உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்!

1/2/2020 2:10:05 PM

உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வாழ்வில் மிகவும் சிக்கலான அல்லது சறுக்கலான சமயங்களில் நமக்கு எதுவுமே கைகொடுக்கவில்லையென்று உணருகின்ற தருணத்தில் நாம் திணறித்தான் போகிறோம். திக்கற்ற காட்டில் நாம் மாட்டிக்கொண்டோமென்றால் அப்போது எங்கோ ஒரு தூரத்தில் தெரியும் குடிசை விளக்கின் ஒளி நமக்கு மிகுந்த நம்பிக்கையும், ஆறுதலையும் தரும். அதுபோலத்தான் ‘விடாதே, தொடர்ந்துசெல், வெற்றி அருகில்தான்!’ என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்கின்ற நம்பிக்கை வார்த்தைகள் நம்மிடம் புதிய சக்தியை ஏற்படுத்திவிடும்.

சாமானிய மனிதர் ஒருவர் இதைத் தன்னுடைய வாழ்வில் கடைபிடித்து, தனக்குத்தானே நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டு, புதிய சக்தியை உருவாக்கிக் கொண்டார். அதன் மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த சாமானியனின் சாதனையை நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும். சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவை சேர்ந்தவர் ரமேஷ், வறுமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மிகுந்த வறுமையில் தனது பள்ளிப்படிப்பைத் தினம் ஐந்து கி.மீ.  நடந்துசென்று படித்தார். பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடங்களுக்குள் காலில் காலணி இல்லாமல் அனுமதிக்கமாட்டார்கள்.

அப்போது வேறு வகுப்பு மாணவர்களிடம் காலணியை கடன் வாங்கிப் போட்டுக்கொண்டு ஆய்வகப் பாட வகுப்பு முடிந்ததும் திரும்பக் கொடுத்துவிடுவார். ஒரே பள்ளியில் படித்த அவரும் அவருடைய தம்பியும் ஒரே ஒரு சீருடைதான் வைத்திருந்தனர். அதை அணிந்துகொண்டு அவர்
களுடைய பள்ளி வாழ்க்கை கழிந்தது. வறுமையின் கோரத்தாண்டவத்தால் யாராவது ஒருவரைத்தான் கல்லூரியில் படிக்க வைக்கக்கூடிய சூழல் குடும்பத்தில் நிலவியது. அப்போது ரமேஷின் தம்பி நான் வேலைக்கு போகிறேன், என் அண்ணன் படிக்கட்டும் என்று விட்டுக் கொடுத்தார்.


கல்லூரியில் சேர்ந்த பின்பு ரமேஷுக்கு அணிந்து செல்ல சரியான ஆடைகள் இல்லாத நிலையில் அவருடைய நண்பர்கள் இரண்டு ஆடைகளைக் கொடுத்து உதவினார்கள். ஆனால், கல்லூரியில் படித்த மற்ற மாணவர்கள் விதவிதமான ஆடைகளுடன் வரும்போது ரமேஷ் மனத்தளவில் பாதிக்கப்பட்டு கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தார். இதை அறிந்த அவரது தந்தை கல்லுடைக்கும் வேலைக்கு சென்று அதன் மூலமாக கிடைத்த பணத்தில் புதிய ஆடைகளை வாங்கித் தந்து கல்லூரிக்கு அனுப்பினார். ஆனால், தன் குடும்பத்து வறுமையை விரட்ட வேண்டுமென்றால் தான் நன்றாக படித்தால்தான் முடியும் என்று முடிவு செய்தார். கல்லூரியில் பாடம், போட்டிகள் என அனைத்திலும் முதலாவதாக வந்தார்.

அதனால் கல்லூரியில் சிறந்த மாணவன் விருது, துறையின் முதல் மாணவன் விருது என எல்லா விருதுகளையும் பெற்றார். நாட்கள் கடந்தன… கல்லூரி இறுதித் தேர்வும் வந்தது. அதில் ஒரே ஒரு பாடத்தில் எதிர்பாராத விதமாக ரமேஷ் தோல்வியடைந்ததாக தேர்வு முடிவு வந்தது. இது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. கல்லூரியின் சிறந்த மாணவன் விருது வாங்கியவர் தேர்வில் தோற்றுவிட்டார் என பலரும் விமர்சித்தார்கள். அதனால் கேலி கிண்டல்களுக்கு ஆளானார். இது அவருக்குப் பெரும் மனவலியை தந்தது. மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துவிட்டு, வீட்டிற்கு சென்றால் பெற்றோர்கள் வருந்துவார்களே என்று நினைத்துக்கொண்டு கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்தார்.

மறுகூட்டலுக்குப் பின் 78 மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றதாக முடிவு வந்தது. ஒரு மனக்கவலையைக் கடந்து வீட்டிற்கு வந்த ரமேஷுக்கு வேறு ஒரு கவலை காத்திருந்தது. தனது அக்காவிற்கு திடீரென்று ஏற்பட்ட இதயநோயால் அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய கிராமத்தில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத காரணத்தாலும், பெரிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல மருத்துவச் செலவுக்கு பணமில்லாத காரணத்தாலும் தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் தனது அக்காவை இழந்தார். அக்காவின் மரணம் ரமேஷுக்கு மிகுந்த வேதனையளித்தது.

கல்லூரிப் படிப்பை முடித்த ரமேஷ் சி.ஏ. படித்துவிட்டு ஒரு சிறந்த ஆடிட்டராகி, அந்த வருமானத்தில் தனது கிராமத்தில் வறுமையால் கல்வியைத் தொடர முடியாத பலருக்கு உதவ வேண்டும் என்பதை தனது இலக்காக தீர்மானித்தார். அவரது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். ஆனால், மேலும் படிக்கவைக்க குடும்பத்தாரால் இயலவில்லை. இதை கேள்விப்பட்ட ரமேஷ் நண்பர்களிடம் பண உதவி பெற்று பள்ளியில் சேர்த்துவிட்டார். அந்தப் பெண் 12ஆம் வகுப்பில் 1136 மதிப்பெண்கள் எடுத்து தேறினார்.

அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்ற அந்தப் பெண்ணை டாக்டராக ஆக்கவேண்டும் என்று முடிவு செய்தார் ரமேஷ். மேலும் தனது அக்காவின் மரணத்தைப் போன்று தனது கிராமத்தில் மீண்டும் ஒரு சம்பவம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்காகத் தன்னுடன் கல்லூரி நண்பர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு அப்பெண்ணை டாக்டராக்குவது என முடிவுசெய்தார். அந்த சமயத்தில் ரமணா திரைப்படம் வெளிவந்தது. அந்தத் திரைப்படம் ரமேஷுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தை எடுத்த இயக்குநர் முருகதாஸ் இதற்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் அவரை சந்தித்தார்.

அவரின் உதவியால் அப்பெண் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்தது. அந்த சம்பவம் அவரது கிராம மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல அங்குள்ள மாணவர்களுக்குக் கல்வியை நோக்கிச் செல்ல ஒரு ஊக்கசக்தியாக அமைந்தது. வேளச்சேரியில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்த ரமேஷ் கல்வி குறித்த எந்த உதவிகளுக்கும் என்னை அணுகலாம் என்று தன் முகவரியைத் தெரிவித்தார். அந்த முகவரியை நம்பி மாணவர்கள் பலர் கல்விக்காக ரமேஷை அணுக ஆரம்பித்தார்கள்.

சி.ஏ. படித்துக்கொண்டே ஆடிட்டர் அலுவலகத்தில் ஒரு சிறிய வேலையும் பார்த்துக்கொண்டிருந்த ரமேஷ் தனது குடும்பப் பொருளாதார சூழ்நிலையில் எப்படி இந்த மாணவர்களுக்கெல்லாம் உதவுவது என்று கவலையடைந்தார். இருந்தபோதும் தன்னுடைய முகவரியைத் தேடி வரும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த முகவரி கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்து 2006-ல் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் ‘முகவரி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அடுத்தடுத்த வருடங்களில் முகவரி அமைப்பால் தங்களை உயர்த்திக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது.

தன்னைத் தேடிவரும் மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்விக்காக உதவ பல்வேறு புரவலர்களை அணுக ஆரம்பித்தார். ஆனால், ‘உன் வாழ்க்கையே வறுமையில் இருக்கும்போது இதெல்லாம் உனக்கு தேவையா?’ என்ற  எத்தனையோ விமர்சனங்களையும், அவமானங்களையும் தாண்டி தனக்குத் தானே நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டு முகவரியைத் தொடர்ந்து நடத்தினார். கனவு என்பது நிகழ்காலத்திற்கான கனவாக இருக்கக்கூடாது, அப்படி இருந்தால் அது கனவே அல்ல. கனவு பெரிதாக இருந்தால்தான் தலைமுறைகள் தாண்டியும் அதன் பலன் சென்றடையும் என்று முடிவு செய்த ரமேஷ் தனது அமைப்பு மூலமாக 400-க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்வில் உயர்கல்வி என்ற ஒளியை ஏற்றியுள்ளார்.

அதில் 42 பேர் அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். 108 மாணவர்கள் மருத்துவம் படித்துவருகிறார்கள். மற்றவர்கள் பொறியியல் மற்றும் மற்ற உயர்கல்வி படிப்புகளைப் படித்துவருகிறார்கள். தன்னுடைய தொடர் முயற்சியாலும் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொள்ளும் திறனாலும் ஒரு விதையாக போடப்பட்ட முகவரி இன்று ஒரு மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. அந்த வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் ரமேஷின் தன்னம்பிக்கை, நேர்மை, நன்றியுணர்வு மற்றும் முகவரியின் வெளிப்படையான தன்மை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முகவரியை நோக்கி எண்ணற்ற புரவலர்கள் உதவ முன்வந்தார்கள்.

‘‘முகவரியின் மூலமாக படித்த மாணவர்கள் நல்ல நிலையை அடையவேண்டும் என்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல, மனிதநேயமும், சமூக அக்கறையும் கொண்ட மாணவர்களாக உருவாக வேண்டும் என்பதிலும் முனைப்பாக உள்ளேன். அதுமட்டுமல்ல ஏழை மக்களுக்காக நேர்மையாக பணி செய்யும் அரசு அதிகாரிகளையும், மனிதாபிமானத்துடனும் கருணையுடனும் சேவை செய்யும் மருத்துவர்களையும் உருவாக்கவேண்டும் என்பது மட்டுமே எங்களது லட்சியம்’’ என்கிறார் முகவரி ரமேஷ்.

வறுமையில் பிறந்து, வளர்ந்து, மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் தனது சகோதரியை இழந்து தனக்குத் தானே நம்பிக்கையூட்டிக்கொண்டு முகவரி என்ற அமைப்பு மூலமாகப் பல மருத்துவர்களையும், அரசு அதிகாரிகளையும் உருவாக்கி இளம்வயதிலே சாதித்து மாற்றத்தை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணிக்கும் ரமேஷ் என்ற சாமானியனின் சாதனை இன்றைய இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் உன்னத பாடமாகும். தன்னம்பிக்கையும், நேர்மையும், மனிதநேயமும் கலந்திருக்கின்ற மனிதர்கள் மேற்கொள்ளும் பயணம் சுற்று வழிபோல தெரியலாம். ஆனால், அதுதான் நம்மையும் எதிர் நிற்பவர்களையும் ஒருசேர உயர்த்தும் வழி, அது நேர்வழி, அதுதான் வெற்றியின் வழி.

(புதுவாழ்வு மலரும்)

மேலும்

X