ஆராய்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்!

7/7/2017 2:37:27 PM

ஆராய்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

கல்வி என்பது அறிவுத் திறனை மேம்படுத்திக்கொள்ள என்ற நிலைமை மாறி அதுதான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றாகிவிட்டது. அதனால்தான் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதில் நிறையவே கவனம் செலுத்துகிறார்கள். அதிலும் வெளிநாட்டுக் கல்வியைத் தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவருகிறது.

நடுத்தரக் குடும்பத்து மாணவர்களும்கூட வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பது இன்று சாதாரண விஷயமாகிவிட்டது மறுப்பதற்கில்லை. எவ்வளவு தொழில்நுட்பம் வளர்திருந்தாலும், மாணவர்கள் இணையதளங்களில் அலசி ஆராய்ந்தாலும் எந்த நாட்டுக்குப் போவது? எந்தப் பல்கலையில் சேர்வது? என்ன படிப்பது? வெளிநாடு சென்று படிக்க என்ன செய்வது? என்பது போன்ற பல குழப்பங்கள் ஒருசிலருக்கு இருக்கத்தான் செய்கிறது.

அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டவே இந்தப் பகுதியில் பல்வேறு பயனுள்ள தகவல்களை வழங்கிவருகிறோம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் டாப் 10 பல்கலைக்கழகங்கள் பற்றிப் பார்த்துவருகிறோம். இதுவரை ஆஸ்திரேலியாவின் 8 சிறந்த பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இனி 9ம் இடத்தில் உள்ள University of Technology Sydney பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.  

உலக அளவில் மாணவர்கள் வாழத் தகுதியான இடங்களில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் அமைந்துள்ளது இந்த யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி சிட்னி. 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது ஆஸ்திரேலியாவில் உள்ள  டெக்னாலஜி நெட்வொர்க் ஆஃப் யுனிவர்சிட்டிகளின் ஒரு பகுதியாகச் செயல்பட்டுவருகிறது. கற்றுக்கொடுக்கும் முறை, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல், உலகத்தரமான மாணவர்களை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளால் ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இப்பல்கலைக்கழகமானது ரயில், பஸ் போன்ற போக்குவரத்து வசதிகள்   நிறைந்த, கடற்கரை, ‌ஷாப்பிங் மால் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட சிட்னி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 150 இளநிலைப் பட்டப்படிப்புகளும், 180க்கும் அதிகமான முதுநிலைப் பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. செயல்முறைக் கல்வியை அடித்தளமாக வைத்து கல்வி கற்றுக் கொடுக்கப் படுகிறது. சர்வதேச கம்பெனிகளின் பங்களிப்போடு உலகத் தரத்தில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படுகிறது.

கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மற்றும் லாங்குவேஜ் ஸ்கில்ஸ் ஆகியவற்றை முறையாகக் கற்கச்செய்து உலகத்தரத்தில் மாணவர்களை உருவாக்குவதே பிரதான குறிக்கோளாகக் கொண்டு இப்பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் ஹெல்த், டேட்டா சயின்ஸ், வருங்காலச் சமூகத்தைக் குறித்தும், வருங்காலத் தொழில்நுட்பங்கள் குறித்தும் நடத்தப்படும் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஒரு கல்வி ஆண்டுக்கு கல்லூரிக் கட்டணம் மற்றும் உணவு என 18,876 முதல் 27,872 டாலர்கள் வரை கல்விக் கட்டணமாக வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலைப் பட்டப்படிப்பில்

Bachelors of design in Animation,Bachelor of Engineering Science,Bachelor of Information Technology,Bachelor of Science in Games Development,Bachelor of Science in Information Technology, Diploma in Information Technology Professional Practice, Bachelor’s combined degree-Bachelor of Business Bachelor of Science in Information Technology,Bachelor of Arts in International Studies,Bachelor of Science in Information Technology, Bachelor of Creative Intelligence and Innovation, Bachelor of Laws போன்றவை குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. அதேபோல் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் Biomedical Engineering, Civil Engineering, Computer Control Engineering,Energy Planning and Policy, Environmental Engineering, Geotechnical Engineering,Manufacturing Engineering and Management, Operations Engineering, Software Systems Engineering,Structural Engineering,Telecommunications Engineering, Water Engineering போன்ற பாடப்பிரிவுகள் முன்னுரிமை பெறுகின்றன.

சர்வதேச அளவில் முதல் 100 பல்கலைக்கழகங்களில் 24வது இடத்தைப் பெற்றுள்ளது இந்தப் பல்கலைக்கழகம். மாணவர்களின் சுயசிந்தனைகளை மதித்து ஆராய்ச்சி மேற்கொள்ளச் செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகச் செயல்பட்டு அத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. மேலும் இதன் வளாகத்தில் நூற்றுக்கும் அதிகமான விளையாட்டு மற்றும் சமூக சேவைகள் மையம் அமைத்து மாணவர்களை சமூகத்தோடு ஒன்றி வாழ வழிசெய்கிறது.

மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை அறிந்து உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைக்கப் பயிற்சி மையங்கள் மற்றும் ஜிம் போன்றவற்றை நிறுவி மாணவர்கள் நலன் அறிந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அடுத்த இதழில் ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ள Royal Melbourne Institute of Technology பற்றிப் பார்ப்போம். 

X