க  ஆஃப்லைனில் இயங்குகிறது.
https://play.google.com/store/apps/details?id=com.madguy.hrquestions

வேலை தேட...
Freshersworld Jobs Search
படித்து முடித்து வேலை தேடுகிறவர்களுக்கு இது ஆப் அல்ல... ஆபத்பாந்தவன். வேலை தேடுதலுக்காகவே இயங்கும் பல்வேறு  இணையதளங்களில் இருந்து நமக்குப் பொருத்தமான வேலைகளை வடிகட்டி அவ்வப்போது நமக்கு அலர்ட் செய்கிறது இந்த செயலி. பகுதி  நேரம், முழுநேரம், இன்டர்ன்ஷிப் என வகை பிரித்துக்கொண்டு நமக்கு வேண்டிய வேலைகளை இது பட்டியலிட்டுக் காட்டும். நம் பெயரை  பதிவு செய்து ரெஸ்யூமையும் இதில் ஏற்றி வைத்திருந்தால் வேலைகளுக்கு விண்ணப்பிப்பது செம ஈஸி!
https://play.google.com/store/apps/details?id=com.freshersworld.jobs

டி.என்.பி.எஸ்.சியில் ஜெயிக்க...
TNPSC Tamil
இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு எக்கச்சக்க வழிகாட்டுதல்கள் உண்டு. ஆக, ஒப்பீட்டளவில் நம் தமிழ்நாட்டுக்குள் நடக்கும்  டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு ஆப்கள் மிகக் குறைவே. அந்த வகையில் அதிகம் போட்டியின்றி முன்னிலை வகிக்கிறது இந்த ஆப்.  டி.என்.பி.எஸ்.சி தேர்வு பற்றிய அடிப்படைத் தகவல்கள், அதற்கான சிலபஸ், தினந்தோறும் பயிற்சித் தேர்வு, மாதிரி வினாத்தாள், பள்ளிப்  பாடங்களில் இருந்து குறிப்புதவிகள் என அத்தனையும் இதில் வரிசை கட்டி நிற்கின்றன. தமிழகத்தின் முன்னணிப் போட்டித் தேர்வுக்கு  முதன்மையான வழிகாட்டி!
https://play.google.com/store/apps/details?id=nithra.tnpsc

மென்பொருள் கற்க...
C Programming
கணினி பொறியியல் படிப்பவர்களின் சிம்ம சொப்பனம், C Programming. தலையணை சைஸுக்கு விஸ்வரூபம் எடுத்து மிரட்டும் அந்தப்  புத்தகத்தைப் பார்த்தாலே பயம் வரும். அந்த பயத்தைப் போக்கி C பிரோகிராமிங் மொழியைப் புரிய வைக்கிறது இந்த ஆப். கேள்வி பதில்  வடிவிலான  விளங்கங்கள், மென்பொருள் உருவாக்கத்துக்கான கட்டளைகள், முக்கியமான தேர்வுக் கேள்விகள் என சகலமும் இதன் வசம்  உண்டு. ஒரே க்ளிக் மூலம் இதில் இருக்கும் விளக்கங்களையும் மென்பொருள் உருவாக்கங்களையும் நண்பர்களுக்கு பகிரவும் முடியும்.
https://play.google.com/store/apps/details?id=c.programming

அகராதி...
Tamil Dictionary
எல்லோருக்கும் எப்போதும் கைவசம் இருக்க வேண்டியது தமிழ் - ஆங்கில அகராதி. அதை ஆண்ட்ராய்டு போனுக்குள்ளேயே அடக்கித்தரும்  ஆப் இது. தமிழ்ச்சொல்லுக்கு ஆங்கிலம் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்... இரண்டுமே இதில் கிடைக்கும். இதைத்தான் கூகுளில் தேடலாமே  என நினைக்க வேண்டாம். அதற்கு இணையம் வேண்டும். இது முழுக்க முழுக்க ஆஃப்லைனில் இயங்கும் ஆப். இணைய இணைப்பே  இதற்கு தேவையில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள லட்சக்கணக்கான சொற்களை வெறும் 13 மெகாபைட் அளவுக்குள்  அடக்கியிருப்பது அபாரம். உச்சரிப்பு சரிபார்ப்பு, குரல் வழித் தேடல் என இதில் மேலதிக வசதிகளும் எக்கச்சக்கம்!
https://play.google.com/store/apps/details?id=com.dictionary.ta

குறிப்பு: இங்கு தரப்புள்ள ஆப்கள் அனைத்தும் இலவசமானவை. எத்தனை பேர் பதிவிறக்கிப் பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணிக்கையின்  அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை.
                                                                             

                                                                                                       - கோகுலவாச நவநீதன்

X