தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படுகிறதா?

5/6/2019 4:06:43 PM

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படுகிறதா?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு பரிந்துரையின் அடிப்படையிலேயே தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதே நேரத்தில் பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50-ல் இருந்து 45 ஆகவும், பி.சி, எம்.பி.சி, பி.சி(முஸ்லீம்) உள்ளிட்ட பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-லிருந்து 40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் இதனை தெரிவித்துள்ளார். அரசின் இந்த திடீர் உத்தரவால் பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதுபற்றி கல்வியாளர்கள் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்...

பேராசிரியர் முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன்

அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு பி.இ முதலாமாண்டில் சேரவிருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் கணக்கு, இயற்பியல், வேதியியல் (MPC) பாடங்களில் பெற்றிருக்கவேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35-லிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அகில இந்திய அளவில் பொறியியல் கல்வியை AICTE கட்டுப்படுத்துவதால், இது அதற்கேற்ப செய்யப்பட்ட மாற்றமாகத் தெரிகிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்கூட இந்த மாற்றம் எப்பொழுதோ ஏற்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இதனால் சிலரின் பொறியியல் கல்லூரி வாய்ப்புப் பறிபோவது உண்மை. அதே நேரத்தில், வெறும் 35 மதிப்பெண் பெற்றுத் தேறினால் போதும் என்ற நினைப்பில் இருக்கக்கூடிய மாணவர்கள், கூடுதலாக உழைத்து, MPC பாடங்களில் மட்டுமின்றி எல்லாப் பாடங்களிலும் 40 மதிப்பெண்களும், அதற்கு மேலும் பெற இது உதவக்கூடும்.

பொதுவாக, பொறியியல், மருத்துவம், வணிகம் போன்ற தொழில்படிப்புப் படிக்க விரும்புபவர்கள் மற்றவர்களைவிட, அத்துறைகளுக்கான பாடங்களிலாவது, அதிக ஆர்வமும் (Aptitude), திறமையும் (Knowledge) கொண்டவர்களாக இருக்கவேண்டும். MPC-யில் 40 சதவீதம்கூடப் பெற முடியாதவர்கள் பொறியியலுக்கு ஏற்றவர்களாக இருப்பார்களா, அப்படியே சேர்ந்தாலும் இந்தப் போட்டி உலகில் நல்ல முறையில் படிப்பை முடிப்பார்களா, எதிர்காலம் நல்லபடியாக அமையுமா, பாழாகிவிடுமா என்றெல்லாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

மாறாக, தமக்கு வேறு எந்தத் துறை ஏற்றது என இப்போதே ஆராய்ந்து அதன் வழியில் பயணித்தால், பயணம் இனிமையாகவும் நிறைவாகவும் வெற்றியாகவும் அமையக்கூடும். இன்னும் அதிக மதிப்பெண் பெற்று பி.இ சேர்ந்த மாணவர்கள் கூட, சேர்ந்தபின் முதல் அரையாண்டுத் தேர்விலேயே கணக்கு, இயற்பியல் போன்ற பாடங்களில் தவறிவிடுகிறார்கள். இப்போது சில மாற்றங்களுடன் விருப்ப அடிப்படை மதிப்புத் திட்டம் (Choice based credit system) கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் முதல் அரையாண்டில் தேறாத பாடங்களை, மூன்றாமாண்டு போவதற்குமுன் தேர்ச்சியடையாதவர்கள் மீண்டும் முதலாமாண்டு மாணவர்களுடன் சேர்ந்து படித்தாக வேண்டும் என்பது போன்ற கூடுதல் சிரமங்களும் காத்திருக்கின்றன.

AICTE தலைவர் முனைவர் அனில் சஹஸ்ரபுத்தே சமீபத்தில், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தரம் திருப்திகரமாக இல்லை என்றும், அதனால் அவர்களுக்குச் சில வாரங்களில் தரமுயர்த்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பள்ளிக்கல்விக் குறைபாடுகள்தான் கல்லூரிக் கல்விக் குறைகளுக்குப் பெரும் காரணம். எடுத்துக்காட்டாக, பொறியியலுக்குத் தேவையான கணிதத்தில் differentiation, integration, differential equations போன்ற பகுதிகளை +2 வகுப்புகளில் படிக்காமலேயே (நடத்தாததால் என்றும் சொல்லலாம்) நிறைய மதிப்பெண் பெற்று பி.இ சேர்ந்து வருந்துபவர்கள் உண்டு. MPC பாடங்களில் 40 மதிப்பெண் கூடப் பெறாதவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

அ.மார்க்ஸ், கல்வியாளர்

கல்வித்துறை மீது தொடர்ச்சியாக இந்த அரசாங்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. உயர்கல்வியை எல்லா வகையிலும் முடக்குவது என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. மீண்டும் ஒரு வர்ணாசிரமத்தை கல்வித்துறையின் ஊடாக உருவாக்குவது என்பது அதனுடைய செயல்பாடாக இருக்கிறது. 5ஆம் வகுப்பிலிருந்து மீண்டும் தேர்வை கொண்டுவருவதாக இருக்கட்டும், 10ஆம் வகுப்பில் மாணவர்களை தரம் பிரித்து ஒருசிலரை மேற்படிப்புக்கு லாயக்கில்லாதவர்களாக ஆக்குவதாக இருக்கட்டும், ஆய்வுப் படிப்புகளில் உதவித் தொகையை நிறுத்துவதாக இருக்கட்டும் இவ்வாறு பல வகைகளிலும் உயர்கல்வி மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் படிப்புகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. ஜே.என்.யு-வில் இரண்டாயிரம் பேர் எம்.பில்., பிஎச்.டி ஆண்டுதோறும் படிப்பது என்பது இன்றைக்கு 400ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்படுவது எல்லாமே தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்தான். உயர்சாதியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான எஞ்சினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை 5 சதவிகிதம் குறைத்துவிட்டு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அதிப்படுத்தியிருப்பது எதன் அடிப்படையில் என்பதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் உயர்கல்வி படிப்புக்கானதில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான். ஏழை, எளிய குடும்பங்களிலிருந்து வரும் அந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான மதிப்பெண்ணை அதிகப்படுத்துவது என்பது அவர்களை உயர்கல்வியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு சமம்.  இதுமட்டுமல்ல அவர்களுக்கான ஸ்காலர்ஷிப் எல்லாம் குறைக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் இன்றைக்கு புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள கல்விக்கொள்கையின்படி மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர் பணி நியமனங்களிலும் அரசு தலையீடு இருக்காது என அறிவித்திருப்பதும் எதிர்காலத்தில் இடஒதுக்கீடு கல்வித்துறை பணியிலும் சரி, படிப்புகளிலும் சரி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த உத்தரவு திரும்பப்பெற வேண்டும்.

- தொகுப்பு: தோ.திருத்துவராஜ்.

மேலும்

X