படிக்க வேண்டிய புத்தகம்

9/6/2017 1:05:00 PM

படிக்க வேண்டிய புத்தகம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் ச.சரவணன்

மனித வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உளவியல் ரீதியில் விவரிக்கும் நூலாகப் படைத்துள்ளார் இந்நூலின் ஆங்கிலப் பதிப்பான MAN’S SEARCH FOR MEANING என்ற நூலின் ஆசிரியர் விக்டர் பிராங்கல். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் வதைமுகாம்களில் மாட்டிக்கொண்ட பிராங்கல், அம்முகாம்களில்  துன்புறுத்தப்பட்டு இறந்த மக்களைப் பற்றிக் கூறாமல் உயிரோடு இருப்பவர்களின் மனநிலையைப் பதிவு செய்து, சாதாரண மனிதனின்  வாழ்விற்கும் சாவிற்கும் இடையே இருக்கும் நம்பிக்கை, அன்பு, மெய்மை எனும் வாழ்க்கையின்  நுண் அர்த்தத்தை வாசகனுக்கு வழங்கியிருக்கிறார்.

வதைமுகாம்களில் நிலவும் நெருக்கடி மற்றும் துன்புறுத்தலுக்கு நடுவே உயிர் வாழ்வதற்கும், எஞ்சியிருப்பதற்கும் ஆதாரமாக அவருக்கு அமைந்த நம்பிக்கையின் நீட்சியே இந்நூல். மனித விடுதலை, தன் மதிப்பு, வாழ்வின் அர்த்தம் குறித்த மெய்யான தேடல் பற்றிய ஆழ்ந்த பார்வையோடும் மனித மேன்மை குறித்த நோக்கோடும் உருப்பெற்றிருக்கும் புத்தகம் இது. இந்நூலைத் தமிழில் வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் என்ற தலைப்பில் அற்புதமாக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் ச.சரவணன். (வெளியீடு: சந்தியா பதிப்பகம், எண்:57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600 083. விலை:160. தொடர்புக்கு:044-24896979.)