உழைக்கத் தயாரானால் வேலைக்குப் பஞ்சமில்லை!

11/13/2018 3:44:17 PM

உழைக்கத் தயாரானால் வேலைக்குப் பஞ்சமில்லை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

படிப்புக்கேற்ற வேலையா? வேலைக்கேற்ற படிப்பா?

பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை ஒவ்வொரு நாளும் வேலைவாய்ப்பு தேடி பல தனியார் நிறுவனங்களின் படிகளில் ஏறி இறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம், பலரின் வேலை தேடலை பூர்த்தி செய்யும் வல்லமை தனியார்துறை நிறுவனங்களிடம்தான் உள்ளது. திறமைக்கு ஏற்ற, தகுதிக்கு ஏற்ற பலவிதமான வேலைவாய்ப்புகளைக் கொண்டது தனியார் நிறுவனங்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
எண்ணற்ற வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன எடுத்துக் கொள்ளத்தான் ஆளில்லை என்றால், உடனே அப்படியா..? உண்மையாகவா..? எங்கே  இந்த நிலை..? என்றுதான் பலருக்கும் கேட்கத் தோன்றும்.

இதுவும் நம் நாட்டிலேயேதான். எப்போதும் எத்தனை பேருக்கும்  வேலை தருவதற்குத் தயாராகப் பல தொழில்கள் உள்ளன. இவையெல்லாம், சிறிய அளவிலான தயாரிப்பு, விற்பனை நிலையங்கள்.ஒருசில லட்சம் முதலீட்டில் தொடங்கப்படுகிற இந்த நிறுவனங்கள், கொள்முதலுக்கான தேவை (பர்ச்சேஸ் ஆர்டர்) அடிப்படையில் தமது பொருட்களைத் தயாரிக்கின்றன. அதாவது, தேவைகள் அதிகரிக்கும்போது அதற்கேற்ப தயாரிப்புப் பணிகளை முடுக்கிவிடுகின்றன.

இதன் பொருள்...? அதிக முதலீடு செய்து, ஏராளமாகத் தயார் செய்து இருப்பு வைத்துக்கொண்டுசந்தைக்குச் செல்கிற ‘வசதி’ இவர்களிடம் இல்லை. நிதிப் பற்றாக்குறை மட்டுமே காரணம் அல்ல. சந்தையின் தேவை மாறிக்கொண்டேயிருக்கிறது. ஆகவே, பெரிய அளவில் இருப்பு வைத்துக் கொண்டால், விற்பனைக்குச் சாத்தியம் இல்லாமல் போகலாம்.

இதுபோன்ற சிறுதொழில் நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கில் தமிழ்நாடு எங்கும் பரவலாக இருக்கின்றன. இங்கெல்லாம் கொள்முதல் தேவை ‘பிடித்துக் கொண்டு’ வருவதற்கு ஆட்கள் தேவை. இதனைச் செய்வதால், தங்களுக்கு மட்டும் இவர்கள் வேலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. இவர்கள் கொண்டு வரும் ‘ஆர்டர்’ மூலம், தொழில் விரிவடைகிறது.

அதன் மூலம், பல நிலைகளிலும் வேலை வாய்ப்பு பெருகுகிறது. எந்தத் தொழிலுக்குமே, முனைப்புடன் தீவிர ஆர்வத்துடன் பணி செய்கிற ஊழியர்கள்தாம், மிக முக்கியம். இவர்களின் பங்களிப்பின்றி, முதலீடு மட்டுமே ஒரு தொழிலை முன்னெடுத்துச்செல்ல முடியாது.

உதாரணமாக, ஊடகத் துறையைச் சொல்லலாம். இந்தியாவில் தற்போது, மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிற ஒரு துறை இது. நமக்குத் தெரியும். புதிதாக வருகிற ஓர் ஊடகம் வெற்றி பெற வேண்டும் என்றால், அது யார் கையில் உள்ளது..?

புதிய சிந்தனையுடன் கூடிய திறமையான இளைஞர்கள்தாம் அதைச் செய்து காட்ட முடியும். எல்லாத்  துறைகளிலுமே இப்படித்தான். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட உண்மையான ஊழியர்கள், பணியாளர்கள் மட்டும் கிடைத்துவிட்டால் போதும், அந்தத் தொழில் நிறுவனம் செழிப்பாக வளர்ந்துவிடும். ஊடகத்துறை  முதல் உளவுத்துறை வரை இதுதான், எப்போதைக்குமான கள நிலைமை.

கனரகத் தொழிற்சாலைகள், பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள், கடல் கடந்து நடைபெறும் அயல்நாட்டு வர்த்தகங்கள், பல்லாயிரம் கோடி முதலீட்டில் நடைபெறும் ஒப்பந்தப் பணிகள், உள்ளூர் அரசுத் திட்டப் பணிகள் வரை எல்லாவற்றுக்கும் ‘ஊழியர் பங்கு’ மிக முக்கியமானது. இதனை இன்றைய இளைஞர் சமுதாயம் சரிவரப் புரிந்து வைத்திருக்கிறதா..? அவர்களுக்குச் சென்று சேர்கிறாற் போல், எடுத்துச் சொல்வதற்கு யாரும் இருக்கிறார்களா..? என்றால், கொஞ்சம் கஷ்டம்தான். வெறுமனே ‘தன்னம்பிக்கை’ ஊட்டுவதாகச் சொல்லி, வீண் கதை பேசுகின்ற மனிதர்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று பணிச்சந்தையில் உள்ள பிரச்னைகளும், தேவைகளும், எதிபார்ப்புகளும் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இன்று தமிழ்நாட்டில் சிறுதொழில் துறை, ஒருவித சுணக்க நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, தொழில் விரிவாக்கத்தில் சந்திக்கிற சங்கடங்கள்.

அரசுத் திட்டங்கள், சட்ட வழிமுறைகள், வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள், தனிநபரின் கடன் சுமை என்று பல்வேறு பிரச்னைகள் இருக்கலாம். இவற்றின் பின்னால் அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்கள் இருக்கலாம். இவை நாம் அறிந்தவைதாம். இவற்றுக்கு மேல், இன்னொரு சவாலும் இருக்கிறது. அது ‘சரியான வேலை ஆட்கள் கிடைப்பதில்லை’ என்பதுதான்.

 உடல் உழைப்பு, இயந்திரங்களைப் பராமரித்தல், உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிற சுற்றுச்சூழல், மிக நீண்ட பணி நேரம்.... என்று கடுமையான நிபந்தனைகள், விளைவுகள் கொண்ட பணிகள் நிறையவே இருக்கின்றன. இங்கெல்லாம் பணியாட்கள், ஊழியர்கள் கிடைப்பது மிகக் கடினம். புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், இப்படி எந்த பிரச்னையும் இல்லாத துறைகளிலும் ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. உதாரணத்துக்கு நம் கண்முன் தெரிகிற, நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான, பாரம்பரியத் தொழில்களான விவசாயம், நெசவு, மீன்பிடித்தல் மற்றும் குடிசைத் தொழில்கள்.

மேற்கூறிய பாரம்பரியத் தொழில்களில் இளைஞர்களின் நாட்டம் வெகுவாகக் குறைந்துகொண்டுவருகிறது. மீன்பிடித்தலில் மட்டுமே இன்னமும் இளைஞர்களின் பங்கு வெகுவாகக் குறையாமல் இருந்துவருகிறது. பிற துறைகளில், தாமாக மனமுவந்து பணி செய்ய வருகிற இளைஞர்கள் மிகமிகக் குறைவு.

“ஏன் நிலத்தை வித்துட்டீங்க”? என்று கேட்பவரிடம் ‘என்னப்பா செய்றது... இப்பல்லாம் முன்ன மாதிரி ஆளுங்க கிடைக்கிறது இல்லை. அதனால கொஞ்சம் கொஞ்சமா விவசாயத்தை குறைச்சுக்கிட்டேன்…’ என்று சிலர் சொல்வதை கிராமப்புறங்களுக்குச் சென்றால் கேட்க முடியும்.

இந்தக் குரல் இப்போதெல்லாம் வேளாண் பெருங்குடி மக்களிடம் மிக அதிகமாக வெளிப்படுகிறதா...இல் லையா..? இதற்கு என்ன காரணம்..? என்னதான் பிரச்னை...? இதை எப்படி நிவர்த்தி செய்யலாம்..? என்பதை அடுத்த இதழில் பார்ப்போம். வளரும்      

-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

X