பார்க்க வேண்டிய இடம்: திருநாதர் குன்று

6/25/2018 3:13:59 PM

பார்க்க வேண்டிய இடம்: திருநாதர் குன்று

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையின் வடக்கே திருநாதர் குன்று எனும் சிறிய மலை உள்ளது. இம்மலையில் உள்ள பாறைச்சிற்பம் மட்டுமல்ல, கல்வெட்டும் கூட, தமிழ் எழுத்து மொழி வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள ஒன்றாக அமைகின்றது. இந்த மலை மீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்தநிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் வளர்ந்த நிலையில் உள்ள, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இது என்ற சிறப்பைப் பெறுவதாக இக்கல்வெட்டு திகழ்கின்றது.

இந்த திருநாதர் குன்றில் உள்ள தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் பெறுவதாகக் கருதப்படும் கல்வெட்டில்தான் ‘ஐ’எனும் தமிழ் எழுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது. அதேபோல மேலும் பல்லவ காலத்து தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.இம்மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்பாறை உள்ளது.

அதில் சமண அறத்தைப் பரப்பிய இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. அந்த தீர்த்தங்கரர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில், இருவரிசைகளில் ஒரே அளவில் அமைக்கப்பட்டுள்ளன. மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன. ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது. தமிழகத்தில் உள்ளோரே கூட அறியாத ஒரு சிறந்த கலைப்படைப்பாக இது திகழ்கின்றது. மேலும் தகவல்கள் அறிய http://jainism.tamilheritage.org

X