பார்க்க வேண்டிய இடம்

9/6/2017 1:07:26 PM

பார்க்க வேண்டிய இடம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மகாகவி பாரதியார் நினைவு இல்லம் எட்டயபுரம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி அய்யர்-இலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாக 11.12.1882 ல் பிறந்தார் பாரதியார். இயற்பெயர் சுப்பிரமணியன், செல்லப் பெயர் சுப்பைய்யா. இவருடைய கவிபுனையும் ஆற்றலையும் அறிந்து எட்டயபுரம் ஜமீன் சூட்டிய பெயர் பாரதி. தமது கவிதைகள் மூலம் தமிழ்ப்பற்றையும், தேசபக்தியையும் ஊட்டி மகாகவியானார்.

பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949ம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே’ எனப் பெண்ணுரிமையைப் பற்றிப் பாடினார். 1921ம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோயில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 1.30 மணிக்குக் காலமானார்.

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றிவருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13.02.2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_பாரதி