போலி சான்றிதழ் பேராசிரியர்கள்

6/10/2019 3:33:29 PM

போலி சான்றிதழ் பேராசிரியர்கள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டுமென்றால் தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முனைவர் பட்டம் (PH.D) பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் வட மாநிலங்களில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் பெயரில் முனைவர் பட்டம் பெற்றதாகப் பணியில் சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து அதிரடியாக நடத்தப்பட்ட ஆய்வில் 11 பேராசிரியர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்துக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் முனைவர் பட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்…

பாலகுருசாமி, அண்ணா பல்கலை, முன்னாள் துணைவேந்தர்

போலியாக சான்றிதழ் கொடுத்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பெயரில் பிஎச்.டி பட்டப்படிப்பு சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெயர்களில் அங்கு பல்கலைக்கழகங்களே இல்லை. பெரும்பாலும் பணம் கொடுத்து போலியாக சான்றிதழ் தயார் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதையும் வாங்கி வேலையில் சேர்த்துள்ளது பெரிய தவறு. இதுபோன்று போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுக்க ஏஜென்ட்டுகள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளனர் எனத் தெரிகிறது.

இதுபோன்று போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்வதற்கு காரணம் என்னவென்றால், பணிக்கு தேர்வு செய்யும் இடத்தில் இருப்பவர்கள் லஞ்சம் பெறுபவர்களாக இருப்பதால்தான். வேலையில் சேர்ப்பதற்கு முன்பு சான்றிதழ்களின் உறுதித்தன்மையை அந்தந்த பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியோ அல்லது தொடர்புகொண்டோ சரிபார்க்க வேண்டும். அங்கிருந்து சரியான தகவல் வந்தபின்னர்தான் அப்பாய்ன்மென்ட் ஆர்டர் கொடுக்க வேண்டும்.

இன்றைக்கு பெரும்பாலான கல்லூரிகளில் ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என முடிவு செய்துவிடுகிறார்கள். அதனால் பணியில் சேர்பவர்கள் கொடுக்கும் சான்றிதழ் ஒரிஜினலா, டூப்ளிக்கெட்டா என யாரும் கண்டுகொள்வதில்லை. உயர் பதவி மற்றும் பணிகளில் இருப்பவர்கள் பரிந்துரைத்தால் பணம் வாங்கிக்கொண்டு வேலையில் சேர்த்துக்கொள்வது வாடிக்கையாக உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதுதான் நிலைமையாக இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்றால், தேர்வுமுறையைக் கடுமையாக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குள் பணியில் சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் என அனைவரின் சான்றிதழ்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். போலிச் சான்றிதழ் கொடுத்தவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது, அவர்கள் மீண்டும் எந்தப் பணியிலும் சேராத வகையில் உத்தரவு வழங்க வேண்டும்.

பேராசிரியர் ப.சிவகுமார், கல்வியாளர் கல்லூரிப் பேராசிரியர்கள் அரசுக் கல்லூரிகளிலும் உதவி பெறும் கல்லூரிகளில் காலைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழக நல்கைக்குழு ஊதிய விகிதப்படி ஏறத்தாழ மாதச்சம்பளம் 65,000 பெறுகின்றனர். அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் நடக்கிறது. உதவி பெறும் கல்லூரிகளில் பல்கலைக்கழகம் சார்பாளர், கல்லூரிக்குழு உறுப்பினர்கள் உள்ளடக்கிய குழு நியமனம் செய்யும். பல்கலைக்கழகங்களில் ஆட்சிக்குழு முடிவு செய்யும் குழு பணி நியமத்துக்கான நேர்முகத்தேர்வை நடத்தும். பேராசிரியர் நியமனத்துக்கு NET எனப்படும் தேசிய தகுதித் தேர்வில் தேறியிருத்தல் இன்றியமையாதது.

Ph.D. இருந்தால் கூடுதல் தகுதி உதவிப் பேராசிரியராக உள்ளே நுழையும் ஒருவர் பின்னர் இணைப் பேராசிரியராக Ph.D. மற்றும் ஆய்வு வழிகாட்டும் அனுபவம், நூல்கள் வெளியீடு, தரமான ஆய்வுக்கட்டுரைகள் ஆகியன கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்தச் சூழலில் பணி நியமனங்களில் கடந்த பத்தாண்டுகளாக பல்கலைக்கழகங்கள் தொடங்கி கல்லூரிகள் வரை ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததை நாளேடுகள் அம்பலப்படுத்தின.

ஆசிரியர் தேர்வு வாரியம் பல்தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவரின் 196 பேர் தேர்வு எழுதிய OMR எனப்படும் குறியீட்டுத்தாளை மாற்றியதும் போலி மதிப்பெண் பெற்று தேர்வானதும் அம்பலமாகி, உடந்தையாக இருந்ததாக அலுவலக ஊழியராக பணியாற்றிய சிலரும் OMR விடைத்தாளை கணினியில் பதிவு செய்த தனியார் நிறுவன ஊழியர்களும் கைதாகினர். பணி நியமனம் முழுவதும் ரத்தாகி நேர்மையாக எழுதிய இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி வணிகமானபின் ஏற்பட்டுள்ள சூழலில் பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இது பிரதிபலிக்கிறது. மாதம் 65 ஆயிரம் சம்பளம் உள்ள வேலையைப் பெற இரண்டு அல்லது மூன்று ஆண்டு சம்பளத்தை லஞ்சமாகத் தர ஒரு இளைஞர் கூட்டம் தயாராக உள்ளது. போலிச் சான்றிதழ் ஒருபக்கம் என்றால் மறுபக்கம் சில லட்சம் செலவு செய்தால் Ph.D.,  ஆய்வேட்டை எழுதிக் கொடுக்கும் சில வழிகாட்டிகளும் உள்ளனர்.

சமீபத்தில் கல்வித்துறையில் மற்றும் ஒரு ஊழல் வெளிவந்துள்ளது. பள்ளி ஆசிரியருக்கான DTED, தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்த விசாரணை நடத்தப்படும் என செய்தி வந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடினாலும் இச்சமூகத்தை பெரிதும் பல தலைமுறைக்கு பாதிப்புக்குள்ளாக்கும் கல்வித்துறை ஊழல் குறித்து நாம் கவனம் கொள்ளாவிடில் சீரழிந்த இளைஞர்கள்தான் கல்விக்கூடங்களை விட்டு வெளிவருவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

- தோ.திருத்துவராஜ்

X