மருத்துவ மாணவராக ஒரு தேர்வு... மருத்துவராக ஒரு தேர்வு! கலக்கத்தில் மாணவர்கள்...

8/6/2019 12:59:18 PM

மருத்துவ மாணவராக ஒரு தேர்வு... மருத்துவராக ஒரு தேர்வு! கலக்கத்தில் மாணவர்கள்...

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய அரசு இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதற்காக, தனி மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த மசோதாவில் மருத்துவ மாணவர்கள் MBBS படிப்பின் இறுதி ஆண்டில் நடக்கும் ‘நெக்ஸ்ட்’ (National Exit Test) தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவப் பட்டமே பெற முடியும். அதன் பின்னர்தான் மருத்துவராக பதிவு செய்துகொண்டு மருத்துவர் பணியை மேற்கொள்ள முடியும். இதன் நோக்கம் என்ன, இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என கல்வியாளர்கள் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்...

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை மேல்படிப்பில் படிக்கலாம் என்ற நிலை இருந்தபோது அவரவர் விரும்பிய பாடத்திற்கு சென்றார்கள். அப்படி பலரும் மருத்துவராகும் கனவுகளோடு மருத்துவக் கல்லூரிகளுக்கு வந்தார்கள். நீட் என்ற ஒரு தேர்வு வந்தபிறகு யாருக்கெல்லாம் கோச்சிங் சென்டர் சென்று பணம் கட்டி படிக்க முடியுமோ, அதுவும் ஒரு ஆண்டு அல்ல… குறைந்தது இரண்டு ஆண்டுகள் படித்தால்தான் அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி இடத்திற்கு வரமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த ஆண்டு ஐநூறுக்கும் மேல் நீட் தேர்வில் மதிப்பெண் எடுத்திருப்பவர்கள் மட்டும்தான் அரசுக் கல்லூரியில் சேரும் எதிர்பார்ப்போடு இருக்கலாம்.

அதற்கு கீழ் மதிப்பெண் எடுத்திருந்தால் தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது. எனவே, அனைத்து மாணவர்களும் மருத்துவர் ஆகவேண்டுமென்றால் ‘நீட் வேண்டாம், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும்’ என்ற எங்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்றம் சட்ட மசோதாவை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், தேசிய கல்விக்கொள்கை வரைவு என்கின்ற அந்த ஆவணம் நுழையும்போது நீட், வெளியேறும்போது எக்ஸிட் என்று மேலும் ஒரு தேர்வை திணிக்கிறது.

தகுதி பெற்ற மாணவர்களைத்தான் நாங்கள் எடுக்கிறோம் என்று ஒரு பக்கம் சொல்லிவிட்டு, தகுதி பெற்ற மாணவர்களை தகுதிப்படுத்த வேண்டிய மருத்துவக் கல்லூரி, தன் கல்லூரியின் மீது தன் பாடத்திட்டத்தின் மீது தனக்கே சந்தேகம் எழுகிறது என்று சொன்னால் அதற்கு மாணவர்களை ஏன் பலியாக்க வேண்டும்? என்ற கேள்விதான் எழுகிறது. இந்த எக்ஸிட் எக்ஸாம் என்று சொல்வது உண்மையிலேயே தகுதி பெற்ற மருத்துவர்களை தேர்ந்தெடுத்து தகுதியை வளர்ப்பது என்பதெல்லாம் கிடையாது. தகுதி எங்கே வரும், கல்லூரியில் பாடம் படிக்கின்ற இடத்தில் இருக்கின்ற சூழலைப் பொறுத்துதான் தகுதி வளரும்.

கல்லூரியில் பாடத்தைப் படிக்கின்ற அதே நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று அதற்குண்டான பயிற்சியை மேற்கொள்கிறார்கள். இதுதான் தகுதிப்படுத்துவதற்கான ஏற்பாடு. ஒரு தேர்வு எப்படி தகுதிப்படுத்தும்? மீண்டும் மீண்டும் அந்த மாணவர்களை கோச்சிங் சென்டர்களை நோக்கி தள்ளுவது நீட்டுக்கு பல லட்சம் செலவு செய்ததைப்போல் எக்ஸிட் தேர்வுக்கும் ஐந்தாம் ஆண்டு இறுதிக்கு பல லட்சம் செலவு செய்ய வேண்டும் என்ற சூழலைத்தான் உருவாக்கும். இத்திட்டம் உண்மையிலேயே ஆர்வம் மிக்க, மக்களுக்கு பணியாற்ற வேண்டும், சேவை செய்யவேண்டும் என்ற மருத்துவர்களை மருத்துவர்களாக வரவிடாமல் செய்யக்கூடிய ஓர் ஏற்பாடு. இதன் விளைவாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிடைக்கவேண்டிய மருத்துவர்கள் இல்லாமல் போகக்கூடிய சூழலை உருவாக்கி சீரழித்துவிடும்.

டாக்டர். ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

இது மருத்துவக் கல்வியில் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் மீதான மற்றுமொரு தாக்குதலாகும். மருத்துவ மாணவர்கள் அனைவரும், எக்ஸிட் தேர்வில் வெற்றிபெற்றால்தான் மருத்துவராக பணியைத் தொடர முடியும் என இம்மசோதா கூறுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) இதை உறுதிப்படுத்துகிறது. தேர்வுகளை நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இத்தேர்வு புகுத்தப்படுகிறது. மருத்துவ மாணவர்கள், இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில்தான் பயில்கிறார்கள், மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வுகளை எழுதித்தான் வெற்றிபெறுகிறார்கள். இறுதியாண்டுத் தேர்வில் வெற்றிபெற்ற பின், ஓராண்டு காலத்திற்கு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த பிறகுதான், மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துகொண்டு பணியை செய்கிறார்கள். இந்நிலையில், எக்ஸிட் தேர்வு தேவையற்ற ஒன்று. எக்ஸிட் தேர்வே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாகவும் மாற்றப்படுகிறது. இது குழப்பங்களை உருவாக்கும்.

இறுதியாண்டு மருத்துவத் தேர்வு என்பது ஒரு தகுதிகாண் (Qualifying Examination) தேர்வாகும். அத்தகுதிகாண் தேர்வை, முதுநிலை மருத்துவ இடங்களை பெறுவதற்கான போட்டித் தேர்வாக ( Competitive Examination) மாற்றுவது சரியல்ல. இவ்வாறு மாற்றினால், முதலாமாண்டு முதல் மருத்துவ மாணவர்கள் போட்டித் தேர்விற்காக படிக்கத் தொடங்கிவிடுவார்கள். இது மருத்துவக் கல்வியின் தரத்தை பாதிக்கும். மாநில அரசுகளின் பல்கலைக்கழகங்களை ஒழித்துவிட்டு, மத்திய அரசின் முழுமையான கட்டுப்பாட்டிற்கு, மருத்துவக் கல்வியைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கம் இத்தேர்வில் உள்ளது.

எக்ஸிட் தேர்வுதான், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எனில் ஏற்கனவே மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்காக காத்திருப்போர் என்ன செய்வது? ஒரு முறை எழுதும் எக்ஸிட் தேர்வு மதிப்பெண் மூலம், முதுநிலை மருத்துவ இடம் கிடைக்காவிட்டால், அடுத்த முறை என்ன செய்வது? மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் எக்ஸிட் தேர்வை எழுத முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. எக்ஸிட் தேர்வுடன், செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வும் உண்டா? என்பது குறித்து விளக்கம் இல்லை.

செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு உண்டு எனில், அவை உள்ள ஒரு தகுதிகாண் தேர்வை, போட்டித் தேர்வாக மாற்றினால், அது ஊழல் முறைகேடுகள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும். எக்‌ஸிட் தேர்வில், செய்முறைத் தேர்வு, clinical exam, வாய்மொழித் தேர்வு இடம்பெறாதெனில், மருத்துவப் படிப்பின் தகுதிகாண் தேர்வின் நோக்கமே சிதைந்துவிடும். ஒரு மருத்துவரின் திறமையை முழுமையாக அறியமுடியாமல் செய்துவிடும். எனவே, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர, தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தும் முறையே தொடர வேண்டும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கு, மாநில அரசுகள்தான் தனி நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும். மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்.

- தோ.திருத்துவராஜ்

மேலும்

X