5 பிரதமர்களையும் நோபல் வெற்றியாளர்களையும் தந்த சிட்னி பல்கலைக்கழகம்

5/5/2017 5:28:31 PM

5 பிரதமர்களையும் நோபல் வெற்றியாளர்களையும் தந்த சிட்னி பல்கலைக்கழகம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் இயங்கிவருகின்றன. ஆனாலும் மாணவர்கள் தங்களின் உயர்கல்விக்குத் தரமான கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் எங்குள்ளன, அங்குச் சென்று படிப்பதனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் திட்டமிட்டுதான் செல்கிறார்கள். அப்படித் திட்டமிட்டால்தான் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அவர்களின் வாழ்க்கையும் வளமாகும். சர்வதேச அளவில் இளநிலைப் பட்டம் முதல் பல்வேறு ஆய்வுப் படிப்பு களைக் கொண்டுள்ள பல்கலைக்கழகங்களை அவற்றின் உள்கட்டமைப்பு, கல்வி போதிக்கும் முறை, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், அடிப்படை வசதிகள் போன்றவற்றைக்கொண்டே தரவரிசைப் பட்டியல்கள் உருவாக்கப்படுகின்றன.

அந்த அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றித் தொடர்ந்து பார்த்துவருகிறோம். இதில் ஆய்வுப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் அங்கு உள்ள பாடத்திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக வழங்கிவருகிறோம்.

சர்வதேசத் தரம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆஸ்திரேலியாவில் முன்னணியில் உள்ள 10 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இதுவரை நான்கு பல்கலைக்கழகங்களைப் பற்றிப் பார்த்துள்ளோம். ஐந்தாவது இடத்தில் உள்ள University of Sydney பற்றி இனி பார்ப்போம்.சிட்னி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவிலுள்ள மிகச்சிறந்த  பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் அமைந்துள்ளது. 1850-ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகம் இதுதான். இங்கு இளநிலை, முதுநிலை, ஆய்வுப் படிப்புகளுக்கென ஒட்டுமொத்தமாக 16 துறைகள் உள்ளன. இங்குப் படிக்கும் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 60,000 பேர். அதில் இளநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 32,393 பேரும், முதுநிலை பட்டம் படிக்கும் மாணவர்கள் 16,627 பேரும் உள்ளனர். இங்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட மொத்தம் 6400 பேர் பணிபுரிகின்றனர்.

இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 5 நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர். இங்குப் படித்தவர்கள் 5 பேர் பிரதமராகவும், 24 பேர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும் இருந்துள்ளனர். திறன்மிக்க மாணவர்களாக வரமுடியும் என்பதற்காகவும் உயர்தரமான கல்விமுறை, தொழில்நுட்பம், ஆய்வுகளுக்கான வழிகாட்டுதல்கள் இங்குக் கிடைப்பதாலும், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகமாக உள்ளதாலும், வேலைவாய்ப்புகளை எளிதில் பெற்றுத் தரக்கூடிய அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகமாக உள்ளதாலும் மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தைப் பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள்.

மேலும் இந்தப் பல்கலைக்கழகம் உள்ள சிட்னி நகரம் பிரபலமான துறைமுகம், கடற்கரை, தேசியப் பூங்காக்களுடன் போக்குவரத்து வசதி உள்ளிட்ட எல்லா வசதிகளும் கொண்டதாக இருப்பதால் வாழ்வதற்கு ஏற்ற நகரமாக உள்ளதாலும் மாணவர்கள் சிட்னி பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்கிறார்கள்.

இங்கு வழங்கப்படும் பாடத்திட்டங்களில் Business & Economics,Life Sciences,Arts & Humanities,Engineering & Technology,Social Sciences,Computer Sciences,Clinical,pre-clinical & health ஆகியவை இந்தப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பாடத்திட்டங்களாகும்.இங்குப் படிக்கும் மாணவர்களுக்குப் பொழுதுபோக்கிற்கு 200 மனமகிழ்மன்றங்கள் உள்ளன. இவற்றின் மூலமாக மாணவர்களின் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கவும், அவர்களுக்குப் பிடித்த விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

உதாரணமாக, உடற்பயிற்சி, கிரிக்கெட், இசைப் பயிற்சி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைச் சொல்லலாம். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றது. மேலும் மாணவரை விமான நிலையத்திலிருந்து  அழைத்துவருவது முதல் கடனுதவி பெறுவதிலிருந்து தங்கும் இடவசதி வரை பல்வேறு வசதிகளையும் பல்கலைக்கழகமே முன்னின்று ஏற்பாடு செய்கின்றது.

இங்குப் படித்த மாணவர்கள் 170 நாடுகளில் மூன்று லட்சம் பேர் உள்ளனர்.இந்தப் பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் தரவரிசையில்  2014 ஆம் ஆண்டு 37வது இடத்தையும், 2015 ஆம் ஆண்டு 45வது இடத்தையும், 2016 ஆம் ஆண்டு 46வது இடத்தையும் பிடித்துள்ளது.அடுத்த இதழில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் 6வது இடத்தில் உள்ள University of New South Wales பற்றிப் பார்ப்போம்.

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்
வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்

X