வெளிநாடுகளில் படிக்க விசா இன்டர்வியூ அவசியம்!

8/23/2017 12:17:45 PM

வெளிநாடுகளில் படிக்க விசா இன்டர்வியூ அவசியம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வெளிநாடு சென்று படிக்க வேண்டும், எல்லா விதத்திலும் வாழ்வின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கனவு இன்றைய இளைஞர்களில் பலருக்கும் இருக்கின்றது. இந்தக் கனவு முன்பெல்லாம் வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. இந்த நிலை மாறி இன்று யார் வேண்டுமானாலும் உயர்கல்வியை வெளிநாடுகளில் படிக்க முடியும் என்றாகிவிட்டது. ஆனால், அதற்கான கல்வித்திறனையும், தகுதியான வழிமுறைகளையும் கண்டறியவேண்டும். அதற்கான வழிகாட்டுதலாகவே இந்தப் பகுதியில் பல தகவல்களை நாம் வழங்கிவருகிறோம்.

இதுவரை ஆஸ்திரேலியாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தைப் பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்களில் உள்ள உயர்கல்வி,கேம்பஸ் வாழ்க்கை, அந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை விரிவாகப் பட்டியலிட்டோம். வெளிநாடுகளில் உள்ள உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியைக் கற்க விரும்பும் மாணவர்கள் தனக்கான உயர்கல்வி துறையைத் தேர்ந்தெடுத்த பின்னர் அதற்கு அடுத்தகட்டமான பாஸ்போர்ட் மற்றும் விசாவை எடுக்க நடைமுறையில் உள்ள விதிகளையும், அவ்விதிகளுக்கு ஏற்ப மாணவர்கள் செயல்பட்டு விசா இன்டர்வியூக்களில் வெற்றி பெறுவதற்கான டிப்ஸ்களையும் இனி பார்ப்போம்.

மாணவர்கள் உயர்கல்வியில் தங்கள் துறையைத் தேர்ந்தெடுத்த பின்னர் அட்மிஷனுக்கான டாக்குமென்ட்கள் அனைத்தையும்  கொடுத்து அந்தப் பல்கலைக்கழகத்தின் அட்மிஷன் லெட்டரை பெற வெண்டும். இப்படி அட்மிஷன் லெட்டரை கையில் வாங்கியதும் அடுத்த செயல்,  நீங்கள் தேர்ந்தெடுத்த துறைக்கான கல்விக்கட்டணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அக்குறிப்பிட்ட தொகையை செலுத்தியவுடன்தான் உங்கள் துறையானது உறுதி செய்யப்படும்.

உங்களின் உயர்கல்வி துறையானது உறுதி செய்யபட்டவுடன் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ ஃபைனல் அட்மிஷன் லெட்டர் கொடுக்கப்படும். அந்த ஃபைனல் அட்மிஷன் லெட்டரை வைத்துதான் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். அட்மிஷனுக்கு என்னென்ன டாக்குமென்ட்கள் கேட்கப்பட்டதோ அத்தனை டாக்குமென்ட்களையும் மற்றும் உங்களின் ஃபினான்ஸியல் டாக்குமென்ட்டையும் சேர்த்து விசா விண்ணப்பிப்பதற்கு கொடுக்கவேண்டும்.

துறைக்கான முழு கல்விக்கட்டணம் மற்றும் ஆஸ்திரேலியாவில் நீங்கள் வாழ்வதற்கு தேவையான (லிவிங் எக்ஸ்பென்ஸ்) பணம் உங்களிடம் உள்ளதா எனத் தெரிவு செய்யும் பொருட்டே உங்களின் ஃபினான்ஸியல் டாக்குமென்ட்கள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்த மாதிரி லிவிங் எக்ஸ்பென்ஸ் மாறுபடும். உதாரணமாக, லண்டனில் இரண்டு வருட உயர்கல்வியை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், அந்தத் துறைக்கான கல்விக்கட்டணம் மற்றும் அந்நாட்டில் ஒரு மாதத்திற்கு வாழத் தேவையான பணமாக 1500 பவுண்ட்ஸ் ஆகியன அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டிருப்பார்கள்.

அந்தத் தொகைக்கு நிகராண இந்தியப் பணமதிப்பு உங்களிடம் உள்ளது என நிரூபிக்கும் பொருட்டு உங்களின் ஃபினான்ஸியல் டாக்குமென்ட்கள் விசா விண்ணப்பித்தலின்போது கேட்கப்படும். மாணவர்கள் எஜுகேஷன் லோன் எடுத்திருந்தால் அதில் லிவிங் எக்ஸ்பென்ஸிற்கு தேவையான பணத்தைக் குறிப்பிட்டு உங்களின் ஃபினான்ஸியல் டாக்குமென்ட்களைக் கொடுக்கலாம் அல்லது உங்களின் அக்கவுன்ட்டில் தொடர்ந்து இருக்கும் பணமதிப்பை வைத்து உங்களின் ஃபினான்ஸியல் டாக்குமென்ட்களை சப்மிட் பண்ணலாம்.
    
இப்படி எந்தப் பிழையும் இல்லாமல் அத்தனை டாக்குமென்ட்களையும் ஒப்படைத்த உடன் விசா இன்டர்வியூவிற்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப விசா இன்டர்வியூக்கள் வேறுபடும். படிக்க செல்லும் நாட்டில் மாணவர்களின் உண்மையான நோக்கம் என்னென்ன? சர்வதேச தரத்தில் உயர்கல்வியைப் படிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கு தகுந்த மாதிரி தன்னை தயார் செய்துள்ளாரா? ஏன் அக்குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்?

மாணவர்களின் கல்வித்தகுதி என்ன? மாணவர்கள் தன் சுய சிந்தனைகளின் அடிப்படையில்தான் தங்கள் துறையை தேர்ந்தெடுத்துள்ளனரா? மாணவர்களின் ஆட்டிடியூட்கள் ஆகியவற்றை பட்டியலிட்டு மாணவர்களின் உண்மையான நிலையை அறிவதற்காகவே பெரும்பாலும் கல்வி சார்ந்து வெளிநாடு செல்வோரிடம் விசா இன்டர்வியூ நடத்தப்படுகிறது.

அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அப்பா சொன்னார்! மற்றும் ஃபினான்ஸியல் டாக்குமென்டுகளைக் காட்டி அட்மிஷன் லெட்டர் வாங்கியாச்சி இனி கண்டிப்பாக விசா கிடைத்துவிடும் என மாணவர்கள் ஓவர் கான்ஃபிடன்சில் விசா இன்டர்வியூவை அணுகக்கூடாது. அப்படி அணுகுமுறை கொண்டவர்கள் கண்டிப்பாக ஒருபோதும் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க முடியாது. ஆகவே, மாணவர்கள் இத்தனை கேள்விகளுக்குமான பதிலை சுயசிந்தனையின் வழியாக தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். எந்தத் துறையானாலும் சரி அதற்கேற்ற மாதிரி தன்னைத் தயார்படுத்தலே வெற்றிக்கு வித்திடும்.

X