IIT மாணவி தற்கொலைக்கு நீதி கிடைக்குமா?

12/4/2019 2:49:18 PM

IIT மாணவி தற்கொலைக்கு நீதி கிடைக்குமா?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சர்ச்சை

மாணவர்களின் போராட்டங்களோடு பலரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது மெட்ராஸ் ஐஐடி. காரணம், கேரள மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துகொண்டது நாடாளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது. ஐஐடி நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி மதம் சார்ந்த காரணங்களால் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுவது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் பாதுகாப்பான இடம் என்று தன் மகளைப் படிக்க அனுப்பிய பெற்றோருக்கு மாணவியின் தற்கொலை பேரிடியாகி விட்டது. சிறுபான்மையினர் என்ற காரணத்தால் பேராசிரியரே தற்கொலைக்குத் தூண்டியுள்ளதாகக் கூறப்பட்டு வரும் வேளையில் பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இன்றும் நிலவிவரும் தீண்டாமை மற்றும் பாகுபாட்டை பாத்திமாவின் மரணம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சென்னை ஐஐடியில் இவ்வாண்டு நடக்கும் நான்காவது தற்கொலை சம்பவம் இது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமில்லாமல் பேராசிரியர்களும் துணை பேராசிரியர்களும்கூட தற்கொலை செய்துள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய விஷயம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 8 ஐஐடி-களில் 52 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அதில் ஐஐடி-மெட்ராஸில் 14 தற்கொலைகள் அரங்கேறி தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ‘‘பனாரஸ் ஐஐடியில் இடம் கிடைத்தும் பாதுகாப்பு கருதி வடமாநிலங்களை தேர்ந்தெடுக்காமல் மெட்ராஸ் ஐஐடியை  தேர்ந்தெடுத்தோம்.

ஆனால் இங்கேயும் சிறுபான்மையினருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை’’ என வருத்தத்தோடு கூறியிருக்கிறார் பாத்திமாவின் தாயார். பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ள பாத்திமாவின் தற்கொலை குறித்து இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் கூறும் தகவல்களைப் பார்ப்போம்.

வி.மாரியப்பன்இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர்

உயர்கல்வி நிறுவனங்களில் பாத்திமா எனும் மாணவியின் மரணம் முதலும் அல்ல கடைசியும் அல்ல. கடந்தகாலங்களில் அரங்கேறிய நிகழ்வுகள் நமக்கு அதையே உணர்த்துகின்றன. இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மதம், சாதி, பாலினம் சார்ந்த பாகுபாடுகள் இருப்பது உண்மை. அதிலும் ஐஐடி-யில் அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இருந்துவருகிறது. ஹைதராபாத் ஐஐடி மாணவர் ரோகித் வெமுலா மற்றும் இன்னபிற மாணவர்களின் மரணத்திலேயே இது உறுதி செய்யப்பட்டுவிட்டது. தற்போதைய பாத்திமாவின் மரணம் மீண்டும் ஒருமுறை அதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சமீபத்தில் நடந்த குறிப்பிட்ட மதம் சார்ந்த கூட்டத்தில் இந்தியாவிலிருக்கும் 51 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இப்படி கல்வி சார்ந்த விஷயங்களில் மதத்தைக் கலப்பது என்பது இந்திய கல்வி முறையையே பாதிப்பிற்குள்ளாக்கும். நுழைவுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு internal-ல் குறைவாக மதிப்பெண் கிடைத்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் பாத்திமா.

இவ்வாறு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுத்து தற்கொலைக்குத் தூண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை நடந்த தற்கொலைகளுக்கான நீதியும் கிடைக்கவில்லை. இன்றுவரையிலும் தொடரும் ரோகித் வெமுலாவின் சட்டப்போராட்டம் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன. அதுமட்டுமல்ல, தன் மகளின் செல்போன் பதிவுகளை ஆதாரமாகக் காட்டி புகார் கூறிய பாத்திமாவின் பெற்றோரையே விசாரணை செய்யும் அவலம்தான் இங்கு நடந்துவருகிறது. தற்கொலைக்குக் காரணமானவர்களைக் காப்பாற்றுவதையே இத்தகைய செயல்பாடுகள் நமக்குக் காட்டுகின்றன.

கல்விநிறுவனங்களில் பாகுபாடுகள் களையப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற மரணங்களைத் தடுப்பதற்கு அரசு தனியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்பதே இனிவரும் காலங்களில் தற்கொலைகளைத் தடுப்பதற்கு உதவும். அதுவே எங்கள் கோரிக்கை.

வசந்தா கந்தசாமி

மெட்ராஸ் ஐஐடி-யில் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவரும் சென்னை ஐஐடியின் முன்னாள் இணை பேராசிரியருமான வசந்தா கந்தசாமி ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் கருத்துகள் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.இதைத் தற்கொலை என்று சொல்வது தவறு. Institutional murder என்பதுதான் நிஜம். படிப்பின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என சொல்வதெல்லாம் போலியானது. சிறுபான்மையர் என்ற காரணத்தினால் பேராசியர்களால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால்தான் அச் சம்பவம் அரங்கேறியது.

என்னுடைய 28 வருட கால ஐஐடி அனுபவத்தில் சொல்கிறேன் இதுவரை அங்கு பத்து முஸ்லிம் மாணவர்கள் முதுகலை படித்திருப்பதே அதிகம். அந்த அளவிற்கு இந்தியாவின் முக்கிய உயர்கல்வி நிறுவனத்தில் பாகுபாடு காணப்படுகிறது. நானே கூட சாதிய பாகுபாட்டால் மனஉளைச்சலுக்கு ஆளானேன். 1995-96 காலகட்டத்தில்தான் முதல் தலித் மாணவர் மெட்ராஸ் ஐஐடி-யில் கணிதத்தில் முனைவர் பட்டம்பெற சேர்கிறார்.

தீண்டத்தகாதவர் என முதலில் அவருக்கு வளாகத்தில் ரூம் தரவில்லை. அந்த அளவிற்கு இன்றுவரையிலும் பாகுபாட்டுச் சிந்தனைகள் ஐஐடி-யில் வளர்ந்துவருகிறது என்பதை பாத்திமாவின் மரணம் உறுதிசெய்துள்ளது. சாதிய அடிப்படையில் சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து பேராசிரியர் பணிக்கு அமர்த்தும் அவலமும் ஐஐடி-களில் நடந்துகொண்டுதானிருக்கிறது.

அரசின் செயல்பாடுகளும் சந்தேகத்தை கிளப்புகின்றன. ஏனெனில் தற்கொலைக்கு காரணமான பேராசியர்களை விசாரிக்காத மத்திய விசாரணைக் குழுவின் அதிகாரிகள் பாத்திமாவின் பெற்றோரை விசாரிக்கின்றனர். இதையெல்லாம் கடந்து உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என்கிறார் வசந்தா கந்தசாமி.நாமும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் பாத்திமாவின் மரணத்துக்கு நீதி கிடைக்குமா? அநீதி இழைக்கப்படுமா? என்று. இது காலத்தின் கட்டாயம்.

-வெங்கட் குருசாமி.

மேலும்

X