தனியார் பள்ளிகள் பொதுப்பள்ளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்!

3/27/2019 5:27:38 PM

தனியார் பள்ளிகள் பொதுப்பள்ளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்!

நன்றி குங்குமம் கல்வி-வழிக்காட்டி

எதிர்பார்ப்பு

கல்வியாளர்கள் கோரிக்கை..!

இந்தியாவின் தலைவிதியைத்  தேர்தல்தான் தீர்மானிக்கிறது என்று எல்லோரும் நம்புகிறோம். ஆனால், 1966 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட  முனைவர் கோத்தாரி கல்விக் குழு ‘இந்தியாவின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகின்றது’ என்று பட்டவர்த்தனமாகக் கூறியது. இதைப் புரிந்துகொண்டுதான் கல்வியாளர்கள் இன்று தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அரசியல் கட்சிகள் அதிகாரத்தில் அமர்வதற்கான வழிகளைத் தேடுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு உதாரணமாக அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளும் ஓரளவுக்கு முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் கல்வியை மேம்படுத்த கல்வியாளர்களும் சில கோரிக்கைகளோடு களத்தில் இறங்கியுள்ளனர்.

பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கல்விக் கொள்கை அறிக்கை வெளியிடும் நிகழ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. மூத்த கல்வியாளர்கள் ச.சீ.இராசகோபாலன், வே.வசந்திதேவி, ச.மாடசாமி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் இணைந்து உருவாக்கிய கல்விக் கொள்கை அறிக்கை மூலம் அரசியல் கட்சிகள் பின்பற்றவேண்டிய கல்விக் கொள்கைகள் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

* அனைத்துக் குழந்தைகளுக்கும் மழலையர் வகுப்பு முதல் பள்ளிக்கல்வியின் இறுதி வகுப்புவரை கட்டணமில்லாமல் தரமான கல்வியை அளிப்பது அரசின் கடமையாக பெரும்பான்மையான நாடுகளில் நடைமுறையில் இருந்துகொண்டிருக்கிறது. நமது நாட்டில் இருப்பதுபோல கட்டுகின்ற கட்டணத்திற்கேற்ப பல்வேறு வகைப்பட்ட தனியார் பள்ளிகள் இருப்பதை, அரைகுறையான ஜனநாயகம் உள்ள நாடுகள்கூட அனுமதிக்கவில்லை.

அரசியல் கட்சியினரே தனியார் பள்ளி முதலாளிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். மூன்று வயதுக் குழந்தைக்கு கல்வி கற்றுக்கொடுக்க ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலாக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மழலையர் பள்ளிகள் ஊருக்கு ஒன்றாவது நம்முடைய நாட்டில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. கல்விக்கென்று கடவுளை வணங்கும் நம்முடைய நாட்டில்தான் கல்வி வணிகம் மூலம் கறுப்புப் பண மூட்டையும்  உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது.

* அரசுக்குப் பல்வேறு வகையிலான வரிகளை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் செலுத்திவரும் மக்களை கல்வியையும் விலைகொடுத்துப் பெறச் செய்வது மாபெரும் துரோகம் என்றுதான் கூறவேண்டும். கல்வி வணிகத்தை அனுமதிப்பதையும் கல்வியை விற்பதையும் ஒரு சமூகக் குற்றம் என்று
ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற மனிதர்கள் எவரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.

ஆம் கல்வியை விலைபொருளாக மாற்றியதை விட குழந்தைகளுக்கு இழைக்கின்ற மிகப்பெரிய துரோகம் வேறொன்றும் இருக்கப் போவதில்லை. ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளி, பணக்காரக் குழந்தைகளுக்கு ஒரு பள்ளி என்ற வகையில் குழந்தைகளிடம் பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கும் ஒரு கல்விமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே, ஜனநாயக விரோதமான கல்வி முறையும், கல்விக் கொள்கையும் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

* குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான, முன்னேறுவதற்கான சம வாய்ப்புகளை முழுவதுமாக ஒழித்துக்கட்டிய கல்வி அமைப்பு ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாட்டை ஜனநாயக நாடு என்று கூறுவதற்கு என்ன தகுதி இருக்க முடியும்? சமத்துவம் என்பதும் சகோதரத்துவம் என்பதும் அரசியல் அமைப்புச் சட்ட நூலில் உள்ள ஏட்டுச்சுரைக்காய்களாக மட்டுமே இருப்பதால் யாருக்கு என்ன பயன்? ‘‘அனைத்துத் தனியார் பள்ளிகளும் பொதுப் பள்ளிகளாக அறிவிக்கப்படவேண்டும்.

மழலையர் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை அனைவருக்கும் அருகமை பள்ளி அமைப்பு முறையில் தாய்மொழிவழியில் தரமான  கட்டணமில்லா கல்வியை அரசே வழங்கும்” என்ற உறுதிமொழியை அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கவேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலிருந்தும் கடைக்கோடி மனிதர்களிடமிருந்தும் ஒலிக்கச்செய்யவேண்டும். நாட்டு நலனிலும் கல்வி நலனிலும் குழந்தைகள் நலனிலும் அக்கறை உள்ளவர்கள் இதற்காகத் தீவிரமாகச் செயலாற்றவேண்டும்.

* கல்வி என்பது ஒரு நாட்டின் உயர்ந்த குறிக்கோள்களாக இருக்கின்ற சமத்துவம், சகோதரத்துவம், பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சமூக அரசியல் பொருளாதார நீதியைப் பாதுகாத்தல், சமய சாதிய வெறியற்று வாழ்தல் ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும்
நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும்.

* கல்வியை விற்பனைப் பொருளாக்கி இருப்பது முழுக்க முழுக்க மக்களாட்சி நெறிகளுக்கு எதிரான செயல். பணம் உள்ளவர்கள் அவரவர் வசதிவாய்ப்பிற்கேற்ப கல்வி பெறலாம் என்ற நிலையை உருவாக்குவது வளரும் தலைமுறையினர் வாழ்வதற்கான, முன்னேறுவதற்கான சமவாய்ப்புகளை ஒழித்துவிடும். இதனால் திறமையுடையவர்களாக இருப்பவர்கள் வசதியின்மையால் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறமுடியாமல் போய்விடும். பணவசதியின் காரணமாக மட்டுமே ஒருசிலர் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதும் அதிகாரத்தைப் பெறுவதும் தொடர்ந்து நடைபெறும்.

*வறுமை, பசி, நோய், சுகாதாரமின்மை, சாதிய ஒடுக்குமுறை ஆகிய சமூகக் கேடுகளுக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் ஆளாக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளுக்காவது கல்வி சென்றடையவேண்டும். கல்வியின் மூலமே இம்மக்களின் அடுத்த தலைமுறையாவது கொடுமையான துயரங்களிலிருந்து விடுதலை அடைய முடியும். ஒரு நாட்டின் கல்வி அமைப்பு இத்தகைய உயரிய நோக்கத்திலிருந்து மட்டுமே கட்டமைக்கப்படவேண்டும்.

*கல்வியை வர்த்தகப் பண்டமாக மாற்றி ஒருசில தனிநபர்களின் மூலதனத்தைப் பெருக்க வழிவகுக்கும் கொள்கைகளை எந்த அரசு பின்பற்றினாலும் அது ஒரு சமூகக் குற்றமாகவே அமையும். இப்படிப்பட்ட சமத்துவமற்ற பொருளாதார அநீதிக்குப் பெரும்பான்மையோர் பலியாக்கப்படும் நிலையை உருவாக்குவது மிகவும் அபத்தமானது.

மேலே கூறப்பட்டுள்ள வகையில் அரசியல் கட்சிகளிடம் கோரிக்கைகளை கொண்டு செல்லும் விதமாகக் கல்வி அறிக்கையைக் கல்வியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அரசியல் கட்சியினர் செவிசாய்ப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!

மேலும்

X