அறிய வேண்டிய மனிதர்: வந்தனா சிவா

6/25/2018 3:14:53 PM

அறிய வேண்டிய மனிதர்: வந்தனா சிவா

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் 1952ம் ஆண்டு, நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர் வந்தனா சிவா. சண்டிகரில் பஞ்சாப் பல்கலையில் இயற்பியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர், தன் பிஹெச்.டி படிப்பை கனடாவில் ஒன்டாரியோ பல்கலையில் படித்தார். 1982 ஆம் ஆண்டு ரிசர்ச் பவுண்டேஷன் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி, இகோலஜி என்ற அமைப்பை டேராடூனில் தொடங்கி பல்வேறு சூழலியலுக்கான ஆராய்ச்சிகளை
செய்யத் தொடங்கினார்.

1991ஆம் ஆண்டு வந்தனா தொடங்கிய  நவ்தான்யா அமைப்பு, பல்வேறு கிராம மக்களையும் ஒன்றிணைத்து நாட்டு விதைகளைக் காக்கவும் அதனைப் பரிமாறிக்கொள்ளவுமான இடைமுகமாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. நவ்தான்யா, இந்தியாவில் 16 மாநிலங்களில் 60 விதைப்பண்ணைகளைத் தொடங்கி 3,000 அரிசி வகைகளை அழியாமல் பாதுகாத்தது வந்தனா சிவாவின் சாதனை.

ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து  ஆகிய நாடுகளில் மரபணு பொறியியலுக்கு எதிராக வந்தனா நடத்திய போராட்டங்கள்(2003) முக்கியமானவை. 2003 ஆம் ஆண்டு சூழல் நாயகன் விருதை டைம் பத்திரிகையிடமிருந்தும், 2010 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஆற்றல் வாய்ந்த பெண்கள் வரிசையிலும் இடம்பிடித்திருந்தது இவரது செயல்பாட்டிற்கான மகத்தான அங்கீகாரம். இருபதுக்கும் மேற்பட்ட சூழலியல் குறித்த நூல்களை எழுதி உலகளவில் இந்தியாவின் முக்கிய சூழலியலாளராக அங்கீகாரம் பெற்றவர் டாக்டர் வந்தனா சிவா. இவரைப்பற்றி மேலும் அறிய பார்க்கவும் https://en.wikipedia.org/wiki/Vandana_Shiva

X