பார்க்க வேண்டிய இடம் : பாஞ்சாலங்குறிச்சி புதிய கோட்டை

11/5/2018 2:32:15 PM

 பார்க்க வேண்டிய இடம் : பாஞ்சாலங்குறிச்சி புதிய கோட்டை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி வட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் ஊருக்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் ஒரு தரைக் கோட்டை இருந்தது. இது பழைய கோட்டை. இக்கோட்டை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரும், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை ஆகியோர் வாழ்ந்த கோட்டையாகும்.

இது 35 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. இந்தக் கோட்டை பாஞ்சாலங்குறிச்சி ஊருக்கு மையத்தில் அமைந்திருந்தது. இந்தக் கோட்டை ஐந்நூறு அடி நீளமும், முந்நூறு அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இதன் முதன்மைவாயில் தெற்கு நோக்கி இருந்தது. இதன் சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டவை. இது கீழே அகலமாகவும், மேலே போகப்போக சரிவாகவும் சுமார் பன்னிரண்டு அடி உயரத்துடனும்,

அடிப்பாகத்தின் அகலம் சுமார் பதினைந்து அடியும் உச்சியில் மூன்று அடியும் அகலம் கொண்டதாக இருந்தது. இது ஆஙகிலேயர்களால் அப்போது தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது இக்கோட்டையின் அடிப்பாகம் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த எஞ்சிய அடிப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வடிவமைப்பை யொத்த கோட்டையை பழைய கோட்டைக்கு அருகில் 1974 -ல் அப்போதைய தமிழக அரசு ஆறு ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்டை கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி கோயில் சுற்றிலும் மதில்சுவர் போன்றவற்றுடன் கட்டப்பட்டது. உள்ளே கட்டபொம்மனின் வரலாற்றை விளக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் செயல்படுகிறது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத்துறையின் பராமரிப்பில் இயங்கிவருகிறது.

மேலும் தகவல்கள் அறிய https://ta.wikipedia.org/wiki/பாஞ்சாலங்குறிச்சி_கோட்டை

X