நிலையற்ற கல்வித் தகுதி குழப்பத்தில் பேராசிரியர்கள்!

7/15/2019 5:12:48 PM

நிலையற்ற கல்வித் தகுதி குழப்பத்தில் பேராசிரியர்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகக் கல்லூரிகளில் பணிபுரியும் தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ள நிலையில், தகுதியற்ற பேராசிரியர்களை பணிநீக்கம் செய்ய தங்கள் உறுப்புக் கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழகங்கள் உத்தரவிட்டுள்ளன.

யு.ஜி.சி. உத்தரவைப் பின்பற்றி சென்னைப் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, நெல்லை ம.சுந்தரனார் பல்கலை, பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, அன்னை தெரசா பல்கலை, பெரியார் பல்கலை, திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பேராசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநில இணைச்செயலர் சோ.சுரேஷ் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…
‘‘கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் கல்வி படித்த மாணவர்களிடையே வேலையின்மை பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான மாணவர்களின் தேர்வாக கலை/அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

தமிழகத்தில் அரசு கலை/அறிவியல் கல்லூரிகள் 106, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் 28, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 139, சுயநிதிக் கல்லூரிகள் 520 என மொத்தம் சுமார் 800 கல்லூரிகள் தற்போது இயங்கிவருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 30,000. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நிரந்தர அடிப்படையில் பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ள கல்வித் தகுதியுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் சுமார் 13,000 பேர்.

அரசு கலை/ அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கை சுமார் 3700. பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் சுமார் 600 பேர். இவர்களைத் தவிர மீதமுள்ளவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள சுயநிதி பாடப்பிரிவுகளிலும், சுயநிதிக் கல்லூரிகளிலும் பணியாற்றிவருகின்றனர்.

தமிழகத்தின் கலை/அறிவியல் கல்லூரிகளில் பயின்றுவரும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம். சென்ற கல்வி ஆண்டின் இறுதியிலேயே அனைத்து கல்லூரிகளுக்கும், அந்தந்த பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், 2019-20 ஆம் கல்வி ஆண்டிலிருந்து பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள கல்வித் தகுதியுடையவர்கள் மட்டுமே கல்லூரிகளில் பணியாற்ற முடியும் எனச் சுற்றறிக்கை மூலம் தெரிவித்தது.

பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்துள்ள கல்வித் தகுதி என்பது, தேசிய தகுதித் தேர்விலோ (NET) அல்லது மாநில தகுதித் தேர்விலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். பல்கலைக்கழக மானியக்குழு வரையறுக்கும் கல்வித் தகுதி என்பது அவ்வப்போது மாறிக்கொண்டே வந்துள்ளது.

1993-ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் சேர முதுநிலைப் பட்டத்துடன் 55% மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானதாக இருந்தது. 1993 ஆம் ஆண்டுக்கு முன் பெற்ற M.Phil அல்லது Ph.d., அல்லது NET அல்லது SET தேர்ச்சி பெற்றிருப்பது தகுதியானது. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் 1973-ஆம் ஆண்டிலிருந்து 2000-ஆம் ஆண்டு வரை முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும்கூட கல்லூரி ஆசிரியர் பணியில் சேர முடியாது.

NET அல்லது SET தேர்ச்சி பெற்றிருப்பதுதான் ஒரே தகுதியாக இருந்தது. அதேசமயம் மீண்டும் 2000-ஆம் ஆண்டிலிருந்து NET/SET தேர்ச்சி பெற்றிருப்பது அல்லது முனைவர் பட்டம் பெற்றிருந்தால் கல்லூரி ஆசிரியர்களுக்குக் கல்வித் தகுதியாக மாற்றப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் M.Phil பட்டமும் அடிப்படைத் தகுதியாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் 2009 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து தற்போது வரை NET/SET தேர்ச்சி பெற்றிருத்தல் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருத்தல் என்பது தகுதியாக்கப்பட்டுள்ளது’’ என்று நிலையில்லாத பேராசிரியர்களுக்கான கல்வித்தகுதி குறித்து பட்டியலிட்டார் சுரேஷ். மேலும் அவர் கூறுகையில், ‘‘அடிப்படைத் தகுதிகள் அவ்வப்போது மாறும்போது, ஏராளமான குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, 2007 முதல் 2009 வரை M.Phil பட்டமும் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில், பலர் அப்பட்டத்துடன் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டனர்.

அந்த காலத்தில் M.Phil பட்டம் பெற்றவர்கள் 2009 ஆம் ஆண்டுக்குப்பின் கல்லூரி ஆசிரியர் பணியில் சேரமுடியாது என்பது முரண்பாடாக இல்லையா? கல்லூரி ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்துள்ள கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பல்கலைக்கழகங்கள், அவர்களுக்கு மானியக்குழு வரையறுத்துள்ள ஊதியத்தினை பெற்றுத்தர என்ன முயற்சி எடுத்துள்ளன? கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000 வழங்க வேண்டுமென, பத்தாண்டுகளுக்கு முன் பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்தியதை அமல்படுத்துவதில் பல்கலைக்கழகங்களின் பங்கு என்ன?

நிரந்தர அடிப்படையில் தற்போது கல்லூரிப் பணியில் சேரும் ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.57,700. அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ.15,000 தான். பெரும்பாலான சுயநிதிக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மாத ஊதியம் ரூ.10,000 கூட தாண்டவில்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.25,000 ஆக உயர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்திருப்பது சற்று ஆறுதலான செய்தி.

குறைந்தபட்ச கல்வித்தகுதி வேண்டாமென்று சொல்லவில்லை. பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள ஊதியத்தையும் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்துபணியமர்த்தி, பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள ஊதியமான ரூ.57,700ஐ நிர்ணயித்தும், தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு, தகுதி பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறை கொடுத்து குறைந்தபட்சம் ஊதியம் நிர்ணயம் செய்வதுமே தற்போதைக்குத் தீர்வாக இருக்க முடியும்’’ என்றார்.

-தோ.திருத்துவராஜ்

X