நூறு ஆண்டுகளைக் கடந்த ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்!

6/6/2017 2:28:58 PM

நூறு ஆண்டுகளைக் கடந்த ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்

நம் நாட்டு மாணவர்கள் மட்டுமல்ல உலக அளவில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காக வெவ்வேறு நாடுகளைத் தேடிச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் மாணவர்கள் அங்குள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தை அடிப்படைக் கட்டமைப்புகள் முதல் பாடத்திட்டங்கள் வரை எல்லா கோணங்களிலும் அலசி ஆராய்ந்துதான் படிக்கச் செல்வார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் இந்தப் பகுதியில் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றிப் பார்த்துவருகிறோம். அதன் தொடர்ச்சியாக 7வது இடத்தில் உள்ள University of Western Australia பல்கலைக்கழகத்தைப் பற்றி இனி பார்ப்போம்.

இந்தப் பல்கலைக்கழகம் 1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தலைமை வளாகம் Perth நகரில் உள்ளது. இரண்டாவது வளாகம் Albany நகரில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது இது.

நூறு வருடங்களுக்கும் மேலான பழைமைவாய்ந்தஇந்தப் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் அதிகமான ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி யதிலும், பொருளாதார மேம்பாட்டிலும், கல்வியாளர்களை உருவாக்கியதிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சர்வதேசத் தரப்பட்டியலில் 100வது இடத்தில் உள்ள இப்பல்கலைக்கழகம் மேற்கு ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை முதலிடத்தில் உள்ளது. இது பூங்காக்கள் நிறைந்த பெர்த் நகரில் சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் எல்லா வளாகங்களுமே சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முடிதிருத்துவது முதல் பல் மருத்துவமனை வரை எல்லா வசதிகளோடும் உள்ளன. ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் ஆராய்ச்சிப் படிப்புகளில் மிகச்சிறந்த இடத்தைச் சர்வதேச அளவில் பிடித்துள்ளன.

அதேபோல் எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. University of Western Australia-வில் இளநிலைப் பாடத்திட்டத்தில் 44 துறைகளும், முதுநிலைப் பாடத்திட்டத்தில் 61 துறைகளும் உள்ளன. அவற்றில் பிரதானமான பாடத்திட்டங்கள் Architecture and design, Computing/Maths/Engineering, Education/Teaching, Humanities and Social Science, Law and Business, Media, Medicine and Health, Music, Science, Engineering ஆகியவையாகும்.

இதன் பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறை உள்ளிட்ட அனைத்துச் சிறப்புகளையும் உறுதிசெய்யும் விதமாக இங்குப் படித்த முன்னாள் மாணவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் பிரதமராகியிருக்கிறார். உயர்நீதிமன்றத்தின் நீதி அரசர்களாக 5 பேர் ஆகியிருக்கின்றனர். ஒருவர் கவர்னராகப் பதவி வகித்திருக்கிறார். இவர்களைப் போல் இங்குப் படித்தவர்களில் பலபேர் பல்வேறு துறைகளிலும் பணியாற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவ்வளவு சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்ட யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா (யு.டபிள்யூ.ஏ.,) சர்வதேச நாடுகளில் உள்ள சுமார் 180 கல்வி நிறுவனங்களோடு கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. உதாரணமாக, யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா  மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி.,)ஆகியவை மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் தனித்தனியே ஆய்வை மேற்கொண்டுவந்தன.

இந்நிலையில், கல்வி மேம்பாடு, ஆராய்ச்சி ஆகிய நடவடிக்கைகளில் இணைந்து செயல்படும் வகையில் இந்த இரு கல்வி நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.இதன்படி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கல்வி உபகரணங்கள், கருத்தரங்குகள் மற்றும் இதர தகவல்களையும் இந்த இரு கல்வி நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ளுதல், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்று கல்வியில் சிறந்து விளங்கும் 50 இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்விக் கட்டணச் சலுகைகளை வழங்குதல், ஆகிய ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ஆலன் ரோப்சன் மற்றும் ஐ.ஐ.எஸ்.சி., இயக்குநராக இருந்த பலராம் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  ஆஸ்திரேலியாவின் டாப் 10 பல்கலைக்கழக வரிசையில் மேலும் சில பல்கலைக்கழகத்தைப் பார்ப்போம்.       

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்

வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்

X