தினம் தினம் புதிய உத்தரவுகள் குழப்பத்தில் மாணவர்கள்!

10/17/2019 3:36:00 PM

தினம் தினம் புதிய உத்தரவுகள் குழப்பத்தில் மாணவர்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பள்ளிக்கல்வித்துறை குளறுபடிகள்

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசின்  கல்வித்துறை அறிவிப்புகளாலும் செயல்முறைகளாலும் ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் பெற்றோர்
களும் தொடர்ந்து குழப்பத்திலேயே உள்ளனர். அதற்குக் காரணம், பாடத்திட்டம் தொடங்கி தேர்வுமுறை வரை பல அறிவிப்புகளும் மாற்றங்களும்தான். சமீபத்தில் வெளியான அரசாணை எண்  164-ல் நடப்பாண்டிலிருந்து 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதை ஆதரித்து கல்வி அமைச்சர் உள்ளிட்ட அரசு தரப்பிலிருந்து அறிக்கைகள் வெளியாகின.

இதையடுத்து அரசியல் கட்சிகள் தலைவர்கள், கல்வியாளர்கள், கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோரிடையே எழுந்த பெரும் எதிர்ப்பால் கல்வி அமைச்சர் சில நாட்களுக்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வுக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்தார். இதுபோன்ற அறிவிப்புகளால் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என கல்வி மேம்பாட்டுச் சங்க நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகத்திடம் கேட்டோம்…

‘‘ஓர் அரசாணை ரத்து செய்யப்படுகிறதென்றால் ரத்துசெய்து மறு அரசாணை வெளியிடப்படும் அல்லது திருத்தம் இருந்தால் அதுவும் அரசாணையாக வெளியிடப்படும். அரசாணை 164ஐ ரத்து செய்தோ அல்லது திருத்தம் செய்தோ இதுவரை எவ்வித ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வாய்மொழியாக மூன்று ஆண்டுகளுக்கு பொதுத் தேர்வுக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்ததையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டனர். ஆனால், ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

5 மற்றும்  8-ம் வகுப்புகளுக்கு முப்பருவ முறையில் தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன. மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதற்காக அந்தந்த பருவத்தில் நடத்தப்படும் தேர்வுகளோடு, அந்தப் பருவத்தின் பாடங்கள் முடிவுபெறும். முதல் பருவத்தில் கற்ற பாடங்களிலுள்ள வினாக்கள் இரண்டாம் பருவத் தேர்வில் கேட்கப்படாது. இப்போது பொதுத்தேர்வு கல்வியாண்டின் இறுதியில் நடைபெற்றால் அது மூன்றாம் பருவத்திலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படுமா அல்லது கல்வி ஆண்டில் கற்பிக்கப்பட்ட அனைத்துப் பாடங்களிலிருந்தும் கேட்கப்படுமா என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
ஒன்று பொதுத்தேர்வுக்கு விலக்கு பற்றி எழுத்துப்பூர்வமான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

அல்லது தேர்வுபற்றிய தெளிவான வழிமுறைகள் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மாணவர்களை அதற்கேற்ப தயார்படுத்த முடியும்’’ என்கிறார் பாலசண்முகம். பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்புகளில் சிலவற்றை உதாரணங்களாகப் பட்டியலிட்டு பாலசண்முகம் கூறும்போது ‘‘ஆசிரியர்களை பொறுத்தவரை பொதுத் தேர்வு நடத்துவதில் சிரமம் ஒன்றுமில்லை. வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மேற்பார்வை, விடைத்தாள் திருத்தும் பணி போன்ற மாநிலம் தழுவிய பணிகளிருந்தாலும் அவர்களுக்கு அதற்குரிய மதிப்பூதியம் கிடைக்கத்தான் போகிறது. ஒரு வகையில் அவர்களுக்கு லாபம்தான். ஆனாலும் மாணவர்கள் இடைநிற்றல், மனஉளைச்சல் போன்ற மாணவர்கள் சார்ந்த பிரச்னைகளை மனதில்கொண்டே ஆசிரியர்கள் இந்த அரசாணையை
எதிர்க்கிறார்கள்.

மேலே கூறியது ஒரே ஓர் உதாரணம்தான். இதுபோன்ற எண்ணற்ற உத்தரவுகள் தினம் தினம் பிறப்பிக்கப்படும் ஒரே துறை கல்வித்துறை மட்டுமே.

உதாரணத்திற்கு சில:

*  பன்னிரண்டாம் வகுப்புக்கு 500 மதிப்பெண்கள்.
* மொழித்தாள் ஒரு தேர்வுதான்.
* சமூக ஆர்வலர்கள் பள்ளிகளில் பாடம் கற்பிக்கலாம்.
* பள்ளிகளில் தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
* விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

மற்ற துறைகள் போலில்லாமல் கல்வித்துறை நாட்டின் எதிர்காலத்துடன் தொடர்புடையது . எனவே, பிறப்பிக்கப்படும் முக்கிய சீர்திருத்த உத்தரவுகள் ஆராய்ந்து முடிவு செய்யப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகள் அனைத்திலும் கல்வி தொடர்பான முடிவுகள் அனைத்தும் ஆராய்ச்சி  முடிவுகளின்படியே எடுக்கப்படுகின்றன. ஆனால், இங்கு 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட எந்த உத்தரவுகளும் எவ்வித ஆராய்ச்சிக்குப்பின் பிறப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை.

தமிழக அரசின் சார்பில் எந்தக் குழு ஆராய்ச்சி செய்து தொடக்க நிலையில் பொதுத்தேர்வு வைப்பதே நல்லது என்று சிபாரிசு செய்தது என்று கல்வித்துறையால் கூற முடியுமா?’’ என்கிறார். ‘‘ஒரு குழுவை அமைத்து  (பெயரளவுக்கேனும்) கள ஆய்வு செய்து அதன் சிபாரிசு களின் அடிப்படையில் முடிவு எடுப்பதே வழக்கம். அப்போதுதான் அரசு எடுக்கும் முடிவுகள் பற்றி குறை கூறுபவர்களிடம் விளக்கம் அளிக்க முடியும்.  அலுவலகத்துக்குள் அமர்ந்து  காலையில் பேசி, மதியம் முடிவு செய்து, மாலையில் உத்தரவு பிறப்பிப்பது  நியாயம் கிடையாது.  யாரையோ திருப்திப்படுத்த இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன எனக் கல்வியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.  

இது ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டு பள்ளி திறந்து 28 நாட்களுக்கு பிறகுதான் பாடநூல்கள் மற்றும் குறிப்பேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. முதல் பருவத்திலிருந்தே 300-க்கு மேற்பட்ட தொடக்கப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் இன்றி செயல்படுகின்றன. பணியில் இருப்பவர்களுக்கும் EMIS ஆன்லைன் பதிவேற்றம் செய்வதில் பெரும்பாலான கற்பித்தல் நேரம் பாழாகின்றது.

கல்வியில் சீர்த்திருத்தம் அவசியம்தான். ஆனால், அதற்கு முன்பாக மேற்குறிப்பிட்டதைப் போல உள்ள அடிப்படைக் குறைகளைக் களைய வேண்டும். ஓட்டைப் பானையின் மீது எவ்வளவு அழகிய ஓவியம் தீட்டினாலும் தண்ணீரைச் சேமிக்கவே முடியாது என்பதை எப்போதுதான் உணர்வார்களோ?’’ என்ற ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பி பேசி முடித்தார் பாலசண்முகம்.  

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X