படிக்க வேண்டிய புத்தகம்: திருப்புமுனை - த.செ.ஞானவேல்

6/25/2018 3:11:21 PM

படிக்க வேண்டிய புத்தகம்: திருப்புமுனை - த.செ.ஞானவேல்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தங்கள் வாழ்வின் திருப்புமுனைத் தருணங்களை உணர்ந்து, அந்த நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத்து சிகரங்களைத் தொட்டவர்களின் சிலிர்ப்பூட்டும் பயணம் அழகான வடிவமைப்பில் புத்தகமாகியுள்ளது. குங்குமம் வார இதழில் ‘திருப்புமுனை’ என்ற தலைப்பில் த.செ.ஞானவேல் எழுதிய நீதியரசர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் போன்ற 28 துறைகளில் வெற்றி வாகை சூடிய சாதனை மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

தங்கள் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகளையும், அத்திருப்புமுனையை அவர்கள் திறம்படக் கையாண்ட விதம், தாங்கள் தங்கள் துறைகளில் வெற்றி வாகை சூடியது என ஒவ்வொரு பக்கமும் சாதனை மனிதர்களின் அனுபவமிக்க கதைகளை எளிய நடையில் விளக்கியுள்ளது இந்நூல்.

ஒவ்வொரு வரியையும் தன்னம்பிக்கை ததும்பும் வார்த்தைகளால் நிரப்பியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். ‘வாழ்க்கைக் கதைகளை விட சிறந்த இலக்கியம் வேறு எதுவும் உண்டோ? மனிதர்களின் வாழ்க்கையே மிகச்சிறந்த புத்தகங்களாக இருக்கின்றன!’ என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்நூல். (வெளியீடு: சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600 004. விலை:ரூ.240. தொடர்புகொள்ள: 044-4220 9191)

X