ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடரும் முறைகேடுகள்!

10/4/2018 5:25:43 PM

ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடரும் முறைகேடுகள்!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

சர்ச்சை

தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் அடுத்தடுத்து முறைகேடு அரங்கேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித்  தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 7,53,000 பேர் எழுதினார்கள். இவர்களில் 4,979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் நடந்து  முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து கல்வியாளர்களின்  கருத்துகளைக் கேட்டபோது அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…

நீதிமணி, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை நிர்வாக அலுவலர்

ஆசிரியர் தேர்வு வாரியம் தோற்றுவிக்கப்பட்டு இருபதாண்டுகளுக்கு மேலாகியும் வேலைக்கேற்ற பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவில்லை. மாற்றுப்
பணியின் அடிப்படையிலும் அயற்பணியின் அடிப்படையிலும் பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களே ஆசிரியர் தேர்வு வாரியத்தில்  பணிபுரிந்துவருகிறார்கள். அரசுப் பணியாளர்களைப் பொறுத்தவரை இரண்டுவிதமாக நியமனம் செய்யப்படுகிறார்கள். ஒன்று, தேர்வாணையம் மூலம்  நேரடி நியமனம் அல்லது அரசு வேலை வேண்டும் என்று படித்து போட்டித் தேர்வெழுதி வெற்றிபெற்று பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

மற்றொன்று, கருணை அடிப்படையில் நியமனம். பணிக்காலத்தில் இறந்த ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுடைய வாரிசுகளின் ஏழ்மை  நிலையை கருத்தில்கொண்டு நியமனம் செய்யப்படுவது. இந்த முறைகளில் பணி நியமனம் செய்யப்படுபவர்கள் தங்கள் வேலையை  தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் பணியாற்றுவார்கள். பணிக்காலத்தில் ஊதியம், ஓய்வுக்குப்பின் ஓய்வூதியம் உறுதி படுத்தப்பட்டுள்ள வேலையை,  சமூகத்தில் மதிப்பை தேடித்தரும் பதவியை பெரிதென நினைப்பவர்கள். கையூட்டு பெற்றதாக ஒருசிலர் மீது புகார் வருமே தவிர, பெரிய மோசடிகளில்  ஈடுபட்டதாக எவர்மீதும் புகார் இல்லை.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடுகளில் அடிபடுவது ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட தனியார் நிறுவனப் பணியாளர்கள். அரசுப்  பணியாளர்களைப் போன்ற பதவி, ஊதியம், ஓய்வூதியம் எதுவும் இல்லாதவர்கள். எனவே, எதையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற தேவை  இல்லாதவர்கள். அவர்கள் மீது துறைரீதியான எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியாது. அத்தகையவர்களை நம்பி முக்கியமான பணிகளை  ஒப்படைப்பது சரியல்ல. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேவையான பணியிடங்களை தோற்றுவித்து அதற்கென பணியாளர்களை நியமனம்  செய்வது மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். இனியாவது அரசு அதை செய்ய முன்வரவேண்டும்.

ம.இளங்கோவன், மாநிலத் தலைவர், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

2012ம் ஆண்டு முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ‘TET’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திவருகிறது. தமிழகத்தில்  இத்தேர்வை நடைமுறைப்படுத்தியதிலிருந்து வினாத்தாள் குளறுபடி, தவறான கொள்கை முடிவு போன்ற பல்வேறு காரணங்களால் தேர்வர்கள் உயர்,  உச்சநீதி மன்றங்களில் 200 -க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளனர். வெயிட்டேஜ் முறையானது அரசின் கொள்கை முடிவு. இதைத்தான்  பின்பற்றுவோம் என பிடிவாதமாயிருந்த அரசு, தற்போது வெயிட்டேஜ் முறை தவறு என்பதை உணர்ந்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆனால், ஏற்கனவே தான் செய்த தவறை திருத்திக்கொள்வதற்கு மாறாக வெயிட்டேஜ் முறை மாற்றி அமைக்கப்படும்; அதேவேளையில் ஏற்கனவே  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளதால் போட்டியாளர்கள் ஆளும் அரசின் மீது அதிருப்தியில்  உள்ளனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வை கைவிடக் கோரி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்  என்ற இளம் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரை போன்று இதுவரை 4 ஆசிரியர்களின் உயிரைக் காவு வாங்கியுள்ளது இந்த  அரசு என்பதுதான் வேதனைக்குரியது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஊழல், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்தில் ஊழல், 1114 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும்  சிறப்பாசிரியர் தேர்வுகளில் முறைகேடு என நீண்டுகொண்டிருக்கும் இந்தப் பட்டியலில், தற்போது 2017ம் ஆண்டு நடந்த TET தேர்வில் தேர்ச்சி பெறாத  200க்கும் மேற்பட்ட தேர்வர்களிடம் 30 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு OMR தாளில் மதிப்பெண்ணை உயர்த்தி முறைகேடான வகையில்  (Data tech Methodex) டேட்டா டெக் மெத்தடெகஸ் எனும் தனியார் நிறுவனம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு  வாரியமே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

நாட்டிலே  சிறந்துவிளங்குவதாக சொல்லப்படும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற சம்பவங்களால் பின்னடைவை சந்தித்துவருகிறது. இந்த  நிலையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் எம் கூட்டமைப்பின் சார்பாக இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். உடனடியாக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தனிக்கவனம் செலுத்தி ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித்தேர்வு என்ற நிலையை கைவிட  வேண்டும். ஊழல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்ததுபோல் முறைகேடு நடந்துள்ள 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர்  தகுதித் தேர்வையும் ரத்து செய்யவேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு வேறு ஊழலற்ற அமைப்பிடம் ஆசிரியர் நியமனம் சார்ந்த  தேர்வு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேர்வர்களின் வேண்டுகோளாகும்.

குமார், மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழகத்தில் இதுவரை 82,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்துக் கொண்டிருக்கும்போது,  காலிப்பணியிடம் இல்லாததை மூடி மறைக்க ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு நடத்த  அரசாணை வெளியிட்டனர். இதனால் மனமுடைந்து சிலர் தற்கொலை செய்துகொண்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தொடக்கத்தில் இருந்தே  பல்வேறு குழப்பங்கள் நிலவிவருகின்றன. இதனால் பல சோதனைகளை தாண்டி வருடக்கணக்கில் இரவு பகல் பாராமல் படித்து ஆசிரியர் ஆகும்  கனவோடு காத்திருப்போரின் நிலை என்னவாகும்?.

குறிப்பாக என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் உடற்குறைகளை தாண்டி தேர்வுகளில் தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காமல் அல்லல்பட்டு  வாழ்க்கை சின்னாபின்னமாகிப் போகும். இப்படி முறைகேட்டில் ஈடுபட்டு பணிபெற்றவர்களால் எத்தனையோ பேரின் பணி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.  பணம் உள்ளவனுக்கு மட்டுமே பணி என்றால் தேர்வு நடத்தாமல் ஏலம் விடலாமே. கல்வித்துறை ஊழல் துறையாக மாறிவிட்டது. எனவே, ஆசிரியர்  தகுதித் தேர்வில் தொடக்கத்தில் இருந்து தேர்ச்சிபெற்ற அனைவரின் மதிப்பெண்களையும் மறுமதிப்பீடு செய்து முறைகேடாக பணியில் சேர்ந்த  ஆசிரியர்கள், அதற்கு துணைபுரிந்த அனைவரையும் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- தோ.திருத்துவராஜ்

X