எதிர்காலத்தை எதிர்கொள்ள திறன்மிக்க மாணவர்களை உருவாக்குவோம்!

10/10/2019 11:55:51 AM

எதிர்காலத்தை எதிர்கொள்ள திறன்மிக்க மாணவர்களை உருவாக்குவோம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் தமிழகத்திற்கென தனிச் சிறப்பு உண்டு. ஆனால், காலப்போக்கில் அது விமர்சனங்களுக்குள்ளாகி நிற்கிறது. காரணம், எல்லோருக்கும் கல்வி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ள நிலையில் அது தரமானதாகக் கொடுக்கப்பட்டதா என்பதுதான் இன்றைய சமூகத்திடம் எழுந்து நிற்கும் கேள்வி. பாடப்புத்தகத்தை மனப்பாடம் செய்வதிலும் அதிக மதிப்பெண் பெறுவதிலும் மட்டுமல்ல கல்வி. சமூகத்தில் ஒரு நல்ல மனிதராகவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் பயிற்சி அளித்திருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட கல்வியைத்தான் லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் மாணவர்களுக்கு போதிக்கிறோம் என்பதோடு, அதை உறுதி செய்யும் விதமாக பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார் பள்ளியின் தலைவர் MJF.Lion. S.ஜான் சேவியர் தங்கராஜ். ‘‘மாணவர்கள் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் ஆசிரியர் - மற்றபடி கற்பித்தல் என்பது வெறும் கடமையாகவே நடந்துகொண்டிருக்கும். கற்பித்தலில் புதுமைகளும், கற்பதில் ஆர்வமும் கொண்டு இயங்கி வரும் இந்தப் பள்ளியை 1994-ம் ஆண்டு தொடங்கினோம்.

ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி போதிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. குன்றத்தூரில் பெரும்பாலும் தறிநெய்வதுதான் தொழில். கல்வி பற்றிய போதிய விழிப்புணர்வு பெற்றோரிடம் இல்லை. எனவே, மாணவர்களோடு சேர்த்து பெற்றோர்களுக்கும் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருந்தது. பள்ளியில் சின்னச் சின்ன விஷயங்களையும் மாணவர்களுக்கு எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் நடத்திவருகின்றோம். எங்களுடைய முதன்மையான நோக்கமே எதிர்காலத்தை எதிர்கொள்ளும் மாணவர்களை உருவாக்குவதுதான்.

அதை முக்கிய நோக்கமாகக் கொண்டுதான் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதுமே தேர்ச்சி விகிதம் குறித்து கவலைப்படாமல் மாணவர்களின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் தொடர்ந்து 100% தேர்ச்சியும் மாநில அளவில் மதிப்பெண்களையும் பெற்று வருகிறோம்’’ என்று பெருமிதத்தோடு கூறுகிறார் ஜான். பள்ளியில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து கூறும்போது,‘‘மாணவர்களின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு பள்ளியில் பல விதமான கிளப்புகளை நடத்திவருகின்றோம்.

இதற்காக CLIFF (Class Leader Incharges Fair Forum) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதன் Tag line “பேசு கண்ணா பேசு” என்பதாகும். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பது மட்டுமில்லாமல் அதற்கு தீர்வை அவர்களே கண்டு வளர்ச்சி அடைய மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் அன்றாடம் நம் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளைக் குறித்து மாணவர்களைப் பேசவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மாணவர்கள் செய்தித்தாள்கள், செய்தி சேனல்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் அவர்களிடையே விதைக்கிறோம்.

மாணவர் ஒருவர் அளித்த பரிந்துரையின்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பள்ளியில் தடை செய்துவிட்டோம். இதற்காக APPLE Club (Anti Plastic to Protect our Laudable Earth) என்ற குழு பள்ளியில் செயல்படுகிறது.
மாணவர்கள் வகுப்பறையில் மட்கும் பொருட்களை தனியாகவும், மட்காத பொருட்களை தனியாகவும் அந்தந்த குப்பைத் தொட்டிகளில் போடவும் விழிப்புணர்வு உருவாக்கப்பட்டுள்ளது’’ என்று கூறும் பள்ளியின் தலைவர் ஜான், சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தியதால் சுவீடன் வரை அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதையும் விவரித்தார்.

‘‘பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகள், என்.ஜி.ஓ. அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்றோம். பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதற்காக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாரவிடுமுறை நாட்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பொது இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுவீடன் நாட்டைச் சேர்ந்த Hand in Hand என்ற என்.ஜி.ஓ. அமைப்பானது பள்ளிகளிடமிருந்து ஓர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டது.

இதில் லிட்டில் ஃபிளவர் பள்ளியின் ஆய்வுக் கட்டுரை அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தது. இதற்கு பரிசாக அந்த அமைப்பு பள்ளி மாணவர் ஒருவரையும் நிர்வாகியையும் சுவீடன் நாட்டுக்கு அழைத்துச் சென்று ‘பசுமைப் பள்ளி’ என்ற விருதை அளித்து கௌரவப்படுத்தியது. அதன்படி நானும் மாணவர் ஒருவரும் சுவீடன் நாட்டுக்குச் சென்று ஒரு வாரம் அங்கு தங்கி இருந்தோம். அங்கு அந்த ஒரு வாரமும் முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை வழங்கினார்கள். இதில் ஒரு பகுதியாக ‘கிரிண்டா’ என்ற தீவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அது ஒரு ‘பூஜ்ஜிய கழிவு தீவு’ ஆகும். இது எங்களை மிகவும் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து எங்கள் பள்ளியில் கிரிண்டா என்ற அமைப்பைத் தொடங்கினோம். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி சார்பில் சைக்கிள் பேரணி நடத்தி பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். தீபாவளி, போகி பண்டிகைகளில் குப்பைகளைக் கையாளுவது குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகிறோம்’’ என்கிறார்.
சுற்றுச்சூழலைத் தாண்டி மேலும் சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் செயல்படுவது குறித்து கூறும்போது, ‘‘பள்ளியில் உள்ள FAST Club (Flowers Awareness & Social Troop) வாயிலாக ரத்ததான  முகாம் நடத்தி வருகின்றோம்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களே ரத்ததானம் வழங்க முடியும் என்பதால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ரத்ததான முகாம் நடத்தி வருகின்றோம். கடந்த 10 ஆண்டுகளாக ரத்ததான முகாம் மிகச்சிறப்பாக நடந்து வருகின்றது. கடந்த முறை எங்கள் பள்ளியில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் 207 யூனிட்  ரத்தம் சேகரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதுவரை 1000 யூனிட் ரத்தத்திற்குமேல் தானமாக பெற்றுள்ளோம். இதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் தொடர்ந்து இந்த கிளப் வாயிலாக விழிப்புணர்வை வழங்கி வருகின்றோம். பிளஸ் 1, பிளஸ் 2-வில் காமர்ஸ் குரூப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காமர்ஸ் கஃபே பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல தலைப்புகளில் மாணவர்கள் Paper presentation செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு தொழில்முனைவோர்களையும் வரவழைத்து மாணவர்களிடையே உரையாட ஏற்பாடு செய்கின்றோம். இதில் விளையாட்டு, நகைச்சுவை, நாடகம், சந்தைப்படுத்தல் போன்ற அனைத்தும் முழுக்க முழுக்க காமர்ஸ்  சம்பந்தப்பட்ட நிகழ்வுகளாகவே நடக்கின்றன.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் காவல் நிலையம் சென்று பார்வையிடவும்,  அதுபோன்று 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சட்டசபை சென்று அங்கு நிகழ்வுகளை பார்வையிடுவதையும் கட்டாயமாக்கியுள்ளோம். பள்ளி தொடங்கும் முன்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு BAND (Beginning of Affinity in New Dimension) ஒர்க் ஷாப் நடத்துகிறோம்.

மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி குறித்த விழிப்புணர்வோடு, சமூகம், சுற்றுச்சூழல், உடல் உறுப்பு தானங்கள் குறித்து விழிப்புணர்வையும் வழங்கி பள்ளியை நடத்திவருகிறோம்’’ சைலேந்திரபாபு IPS, ரவி IPS, சரவணன் டிஜிபி மற்றும் கிரண்பேடி, ரோசய்யா போன்ற உயர் அதிகாரிகள், மயில்சாமி போன்ற அறிவியல் அறிஞர்கள், பாண்டே, நெல்சன், ஷ்யாம் போன்ற சிறந்த பத்திரிகையாளர்கள், கோபிநாத், கலியமூர்த்தி, சுகிசிவம் போன்ற புகழ்பெற்ற வெற்றிபெற்ற ஆளுமைகளை மாணவர்கள் சந்திப்பதற்கும் பேட்டி எடுப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறோம்.

எனவே, முழுமையான கல்வி என்பது புத்தகத்தில் மட்டுமே இல்லை. அதையும் தாண்டி வெளியில் உள்ளது. மாணவர்கள் முழுமையான புரிதலுடன் வெளியில் செயல்படத் துவங்குமாறு சூழ்நிலையை உருவாக்கி அனுப்பிவைக்கின்றோம்’’ என்று மாணவர்களை திறன்மிக்கவர்களாக, சமூக சிந்தனை கொண்டவர்களாக மனிதநேயத்தோடு உருவாக்குகிறோம் என்கிறார் லிட்டில் ஃபிளவர் பள்ளியின் தலைவர் ஜான் சேவியர் தங்கராஜ்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X