கணினி பயிற்றுநர் தேர்வு குளறுபடிகள்!

7/24/2019 4:54:04 PM

கணினி பயிற்றுநர் தேர்வு குளறுபடிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பல ஆண்டுகளுக்குப் பிறகு பி.எட். முடித்த கணினி பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வு (Eligibility Test) மூலம் அரசுப் பள்ளிகளின் கணினி  ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) கடந்த  மார்ச் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஜூன் 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் 119 தேர்வு மையங்களில் ‘ஆன்லைன்’ மூலம் கணினி பயிற்றுநர்  தேர்வு நடத்தப்பட்டது. இதில், பல தேர்வு மையங்களில் சர்வர் கோளாறு காரணமாக தேர்வு நடைபெறுவதில் குளறுபடி ஏற்பட்டது.

இந்த சர்வர் பிரச்னையை சந்தர்ப்பமாக பயன்படுத்தி நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு உள்ளிட்ட சில தேர்வு மையங்களில் பல தேர்வர்கள்  குழுவாக விவாதித்து கைபேசியின் உதவியுடன் ‘காப்பி’ அடித்துள்ளனர்.இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ‘வைரலாக’ பரவி  அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநிலச் செயலாளர் அகிலனிடம் பேசினோம். ‘‘இந்த செய்திகளைப் பார்த்தபோது எங்களுடைய எதிர்காலம் பறிக்கப்பட்டதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டோம். தேர்வு நடைபெற்ற  ஞாயிற்றுக்கிழமை (23.06.2019) மாலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ‘சர்வர் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் மறுதேர்வு  நடத்தப்படும்’ என்று கூறப்பட்டது.

இதையடுத்து ஜூன் 24-ம் தேதி மாலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மீடியாக்கள் & சமூக வலைத்தளங்களின் வீடியோக்களில்  ‘பெயர்கள்’ வெளியான மூன்று தேர்வு மையங்களில்‌ மட்டும் ‘27.06.2019 (வியாழன்)’ அன்று மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், பெயர் குறிப்பிடப்படாத & வீடியோ ஆதாரங்கள் இல்லாத தேர்வு மையங்களின் பெயர்கள் இந்த மறுதேர்வுக்கான பட்டியலில் சேர்க்கப்படாதது  எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், பல தேர்வு மையங்களில் தேர்வை நடத்தும் தேர்வு மைய பணியாளர்களின் உதவியுடன் பலர் கைபேசியில் விடை
களைத் தேடி ‘காப்பி’ அடித்து எழுதியுள்ளார்கள். இந்தத் தேர்வு மையங்களின் வீடியோ ஆதாரங்கள் இல்லாததால் அவை முழுவதும் மூடி  மறைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் வழித்தேர்வு நடைபெற்ற 119 தேர்வு மையங்களிலும் இருந்த “CCTV” கேமராக்களின் வீடியோக்களை மறு-ஆய்வு செய்தால் இந்த  உண்மைநிலை தெரிந்துவிடும். இந்தத் தேர்விலாவது தேர்ச்சி பெற்று ஆசிரியர் ஆகிவிடலாம் என நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த தனியார்  வேலையையும் விட்டுவிட்டு பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக செலுத்தி பயிற்சி வகுப்புகளுக்கு சென்று 3 மாதங்களாக கஷ்டப்பட்டு படித்தோம்.

அவ்வாறு படித்து நேர்மையான முறையில் தேர்வெழுதிய எங்களுக்கு கிடைத்தது ஏமாற்றமும், அநீதியும் மட்டுமே’’ என்று வேதனை தெரிவித்தார். ‘‘இந்தத் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டால், “பிட்” அடித்து தேர்வை எழுதியவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று அரசு வேலைக்குச்  சென்றுவிடுவார்கள்;

ஆனால், நேர்மையாக தேர்வை எழுதிய எங்களின் கதியை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது. நேர்மையானவர்கள் தண்டிக்கப்படக்கூடாது;  அயோக்கியத்தனம் செய்த எவரும் ‘ஆசிரியர்’ பணிக்கு வரக்கூடாது என்பதே எங்களுடைய பிரதான கோரிக்கை. இவ்வளவு குளறுபடிகளும்,  முறைகேடுகளும் நடந்துவிட்டதால் யார் நேர்மையாக எழுதினார்கள்? யார் காப்பி அடித்து எழுதினார்கள்? என்ற அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த குளறுபடிகளால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதான நம்பகத்தன்மை குலைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்

மேலும்

X