பார்க்கவேண்டிய இடம்

3/13/2018 10:47:17 AM

பார்க்கவேண்டிய இடம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பாலக்காடு கோட்டை

கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் பாலக்காடு, பரந்து விரிந்திருக்கும் பசுமைப் பரப்புகளுக்காகவே பெயர் பெற்றது. அத்தகைய இயற்கை வனப்பு மிக்க பாலக்காடு நகரத்தின் மத்திய பகுதியில் கருங்கல்லால் இக்கோட்டையானது கட்டப்பட்டுள்ளது. பாலக்காட்டுக் கோட்டை மிகப் பழைய காலத்திலேயே இருந்ததாகக் கருதப்பட்டாலும், இதன் பழைய வரலாறு பற்றி எதுவும் தெரியவரவில்லை. பாலக்காடு அச்சன் எனும் இப்பகுதியின் உள்ளூர் ஆட்சியாளர் தொடக்கத்தில் கோழிக்கோட்டு அரசின் சிற்றரசராக இருந்தார்.

எனினும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு முன்னரே இவர் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார். 1757-ல் இப்பகுதிமீது கோழிக்கோட்டு அரசு ஆக்கிரமிப்பு நடத்த இருந்த நிலையில், இவர் உதவி கேட்டு ஹைதர் அலிக்குத் தூது அனுப்பினார். பாலக்காட்டைத் தன் வசம் எடுத்துக் கொள்வதற்காக இச்சந்தர்ப்பத்தை ஹைதர் அலி பயன்படுத்திக்கொண்டான். இக்கோட்டை 1766-ல் ஹைதர் அலியால் புனரமைக்கப்பட்டது.

1768 இல் முதன்முதலாக பிரித்தானியர் இதனை ஹைதர் அலியிடம் இருந்து கைப்பற்றினர். எனினும் சில மாதங்களில் ஹைதர் அதனை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான் ஆயினும், கர்னல் ஃபுல்லார்ட்டன் அதனை 1783ல் மீண்டும் தம்வசப்படுத்தினான். அடுத்த ஆண்டிலேயே இக்கோட்டை கைவிடப்படவே அதனை கோழிக்கோட்டுப் படைகள் கைப்பற்றிக் கொண்டன. 1790 ஆம் ஆண்டில் பிரித்தானியப் படைகள் அதனை இறுதியாகக் கைப்பற்றின.

பின் இக்கோட்டை திருத்தம் செய்யப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகப் பயன்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை படைகள் நிலைபெற்றிருந்த இக்கோட்டையானது 1900களின் முற்பகுதியில் தாலுகா அலுவலகமாக மாற்றப்பட்டது. மேலும் இக்கோட்டையானது ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தானின் பெயரைத் தழுவி திப்பு கோட்டை என்றும் அழைக்கப்படுவது உண்டு. மேலும் தகவல்கள் அறிய https://en.wikipedia.org/wiki/Palakkad_Fort

X