அலட்சியப்படுத்தும் தமிழக அரசு...அவலநிலையில் பகுதிநேர ஆசிரியர்கள்!

7/30/2019 5:13:18 PM

அலட்சியப்படுத்தும் தமிழக அரசு...அவலநிலையில் பகுதிநேர ஆசிரியர்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சர்ச்சை

மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் கல்வி மானிய கோரிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் என எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…

‘‘சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தோம். எதையும் அறிவிக்கவில்லை. கல்வி மானியக் கோரிக்கையிலாவது அறிவிப்பார்களா என எதிர்பார்த்தோம், அதிலும் எதையும் அறிவிக்கவில்லை. இது எங்களுக்குப் பேரதிர்ச்சியாக உள்ளது.

இருப்பினும் இதே கூட்டத்தொடரிலே முதல்வரின் 110 விதி அறிவிப்பிலாவது மனிதநேயத்துடன் 12,000 பேர் குடும்பநலன் கருதி ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தர அறிவிப்பை அரசு வெளியிடவேண்டும் எனத் தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மீண்டும் வேண்டுகோள் வைக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பகுதிநேரமாக பல்வகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2011-12 கல்வி ஆண்டில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன் போன்ற கல்வி இணைச் செயல்பாடுகளில் பயிற்சி அளிக்க 16,549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டோம். தொகுப்பூதியமாக ரூ.5,0000 ஆரம்பத்தில் தரப்பட்டது’’ என்று தங்கள் பணி நியமனத்தின் ஆரம்ப நிலையைக் கூறினார்.

‘‘ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்திவந்தோம். சட்டமன்றத்திலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மானியக் கோரிக்கையின்போது பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திவந்தனர். இதைத் தொடர்ந்து 2014ல் ஜெயலலிதாவால் அதிகபட்சமாக (40%) ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்பட்டு சம்பளம் ரூ.7ஆயிரமானது. அதோடு மட்டுமில்லாமல் 12ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது. இதன் பின்னர் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து கோரிக்கைகளை சட்டமன்றத்திற்குள்ளும், வெளியிலும் பலவழிகளில் வலியுறுத்தினோம்.

இந்த நிலையில் 2017ம் ஆண்டு ஆகஸ்டு 22 ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக 10 சதவீத ஊதிய உயர்வாக ரூ.700 ஆகஸ்ட் மாதத்திலிருந்து வழங்க குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொகுப்பூதியம் 7,700 ஆனது.

ஆனால், SSA-வின் அனைத்துத் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வும், ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையும் வழங்கி பகுதிநேர ஆசிரியர்களைப் பாரபட்சமாக நடத்திவிட்டது அரசு’’ என்று வேதனையோடு தெரிவித்தார் செந்தில்குமார்.

பகுதிநேர ஆசிரியர்களின் அவலநிலை குறித்து கூறும்போது, ‘‘ஜாக்டோஜியோ கூட்டமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பள்ளி
களைத் திறந்து பகுதிநேர ஆசிரியர்களைப் பயன்படுத்தி முழுநேரமும் நடத்திட அரசு உத்தரவிடுகிறது. அரசின் உத்தரவின்படி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்ட காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களே பள்ளிகளைத் திறந்து முழுநேரமும் நடத்திவருகின்றோம்.

எமிஸ், பவர் ஃபைனான்ஸ், இ-மெயில், Computer Typing Work உள்ளிட்ட கணினி சம்பந்தப்பட்ட வேலை மட்டுமின்றி, பள்ளி நேரங்களில் தரப்படும் எல்லாவிதமான வேலைகளையும் இந்த தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் பயன் எதுவுமின்றி செவ்வனே செய்து வருகிறோம். பாட ஆசிரியர்கள் பள்ளி வராத நாட்களிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும் நாங்கள் பயன்படுத்தப்படும் விதம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படாமல் எங்கள் வாழ்க்கைத்தரம் ஏறிவிட்ட விலைவாசியால் சிக்கலில் தத்தளிக்கின்றது.

எட்டு ஆண்டுகள் முடிந்து இப்போது 9வது ஆண்டும் ஆரம்பித்துவிட்டது. தொகுப்பூதியத்தை உயர்த்தியிருக்கலாம், சிறப்புக் காலமுறை வழங்கியிருக்கலாம், காலமுறை ஊதியம் வழங்கியிருக்கலாம். ஆனால் இவற்றில் எதுவும் செய்யாமல் 7வது ஊதியக்குழுவின் 30 சதவீத சம்பள உயர்வைக்கூட நடைமுறைப்படுத்தாமல் இக்குறைந்த தொகுப்பூதியத்திலே நீண்டகாலமாக காலத்தை கடத்துவது எந்த வகையில் நியாயம்?’’ என்று கேள்வி எழுப்புகின்றார் செந்தில்குமார்.

‘‘இனியும் தொகுப்பூதியத்தை அதிகபட்சமாக ரூ.15,000 வழங்காமல் இருப்பது எதிர்காலத்தைப் பாதிக்கும். கோவா மாநிலத்தில் ரூ.15,000 ஆந்திரா மாநிலத்தில் ரூ.14,203 என அதிகபட்ச சம்பளம் இதே SSA பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இந்த மாநில அரசுகளைப்போலக் குறைந்தபட்சம் அதே தொகுப்பூதியத்தை தமிழகத்திலும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பகுதிநேர ஆசிரியர்களின் நியமன அரசாணையில் மே மாதம் சம்பளம் குறித்து எதுவும் ஆணையிடப்படாத நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொருவரும் இழந்துவரும் மே மாதம் சம்பளம் ரூ.53,400ஐ உடனடியாக வழங்க வேண்டும்.இது ஒருபுறமிருக்க 8 ஆண்டுகளுக்கும் போனஸ்கூட தரப்படாமல் உள்ளது. வேறெந்த துறைகளிலும் இதுபோன்று நடந்ததில்லை.

பகுதிநேர ஆசிரியர்களும் SSA-வில் பணிபுரியும்போது, SSA-வின் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் போனஸ் கொடுத்துவிட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு  மட்டும் தராமல் இருப்பது எந்தவகையில் நியாயம்? எனவே 8 ஆண்டு போனஸ் நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு உடனடியாக வழங்கவேண்டும். மேலும், இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் சிறப்பு நிதியிலிருந்து குடும்ப நலநிதியாக 2 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்.

P.F., E.S.I உடனடியாக அமுல்படுத்த வேண்டும். மகளிருக்கு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 1325 உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் நிரந்தரப்பணிக்கு தேர்வு நடத்தியபோதும், தற்போது நடந்த 814 கணினி ஆசிரியர்கள் தேர்விலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். மொத்தம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களில் விபத்து மற்றும் இயற்கை மரணம், 58 வயதை எட்டி பணிமூப்பில் பணி ஓய்வு, பணி ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள 4,000 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இலவசமாகப் படிக்க அரசே ஒருவகையில் ஊக்குவிக்கிறது. ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் 100 மாணவர்கள் என்ற விதியை தவிர்த்து பொது மாறுதலை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும்.

முதலில் எங்கள் சம்பளத்தை பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலுடன் சேர்த்து கருவூலம் மூலமே ECS முறையில் வழங்குங்கள். தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு வழங்கி  சம்பளப் பிடித்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அனைவரையும் கல்வித் தகுதிக்கேற்பச் சிறப்புத் தேர்வு நடத்தி அவரவர் பாடப்பிரிவுகளில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பணிநிரந்தரம் செய்ய காலதாமதம் ஆகும் எனில் அதுவரை குறைந்தபட்ச மாக ரூ.15,000 சம்பளத்தை வழங்கும் அறிவிப்பைகூட கல்வி மானியக் கோரிக்கையில் வெளியிடாதது பகுதி நேர ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது.

எனவே, இனியும் தாமதிக்காமல் பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு/பணிநிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

- தோ.திருத்துவராஜ்

X