+2 விடைத்தாள் திருத்தமும் குளறுபடிகளும்!

6/25/2019 3:53:59 PM

+2 விடைத்தாள் திருத்தமும் குளறுபடிகளும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உயர்கல்வியை கேள்விக்குறியாக்கிய ஆசிரியர்கள்

ஒவ்வொரு மாணவர்களின் வாழ்க்கையிலும் உயர்கல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுவது +2 மதிப்பெண்கள்தான். மாணவர்கள் அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் கல்லூரி தொடங்கி அவர்களின் மேல்படிப்பு வாழ்க்கைத்தரம் என அனைத்தையும் முடிவு செய்வதாக இந்த +2 மதிப்பெண்கள் இருந்துவருகின்றன.

மாணவர்களின் விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள்தான் அப்போதைக்கு மாணவர்களின் தலையெழுத்தை எழுதும் கடவுள்கள். சுமாராக எழுதிய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் நன்றி கூறுவது பேப்பரை திருத்திய ஆசிரியருக்குத்தான். அதேபோல் சூப்பராக எழுதிய மாணவர் களுக்கு குறைவான மதிப்பெண் வந்தாலும் அவர்கள் திட்டித்தீர்ப்பது விடைத்தாளைத் திருத்திய ஆசிரியரைதான். இப்படி + 2 மாணவர்களின் மதிப்பெண்களில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்கள் கவனக்குறைவால் செய்யும் சிறு தவறு எத்தனையோ மாணவர்களின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டதைப் பலமுறை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்போம். அந்தவகையில் இந்த ஆண்டு 72 மையங்களில் 25,000 ஆசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மில்லியன் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன.

தங்களது மதிப்பெண்கள் தவறாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் 50,000 மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட நகலைப் பார்த்தபோதுதான் கூட்டலில் பிழைகள் இருப்பது தெரியவந்தது. மேலும், சில விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்படாமல் மதிப்பெண்கள் வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. 4,500 பேர் மறுமதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்திருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் தவறிழைத்திருப்பதை இணை இயக்குநர்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.தவறிழைத்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தவறு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்று ஆசிரியர்கள் செய்யும் தவறுகளினால் எத்தனை எத்தனை மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருசில மாணவர்கள் தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராததால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் உண்டு. இதுகுறித்து கல்வியாளர் கண.குறிஞ்சியிடம் பேசினோம். அவர் எடுத்துவைத்த கருத்து களைப் பார்ப்போம்....

‘‘2019ஆம் ஆண்டு +2 விடைத்தாள் திருத்தியதில் நிறைய பிழைகள் உள்ளதாகவும், அது குறித்து 500 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அறிவிப்புக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்தி கவலைக்குரியது. இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்களுக்கு +2 மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்பட்டுள்ளதை விடைத்தாள் நகல் வாங்கிய மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்படாமல், மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது.

விடைத்தாள் திருத்துவதில் பிழைகள் ஏற்பட்டால், மிகவும் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். மொத்த மதிப்பெண் 100-க்கு 72 மதிப்பெண் வாங்கிய மாணவருக்கு 27 மதிப்பெண் பெற்றதாகக் கூட்டலில்  தவறிழைத்துத் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது என்றால், அந்த மாணவனின் மனநிலை, பெற்றோர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காமல் இருந்திருந்தால், அந்த மாணவனின் எதிர்காலமே நாசமாகியிருக்குமே! இத்தகைய பொறுப்பின்மையை எப்படி ஏற்க முடியும்? இத்தகைய பிழையைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இப்படிப்பட்ட தவறுகள் ஏற்படுவதன் பின்னணியையும் நாம் கண்டறிந்து அவற்றைக் களைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். விடைத்தாள் திருத்துவதற்கு உரிய தகுதிகள் இல்லாத தனியார் பள்ளி ஆசிரியர்களை +2 விடைத்தாள் திருத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. தவிரவும், நாள்தோறும் அதிகப்படியான விடைத்தாள்களைத் திருத்துமாறு ஆசிரியர்களை முகாம் அலுவலர் வற்புறுத்தக்கூடாது. முகாம் தொடங்கிய பிறகு, சில மையங்களில் போகப்போகத் திருத்தவேண்டிய விடைத்தாள்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்வதும் நடக்கிறது.

மேலும் +2 விடைத்தாள் திருத்த விருப்பம் இல்லாத ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தப் பட்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். சில மையங்களில் திருத்தும் ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. இப்படிப்பட்ட நடைமுறையால், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். கொடுக்கப்பட்ட விடைத்தாள்களை அந்தந்த நாள் மாலைக்குள் திருத்திக் கொடுக்கவேண்டிய கடமையும் இருப்பதால், வேகவேகமாகத் திருத்த வேண்டிய சூழல் உருவாகி மனிதத் தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன.

எனவே, இத்தகைய திணிப்புச் சூழலை மாற்றி அமைத்து, சாதகமான சூழலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும். (Evaluation friendly situation) விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு மிகக் குறைவான தொகையே அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, முகாம் நாட்களை அதிகப்படுத்தாமல் திருத்தும் பணியை விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் கல்வி அதிகாரிகளுக்கு உண்டாகிறது. இத்தகைய குறைபாடுகளை நீக்கி, சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்குஉள்ளது.

முகாம் அலுவலர், ஆசிரியர்கள், அரசு ஆகிய முத்தரப்பினரும் கடந்தகாலப் பிழைகளிலிருந்து படிப்பினைகள் பெற்று மாணவர்கள் எதிர்காலத்தில் எள்ளளவும் பாதிக்கப்படாத வகையில், விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றார். +2 மதிப்பெண்தான் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையும் கவனமுடன் செயல்படவேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.

மேலும்

X