சைபர் செக்யூரிட்டி படிப்புகளும் அவசியமும்!

9/25/2017 2:34:26 PM

சைபர் செக்யூரிட்டி படிப்புகளும் அவசியமும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

கல்வி, விளையாட்டு, தொழில், வணிகம், வங்கி மேலாண்மை, சிறு, குறு, பெரு தொழிற்சாலைகளின் மேலாண்மை, அறிவியல் ஆய்வுகள், வரலாறு, புவியியல், விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மை, கடல்சார் ஆய்வுகள், விண்வெளி ஆய்வு, செய்தித் தொடர்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுமே கணினியின் பயன்பாடு தவிர்க்க இயலாதது. அதே சமயம் அன்றாடம் எண்ணிலடங்கா நவீன யுக்திகள் கணினியின் வன், மென் பொருட்களிலும் மற்றும் கணினி சார் துறைகளிலும் வந்தவண்ணம் உள்ளன.

கணினித்துறை துல்லியம், அதிவேகம், நவீனம், எளிய பயன்பாடு, நேர மேலாண்மை என்ற பல்வேறு சிறப்புக் கூறுகளைப் பெற்றுள்ளது உண்மையென்றாலும், இதற்கு நேர்மாறாக இத்துறையின் பயன்பாட்டில் பல்வேறு காரணங்களால் பாதுகாப்பின்மையும், சிக்கல்களும், தவறுதலாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை.

கம்ப்யூட்டர் புரோகிராம்கள் சமூக விரோதிகளால் தவறுதலாகப் பயன்படுத்தப்படும் நிகழ்வுகளும் அதிகமாக உள்ளன. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பல நன்மைகளைச் செய்தாலும், இவற்றால் விளையும் சமூகச் சீரழிவுகளைத் தடுக்க இயலவில்லை. பல தகவல்கள் தவறான நோக்கத்துடன் பரப்பப்படுகின்றன. கணினி வைரஸ்கள் நமது கணினியின் விவரங்களை அழித்துவிடுகின்றன என்பது மட்டுமின்றி கணினி வன்பொருளையும் பாதித்துவிடுகின்றன என்பது நாடறிந்த செய்தி. வங்கிகளில் ஏற்படுகின்ற பொருளாதாரக் குற்றங்கள் கணினியைத் தவறான விதத்தில் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றன.

கணினியின் வன்பொருள் (Hardware), மென்பொருள் (Software), கணினியில் சேமிக்கப்பட்டுள்ள விவரங்கள், நெட்வொர்க் இவை தவறாகப் பயன்படுத்தப்படாமலும், சிதைக்கப்படாமலும் இருக்க ஏற்படுத்த வேண்டிய முன்னெச்சரிக்கையும், பாதுகாப்புமே சைபர் செக்யூரிட்டியாகும்.
கணினி வன், மென் பொருள்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தன்னிச்சையாகவோ, மின் கசிவாலோ, மின்னழுத்த வேறுபாட்டாலோ மாறாகத் தவறான நோக்கம் கொண்டவர்களின் திட்டத்தாலோ நடக்கலாம்.

தற்போது கணினியுடன், இன்டர்நெட் (Internet), புளுடூத் (Bluetooth), வைஃபை (Wi-Fi), ஸ்மார்ட்போன் (Smartphone), தொலைக்காட்சிகள் (Televisions) உள்ளிட்ட வொயர்லெஸ் நெட்வொர்க் கருவிகள் (Wireless Network Devices) அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிற்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தாவிடில் இவை அனைத்துமே பல்வேறு சிக்கல்களுக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

என்னென்ன சிக்கல்கள்?
பேக் டோர் (Back door) எனப்படும் அல்காரிதம் (Algorithm) அல்லது கிரிப்டோ சிஸ்டத்தால் (Crypto System) கணினி ரகசியங்கள் உடைக்கப்பட்டு பாதுகாப்பின்மையால் பாழாக்கப்படுகின்றன. டினையல் ஆஃப் சர்வீஸ் அட்டாக் (Denial of Service Attack) என்ற முறையால் கணினியில் உள்ள மிக முக்கிய விவரங்கள் தவறான நோக்கம் உள்ளவர்களால் திருடப்படும்.

ஆபரேட்டிங் சிஸ்டத்தை (Operating System) வசதிக்கேற்ப மாற்றி, ஒரு கணினியில் உள்ள விவரங்களை வேறு கணினிக்கு மாற்றுதல், ஏவஸ்டிராப்பிங் (Eavesdropping) என்றும், மற்றவர் தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக் கேட்டல், விவரங்களைத் திருடி மற்றவர்களுக்கு ஸ்பூஃபிங் (Spoofing) செய்தல், கணினி வர்த்தகப் பொருள்களை டேம்பர் (Tamper) செய்தல், அனுமதியின்றி மற்றவர் கணினியின் மென்பொருளை எஸ்கலேசன் (Privilege Escalation) செய்தல், மற்றவர்களின் யூசர் நேம் (User Name), பாஸ்வேர்டு (Password), கிரெடிட் கார்டு (Credit card) விவரங்கள் இவற்றை அவர்கள் அறியாமல் திருடுதல், ஹைஜாக் (Hijack) செய்தல், சோஷியல் எஞ்சினியரிங் முறையில் (Social Engineering) மற்றவர்களின் கணினி ரகசிய விவரங்களை தரச் செய்தல் போன்ற கணினிக் குற்றங்கள் அன்றாடம் நடைபெற்றுவரும் நாம் அனைவரும் அறிந்த செய்தி.

இதுபோன்ற கணினிக் குற்றங்களால் பல நிறுவனங்கள், தனிநபர்கள் என பல தரப்பினருக்கும் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் கல்வி நிறுவனங்கள் மருத்துவ மனைகள், வங்கிகள், தொழிற்சாலைகள், காவல் புலனாய்வு அமலாக்கத்துறை, குற்றத்தடயவியல் துறைகள் மற்றும் அரசு பொதுத்துறை, தனியார் நிறுவனங்களின் கணினித் துறைகள் பெரும் சவால்களைச் சந்திக்கின்றன. இச்சிக்கல்களிலிருந்து கணினி மென், வன் பொருள்களை காக்க Cyber Security படிப்புகள் நிறைய கற்பிக்கப்படுகின்றன.

சைபர் செக்யூரிட்டி படிப்புகளில் என்ன கற்றுக் கொடுக்கப்படுகின்றன?
சைபர் செக்யூரிட்டி படிப்புகளில் குற்றத் தடயங்கள், சைபர் லா அண்ட் எத்திக்ஸ், குற்றங்களைக் கண்டறியும் யுக்திகள், பாதுகாப்புக் குறியீடுகள், ஃபுட் பிரின்டிங் (Foot Printing), கோட் இன்ஜக்ஷன் (Code injection), கிராஸ் சைட் பிரின்டிங் (Cross Site Printing) இவை கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்புகளில் பாதுகாப்பாகக் கணினியைப் பயன்படுத்துதல், இன்டர்நெட் பயன்பாடு இவை கற்றுத்தரப்படும்.

இவை தவிர, அட்வான்ஸ்டு கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர், கணினி பாதிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், அட்டாக்கர் டூல்ஸ், பிளன்ட் அட்டாக்ஸ், எராடிக்கேஷன், ரெக்கவரி, கிரிப்டோகிராபி, கிரிப்டோகிராபிக் புரோட்டோகால்ஸ், டேட்டா பேஸ் செக்யூரிட்டி, டிஜிட்டல் ஹார்டுவேர் மாடலிங், டிஜிட்டல் வாட்டர் மார்க்கிங், நான்-மால்லேர் திரட்ஸ், புரோ ஆக்டிவ், ரீ-ஆக்டிவ் டிபன்சஸ், சர்வர் சாஃப்ட்வேர், டிராக்கிங் குக்கீஸ், வைரஸ், வேர்ம்ஸ், டிராஜன் ஹார்ஸங், மேலிசியல் மொபைல் கோட், வெப் டெக்னாலஜி போன்றவை கற்றுத்தரப்படும்.

என்னென்ன படிப்புகள்? எங்குள்ளன? யார் சேரலாம்?
இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டியுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் எம்.டெக். (M.Tech.) என்ற நான்கு வருடப் படிப்பு இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி - கவுஹாத்தியில் உள்ளது. இப்படிப்பிற்கு பி.டெக். (B.Tech.), A.M.I.E. அல்லது சமமான பட்டப்படிப்பு முடித்தவர் GATE மதிப்பெண்ணுடன் சேரலாம். இதே படிப்பு ABU - இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட், குவாலியரிலும் உள்ளது.

அலகாபாத்தில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் சைபர் லா அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் எம்.எஸ்சி. (M.Sc.) படிப்பு உள்ளது. இதற்கு பி.இ. (B.E.), பி.டெக். (B.Tech.), முதுநிலைப் பட்டம், எல்.எல்.பி. (L.L.B.) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி என்ற பாடத்தில் எம்.டெக். (M.Tech.) படிப்பு காலிகட், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் உள்ளது. இதற்குக் கணினி அறிவியலில் பி.இ., பி.டெக். படிப்புகளில் 60 % மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.சி.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் GATE மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்கலாம்.

எம்.டெக். படிப்புகள், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ரூர்கேலாவில் உள்ளது. இதுதவிர, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் எஞ்சினியரிங்- எட்டிமடை, கோயம்புத்தூர், அம்பேத்கார் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி- டெல்லி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் - சென்னை, கலசலிங்கம் பல்கலைக்கழகம்  விருதுநகர், ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி  ஐதராபாத், இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி  ஐதராபாத், ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ்  இந்தூர், NIT- காலிகட் ஆகிய இடங்களில் உள்ளன.

குஜராத் ஃபோரன்சிக் சயின்ஸ் யுனிவர்சிட்டி - எம்.டெக். படிப்பையும், அம்ரிதா யுனிவர்சிட்டி, கோயம்புத்தூர் - பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் அண்ட் சைபர் செக்யூரிட்டியில் எம்.இ. படிப்பையும் பயிற்றுவிக்கின்றன.

பி.டெக். படிப்பை அகமதாபாத் ரக்‌ஷா சக்தி யுனிவர்சிட்டியும், காஞ்சிபுரம் எஸ்.ஆர்.எம் (சைபர் செக்யூரிட்டி) யுனிவர்சிட்டியும் பயிற்றுவிக்கின்றன.

புரோகிராம் இன் இன்டர்நெட் இன் கிரைம் என்ற படிப்பை புனே - ஏசியன் ஸ்கூல் ஆஃப் சைபர் லா பயிற்றுவிக்கின்றது. பொதுவாக இளநிலைப் பட்டப்படிப்பிற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வழியாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவை தவிர இத்துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர் சிட்டி, யு.எஸ்.ஏ., யுனிவர்சிட்டி ஆஃப் பிரிஸ்டால், யு.கே., ஸான்ஸ் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட், மேரிலேண்ட், யு.எஸ்.ஏ. ஆகிய அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் பயிற்றுவிக்கின்றன.

சைபர் செக்யூரிட்டி முடித்தவர்கள் எதிர்காலம்?
தற்போது கணினி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்துக்கொண்டேயிருப்பதால்,  சைபர் செக்யூரிட்டி படித்தவர்கள் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் தேவை உள்ளது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் நல்ல ஊதியத்துடன் கார்பரேட் அலுவலகங்கள், வங்கிகள், அரசு நிறுவனங்கள், ஆய்வகங்கள், ஐ.பி.எம் (IBM), மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உடனடியாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

X