தவிர்க்க முடியாததாகும் சைபர் கிரைம் படிப்புகள்!

12/19/2019 2:16:34 PM

தவிர்க்க முடியாததாகும் சைபர் கிரைம் படிப்புகள்!

நன்றி குங்குமம் கல்வி - வழிகாட்டி

வழிகாட்டல்

டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில் இணையதளப் பயன்பாடும், சமூக வலைத்தளங்களின் பயன்பாடும் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற இணைய சம்பந்தமான எல்லா விஷயங்களுக்குமே ‘பாஸ்வேர்டு’ என்ற லாக் முக்கியமான ஒன்று. ஆனால், உலகளவில் இன்றைக்கு ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

இப்படிப்பட்ட சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்கான சாஃப்ட்வேர்தான் கே7 ஆண்டி வைரஸ். இதனை வழங்குவது கே7 கம்ப்யூட்டிங் நிறுவனம்தான். பெருகி வரும் சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான படிப்பின் அவசியத்தையும் அதற்கான வேலைவாய்ப்புகள் எங்கெல்லாம் இருக்கின்றது எனவும் விளக்குகிறார் கே7 கம்ப்யூட்டிங் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி கே.புருஷோத்தமன்.  

‘‘இணைய பாதுகாப்பு என்பது மாணவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய துறை. மாணவர்கள் குறிப்பாக இணைய பாதுகாப்பு தொடர்பாக அறிந்துகொள்வது அவசியம். அப்படி அவர்கள் தெரிந்துகொண்டால்தான் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள முடியும். இணைய பாதுகாப்பு என்பது இன்றைய சூழலில் மிகவும் அவசியமான துறையாகும்.

ஒரு காலத்தில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங், எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங், சிவில் எஞ்சினியரிங் ஆகிய படிப்புகள் இருந்தன. அதனைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்பம் மற்றும் மெக்கானிக்கல் துறையில் மெக்கட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக்கல் உள்ளிட்ட சிறப்புப் படிப்புகள் வந்தன.

தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின்போது அது தொடர்பான கற்பித்தலுக்கு என்.ஐ.டி., எஸ்.எஸ்.ஐ. போன்ற கல்வி நிறுவனங்கள் இருந்தன. அவர்கள் கம்ப்யூட்டர் தொடர்பான அடிப்படை மற்றும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் புரோகிராமிங் உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுத்தனர். அதைத் தாண்டி தற்போது தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது’’ என்று சொல்லும் புருஷோத்தமன் வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.

‘‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), மெஷின்நானி போன்று தற்போது இணைய பாதுகாப்பும் அதிகவேக வளர்ச்சி அடைந்துள்ளது. இணைய பாதுகாப்பு என்பது ஒரு தனித்துறையாகும். இதில் இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள்ளது.

மிகப்பெரிய நிறுவனங்களான டி.சி.எஸ், காக்னிசென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைய பாதுகாப்பு தொடர்பான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் பணியில் இறங்கியுள்ளன. இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். ஆனால் இணைய பாதுகாப்பு தொடர்பாகக் கல்லூரிகளில் தனியான ஒரு பாடப்பிரிவு இல்லை. சில நிகர்நிலைப் பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் மட்டுமே இணைய பாதுகாப்பு ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது.

கே7 கம்ப்யூட்டிங் முற்றிலும் இணைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனம். எங்கள் நிறுவனம் 28 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் நிறுவனமாதலால் இது தொடர்பான படிப்புகளைக் கற்றுக்கொடுப்பதோடு, சில கல்லூரிகளுடன் இணைந்து இது தொடர்பாக பயிற்சி வகுப்புகளை நாங்கள் அக்கல்லூரிகளில் நடத்திவருகிறோம்.

இது ஒரு நீண்ட பயிற்சியாகும். இதில் சேர விரும்பும் மாணவர்கள் முதலில் கம்ப்யூட்டர் தொடர்பான அடிப்படை அறிவோடு புரோகிராமிங் தொடர்பாகவும் அறிந்து வைத்திருப்பது அவசியம். மேலும் இணைய பாதுகாப்பு தொடர்பாக தெரிந்து வைத்திருப்பதோடு, இதில் அதிக அளவு ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

இதற்காக பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.இ., படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. குறிப்பாக இணைய பாதுகாப்பு மீது ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இதற்கான தகுதி வரைமுறை என்று எதுவும் இல்லை. நமது தமிழக தொழில்நுட்பத்துறை செயலாளர் ஒரு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் ஆவார்.  ஆனால், அவருக்கு இணைய பாதுகாப்பு மீது அதிக ஆர்வம் இருக்கிறது. இதேபோல் ஏராளமான ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இணைய பாதுகாப்பு தொடர்பாக அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இணைய பாதுகாப்பு தொடர்பாக யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்களெல்லாம் படிக்கலாம். பலர் இது தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்வதற்காகப் படிப்பார்கள். பலர் வேலை வாய்ப்பிற்காக படிப்பார்கள். சிலர் அவர்கள் வேலை செய்யும் துறையில் மேலும் அறிந்துகொள்வதற்காகப் படிப்பார்கள்.

வரும் காலங்களில் அரசாங்கங்கள், இந்தத் துறையில் 3.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்ய உள்ளன. தற்போது ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் இணைய பாதுகாப்புக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.

முதல்முறையாக இந்தியாவில் இணைய பாதுகாப்பிற்காக தலைமை நிர்வாக அதிகாரியை அரசு நியமித்துள்ளது. இந்தத் துறை மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. இதன் காரணமாக இதில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் சூழல் உள்ளது.’’ என்கிறார் புருஷோத்தமன்.

‘‘சென்னை, ஐதராபாத், பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இதற்கான தேவை அதிக அளவில் இருக்கிறது. தற்போதைய தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி காரணமாக இணைய பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இணைய பாதுகாப்பு என்பது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் சிறு ஓட்டல்கள் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அவசியம் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனிநபர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்கும் அவசியமானது. ஆப்கள் மூலமான கிரைம்கள் அதிகமாகிவிட்டதால் செல்போன்களின் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஊடகச் செய்திகளில் வரும் சைபர் கிரைம் செய்திகள் வித்தியாசமாகவும் வினோதமானவையாகவும் உள்ளன.

சைபர் கிரைம் நிகழாமல் தடுக்கவும், நிகழ்ந்த குற்றங்களை செய்த குற்றவாளிகளைக் கண்டறியவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது சைபர் கிரைம் துறை. இணைய பாதுகாப்பு இருக்கும்வரைதான் நமது தரவுகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘கே7 கம்ப்யூட்டிங் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சிறந்த தலைமை தகவல் அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் தலைமை தகவல் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள்.

அவர்களின் முக்கியப் பணி அந்தந்த நிறுவனங்களிலுள்ள கம்ப்யூட்டர்கள், தரவுகளை பாதுகாப்பாக பராமரிப்பதாகும். அதுபோன்ற அதிகாரிகளை விருது பெற விண்ணப்பிக்கச் செய்து, அவர்களை நடுவர் மூலம் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு 17 பேர் விருது பெற்றனர்’’ என்றும் தெரிவித்தார்.

- தோ.திருத்துவராஜ்

X