பார்க்க வேண்டிய இடம்

4/9/2018 12:02:11 PM

பார்க்க வேண்டிய இடம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

குடுமியான் மலை குடைவரைக் கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் குளக்காடு வட்டத்தில் அமைந்திருக்கிறது குடுமியான் மலை. புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குடுமியான் மலையானது குடுமிநாதர் கோயிலும் அதன் சிற்ப வேலைப்பாடுகளும்,  கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும், குடைவரைகளும் மற்றும் இசைக் கல்வெட்டுகளாலும் பிரசித்தி பெற்றது.

குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம்மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.

பிற்காலச் சோழ மன்னர்களால் ஆளப்பட்ட இம்மலையில் உள்ள இசைக் கல்வெட்டுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்குள்ள சிற்பங்கள் ஒன்றில், சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார்(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக் குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக்கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.

கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் பரத முனிவரின் இசைநூலும், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் ஆக்கப்பட்டதாகக் கருதப்படும் சங்கீத ரத்தினாகரத்திற்கும் இடைப்பட்ட காலத்திய இசைச் செய்தி என்பதால், இவ்விசைக் கல்வெட்டுகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு https://ta.wikipedia.org/wiki/குடுமியான்மலை

X