அரசுப் பள்ளியை மீட்டெடுத்த தலைமை ஆசிரியர்!

9/11/2019 5:18:25 PM

அரசுப் பள்ளியை மீட்டெடுத்த தலைமை ஆசிரியர்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அரசுப் பள்ளிகள் மூடப்படும் செய்திகள் தொடர்கதையாகிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதற்கான காரணங்கள் பலவற்றைப் பட்டியலிடமுடியும் என்பது மறுப்பதற்கில்லை. காய்கறி வியாபாரம் செய்பவர்கூட தன் பிள்ளை கான்வென்ட்டில் படித்தால்தான் நன்றாகப் படிக்கும் என்ற எண்ணம் ஆழப் பதிந்துவிட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், சமீபகாலமாக ஒருசில தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் தன்னலமற்ற முயற்சிகளால் அரசுப் பள்ளிகள் அசத்தும் பள்ளிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதற்கு உதாரணமாக இப்போது ஒரு அரசுப் பள்ளியைப் பற்றிப் பார்ப்போம்… வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பேரணாம்பட்டு ஒன்றியம் ஈச்சம்பட்டி மூப்பர் காலனி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது.

இப்பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை இல்லாததால் பள்ளி மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பள்ளிக்கு தலைமையாசிரியராக வந்த பிரபுதாஸ் மலர்வேந்தன் எடுத்த முயற்சியால் கடந்த 3 ஆண்டுகளாகப் படிப்படியாக மாணவர் சேர்க்கை கூடுதலாகி தற்போது 133 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து செல்வதால் அவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்தப் பிரச்னையைப் பார்த்துவிட்டு தலைமையாசிரியர் பிரபுதாஸ் மலர்வேந்தன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் கிராம மக்களும் ஒன்றிணைந்து மாணவர்கள் நலனுக்காக 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு பேருந்தை வாங்கியுள்ளனர்.

அந்தப் பேருந்தில் தினந்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லவும் பின்னர் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் ஒரு அரசுப் பள்ளி மீட்டெடுக்கப்படும் ஆச்சரியமான சம்பவம் குறித்து தலைமையாசிரியர் பிரபுதாஸ் மலர்வேந்தனிடம் பேசினோம், ‘‘இப்பள்ளிக்கு மாற்றலாகி வருவதற்கு முன்பாக நான் ஆம்பூர் அருகே உள்ள மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டகிந்தூர் கிராமத்தின் தொடக்கப்பள்ளியில் 1999ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். அங்கு பணியாற்றிய மற்ற
ஆசிரியர்களின் உதவியோடு அந்தத் தொடக்கப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து நடுநிலைப் பள்ளியாக ஆக்கினோம். அதன் பின் இந்தப் பள்ளிக்கு 2014-15ம் கல்வி ஆண்டில் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று வந்தேன்.
 
நான் தலைமையாசிரியராக வந்தபோது பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வெறும் பதினேழாக இருந்தது. பள்ளியானது 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓடுகளால் வேயப்பட்ட பழைய கட்டடமாக இருந்தது. பழுதடைந்த வகுப்பறைகளாக இருந்ததால் மழைநீர் தேங்கியது. மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்குப் பாதுகாப்பற்றதாகவும் இருந்தது. எனவே, கிராம கல்விக் குழு (VEC) தலைவர் பரமதயாளன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தலைவர் வினோதா தேவேந்திரன் அதன் உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துப் பேசினேன். மேலும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டேன். என் முயற்சிக்கு இங்குள்ள மக்களும், பெற்றோர்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கினர்’’ என்கிறார் தலைமையாசிரியர் பிரபுதாஸ்.

அரசுப் பள்ளியை மீட்டெடுக்க முயற்சிகளையும் அந்த முயற்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பையும் பற்றி கூறும்போது, ‘‘எங்கள் முயற்சிகளின் விளைவாக பள்ளியின் பழைய கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அருகில் உள்ள மத்தூர் கொல்லை, காட்டு வெங்கடாபுரம் மேல் குப்பம், இலங்கைத் தமிழர் குடியிருப்பு போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் ஆட்டோவின் மூலம் வந்து படிக்க ஆரம்பித்தனர். மாணவர் சேர்க்கை உயர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபோது பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க சுலபமான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தோம்.

அதே பகுதிகளைச் சேர்ந்த பிடிஏ (PTA) ஆசிரியைகளாக படித்து பட்டம் பெற்றவர்களைப் பணி அமர்த்தி அவர்களுக்கு மாதம் ரூபாய் 20,000 (இருபதாயிரம்) தர திட்டமிட்டோம். இத்திட்டத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த சவுதி அரேபியாவில் எஞ்சினியராகப் பணிபுரியும் மோகன் என்பவர் உதவ முன்வந்தார். அதனையடுத்து தற்போது மாணவர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமானதும் வேறு ஒரு சிக்கல் உருவானது. சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள் ஆட்டோவில் வருவது சிரமமாகவும், பாதுகாப்பு அற்றதாகவும் இருப்பதாக பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். மீண்டும் VEC, SMC தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பள்ளிக்கு ஒரு மினி பஸ் வாங்கத் திட்டமிட்டோம். நான் எனது பங்களிப்பாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தேன்.

மேலும் நிதி திரட்டி சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்தை வாங்கியுள்ளோம்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் பிரபுதாஸ். ‘‘பெற்றோர்கள், VEC, SMC குழுத் தலைவர்கள் மற்றும் உதவும் நல்லுள்ளம் கொண்ட மக்களின் ஆதரவும் இருந்ததால்தான் அரசுப் பள்ளிக்கு பேருந்து வாங்கமுடிந்தது. பேருந்தை மாவட்டக் கல்வி அலுவலர் லதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தற்போதுள்ள இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடம் போதுமானதாக இல்லாததால் கூடுதலாக கட்டடத்தை அரசாங்கம் கட்டித்தரவேண்டும் எனப் பெற்றோர்கள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அரசுப் பள்ளிகளை அந்தந்தப் பகுதி மக்கள் நினைத்தால் இன்னும் உயர்வான நிலைக்குக் கொண்டு வரலாம். அதற்காக ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்’’ என நிறைவாக முடித்தார்.

- தோ.திருத்துவராஜ்

மேலும்

X