எஸ்.பி.ஐ. வங்கித் தேர்வு முடிவும் கட்ஆஃப் மார்க் பிரச்னையும்!

8/27/2019 5:44:45 PM

எஸ்.பி.ஐ. வங்கித் தேர்வு முடிவும் கட்ஆஃப் மார்க் பிரச்னையும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப IBPS தேர்வு நடத்தப்படும். ஆனால் SBI வங்கி மட்டும் தனியாகத் தேர்வு நடத்தி அதன் மூலமே ஆட்களை தேர்வு செய்கிறது. இந்தநிலையில் சமீபத்தில் வங்கியின் கிளர்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதில் எஸ்.சி., ஓ.பி.சி. மற்றும் பொதுப் பிரிவினர் ஆகிய 3 தரப்பினருக்கும் 61.25 மதிப்பெண் கட்ஆஃப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி. பிரிவினருக்கு 53.75 மதிப்பெண் கட்ஆஃப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 28.5 மதிப்பெண் மட்டுமே கட்ஆஃப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்…

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன், சமூக ஆர்வலர்

சமீபத்தில் நடந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தேர்வு முடிவில் ஒரு குழப்பம் நிகழ்ந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS) பிரிவில் எழுத்துத் தேர்விற்கான தகுதி மதிப்பெண் 28.5 என்று நிர்ணயிக்கப்பட்டதுதான் அந்தக் குழப்பம். அதே தேர்வில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பெற வேண்டிய மதிப்பெண் குறைந்த பட்சம் 61.5 %, 54.75 %. முன்னேறிய சமுதாய மக்கள் பெற வேண்டிய மதிப்பெண் 68.25 %. அந்தப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் பெற வேண்டிய மதிப்பெண் அதுவே. (படம் 1) ஆனால், இரண்டாம் படத்தில் இருப்பது வேலை தேடிய நபர் ஒருவரின் மதிப்பெண் பட்டியல். அதில் EWS பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் 28.5 என்று போடப்பட்டிருக்கிறது. முதலில் இது அச்சுப்பிழையோ என்னும் கருத்து நிலவியது. ஆனால், அதற்கான விளக்கம் வங்கியால் தரப்பட்டிருக்கிறது. அந்தப் பிரிவில் எழுதிய நபர்களில் உச்சபட்ச மதிப்பெண்ணையும் இருக்கக்கூடிய காலி இடங்களையும் கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தேர்விற்கும் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் வழிமுறை என்பதே அந்த விளக்கம்.

இது நடைமுறையில் உள்ள ஒன்றுதான். உதாரணமாக, இந்திய அளவிலான பள்ளி பொதுத் தேர்வுகளில் CBSE மற்றும் STATE BOARD தேர்வுகளை எடுத்துக் கொள்வோம். முன்னது கொஞ்சம் கடினமான ஒன்று. மாநிலத் தேர்வு அதைவிடக் கொஞ்சம் எளிமையானது. அதனால் மாணவர்கள் பெறும் முதல் இட மதிப்பெண் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும். அவற்றை நேராக ஒப்பிட முடியாது. நான்கு கால்கள் இருப்பதாலேயே மேஜையும் நாற்காலியும் ஒன்றுதான் என்பது போன்ற ஒப்பிடல் அது. உதாரணமாக, ஸ்டேட் போர்டில் ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு முதலிடம் என்று வைத்துக்கொள்வோம்.

CBSE-யில் அதே பாடத்தில் தேசிய அளவில் 75 தான் முதல் மதிப்பெண் என்று வைத்துக் கொள்வோம். நார்மலைசேஷன் எனப்படும் சமன் செய்யும் விதியின்படி இந்த 75ஐ நூறு என்று கருதுவார்கள். அப்படியானால் ஒரு மாணவர் 60 மார்க் எடுத்திருந்தால் அது 80 என கருதப்படும். இந்த அடிப்படையில் கல்லூரி அனுமதி வழங்கப்படும். இது சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றுதான். நீதிமன்றம் சிபாரிசு செய்த வழிமுறையும் கூட. இதே விதியை இங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
குறைந்தபட்ச மதிப்பெண்ணான 68.25 ஐ EWS பிரிவின்கீழ் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது மொத்த காலியிடங்கள் 100 என்று வைத்துக்கொண்டால் இந்தப் பிரிவினருக்கு 10 இடங்கள் உண்டு. அதைப் பெற குறைந்தபட்ச மார்க் 28.5 என்று சுருங்கியிருக்கிறது.

நீதிமணி, கல்வியாளர்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளித்தது சமூக நீதிக்கு எதிரானது என்று பேசி வருகிறோம். இதில் அடுத்த அதிர்ச்சியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் எழுத்தர் (clerk) தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன. தேர்ந்தோர் பட்டியலுக்கு நிர்ணயித்துள்ள தகுதி மதிப்பெண் (cut off) அநீதியின் உச்சமாக உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினரில் அதிக மதிப்பெண் எடுத்தவர் எவரும் இல்லை என்பதால் இந்தக் குறைந்த தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவறு. இதற்கான தீர்வு கலைஞர் ஆட்சியில் அருந்ததியர்களுக்கு வழங்கிய 3% உள்ஒதுக்கீட்டில் உள்ளது. பட்டியல் இனத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டின் ஒரு பகுதி. அதன் அடிப்படையில் இந்த உள்ஒதுக்கீட்டின் சிறப்பு என்னவென்றால் அருந்ததிய தேர்வர்களின் பட்டியல் தயாரிக்கவேண்டும். பொதுவான பட்டியலினத்தவர்களின் தேர்வர் பட்டியல் தயாரிக்க வேண்டும். இரண்டையும் ஒப்பிட்டு பொதுவான பட்டியல் இனத்தவர்களுக்கு நிகராக மதிப்பெண் எடுத்த அருந்ததியர்களை பொதுவான SC தேர்ந்தோர் பட்டியலில் வைத்து வேலை கொடுக்க வேண்டும். SC (பொது) பிரிவின் தகுதி மதிப்பெண்ணுக்கு (cut off) குறைவாக மதிப்பெண் பெற்ற அருந்ததியர்களுக்கு 3% உள் ஒதுக்கீட்டில் வைத்து வேலை கொடுக்க வேண்டும்.

இதைப் பின்பற்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டவர்களின் இடஒதுக்கீட்டையும் முறைப்படுத்தலாம். பட்டியலினத்தவர்களின் (SC) தகுதி மதிப்பெண் பிற்படுத்தப்பட்டவர்களின் தகுதி மதிப்பெண் இரண்டில் எது அதிகமோ அதை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தவர் அதைவிட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பை நிராகரித்துவிடலாம். அந்த இடங்களை பொதுப்பிரிவில் வைத்து (General) நிரப்பலாம். ஏனெனில் இந்த 10% இடஒதுக்கீடு என்பது பொதுப்பிரிவிலிருந்து அபகரிக்கப்பட்டது. பொதுப்பிரிவில் நல்ல மதிப்பெண் பெற்ற அனைத்து சமூகத்தினரும் இதன்மூலம் பயனடையலாம். இப்படி, ஏதோவொரு மாற்று இல்லாமல் இந்த அபகரிப்பை சரிப்படுத்த முடியாது.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X