தொலைதூரகல்வியில் படித்து சாதிக்கலாம்.......

6/7/2017 1:03:38 PM

தொலைதூரகல்வியில் படித்து சாதிக்கலாம்.......

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர், தங்களது உயர்கல்வி படிப்பில் நாட்டம் செலுத்தாமல் உள்ளனர். மேலும், பலருக்கு கல்லூரிக்கு சென்று வகுப்புகளில் கட்டாயமாக கலந்துகொண்டு படிப்பதற்கும், குறிப்பிட்ட நேரம் கழித்து வீட்டுக்கு வருவதற்கும் விருப்பம் இல்லை. அவர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் வீட்டில் இருந்தே படிக்க நினைக்கிறார்கள்.

இத்தகைய மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தர தொலைநிலை கல்வி மிகவும் உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்கிறது. இதில், கலை அறிவியல் பிரிவு பாடங்களை மாணவர்கள் தேர்வுசெய்து படிக்கலாம். இளங்கலை மற்றும் முதுகலை படிப்பையும் தொலைதூர கல்வி முறையில் பெறமுடியும்.

தொலைநிலை கல்வியை மேற்கொள்ளும் ஒருவருக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. அது, படிப்பில் வித்தியாசமான அனுபவத்தை கொண்டுவருகிறது. தொலை நிலைக்கல்வியில் பயில விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு இடம் கிடைக்குமா என்று கவலைப்பட தேவையில்லை.

ஏனெனில், இப்படிப்பிற்கு இவ்வளவு இடம், இவ்வளவு பேர்தான் படிக்க முடியும் என்ற நிபந்தனை எல்லாம் கிடையாது. இதில் உள்ள பல படிப்புகளில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் சேரலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் நேரடியாக கல்லூரிக்கு சென்று படிக்க இயலாத சூழலில் மாட்டிக்கொண்டவர்கள் ஆகியோருக்கு தொலைநிலை கல்வி ஏற்றதாக உள்ளது.

மேலும், தொலைநிலை கல்வியில் வசூலிக்கப்படும் கட்டணம் பணிக்கு செல்லும் ஒருவரால் சமாளிக்ககூடிய ஒன்றாகவே உள்ளது. மாணவர்கள் நேரடியாக இதுபோன்ற படிப்புகளில் சேரும்போது பெற்றோரையோ அல்லது பிறரையோ நம்பியிருக்கவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பட்டமும் பெற்றுவிடலாம்.

தமிழகத்தில் பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் தொலைநிலை கல்வி முறை உள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் இணையதளத்தில் பெறலாம். 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தொலைமுறை கல்வி மூலம் பட்டம் பெறலாம்.

இக்கல்வி முறையில், மாணவர்களுக்கு, நூலகம், பாடம் சம்பந்தமான உபகரணங்கள் இல்லை என்றாலும், இணையதளம் மூலம் பாடத்திட்டத்தை தெரிந்துகொள்ள முடியும். ரெகுலர் படிப்பு போன்று இல்லாமல் தொலைதூர படிப்பு ஒரு சுதந்திரமான மற்றும் வசதிக்கேற்ற வகையிலான படிப்பாகும். தற்போது பலர் தொலைமுறை கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை கவர பல்கலைக்கழகங்களும் பல்வேறு புதிய பாடப்பரிவுகளை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

X