10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

1/21/2020 5:31:56 PM

10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமம் கல்வி-வழிகாட்டி

பொதுத்தேர்வு

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் எவ்வாறு படித்தால் அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என ஒரு சில குறிப்புகளைத் தருகிறார் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த, சித்தாமூர் ஒன்றியத்தின், கடுக்கலூர் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் வெ.கௌதம் ராஜ். இனி அவர் தரும் குறிப்புகளைப் பார்ப்போம்…

முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அறிவியல் பாடத்தின் புதிய புத்தக வடிவமைப்பு பற்றித்தான்‌.  1 முதல் 6 வரை உள்ள பாடங்கள் இயற்பியல் சார்ந்தவை, 7 முதல் 11 வரை உள்ள பாடங்கள் வேதியியல் சார்ந்தவை, 12 முதல் 22 வரை உள்ள பாடங்கள் உயிரியல் சார்ந்தவை. கடைசியாக உள்ள 23வது பாடம் கணினியைச் சார்ந்து அமைத்துள்ளார்கள். அறிவியல் பாடத்தின் வினாத்தாள் நான்கு பகுதிகளைக் கொண்டது.

முதல் பகுதி 12 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொண்டது, இரண்டாம் பகுதி 10 இரண்டு மதிப்பெண் வினாக்களைக் கொண்டது, இதில் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும், குறிப்பாக 22வது வினா கட்டாயமாக விடையளிக்க வேண்டியது. மூன்றாவது பகுதி 10 நான்கு மதிப்பெண் வினாக்களைக் கொண்டது, இதில் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும், குறிப்பாக 32வது வினா கட்டாயமாக விடையளிக்க வேண்டியது.

கடைசியாக உள்ள நான்காவது பகுதியில் 3 ஏழு மதிப்பெண் வினாக்களைக் கொண்டது. மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 மதிப்பெண்கள் அறிவியல் செய்முறைத் தேர்வு மூலம் வழங்கப்படும்.அறிவியல் வினாத்தாளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் முந்தைய ஆண்டுகளைப் போல் 15 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்காமல் இந்த ஆண்டில் 12ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முந்தைய வருடங்களைக் காட்டிலும் இந்த வருடம் இரண்டு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை 20-லிருந்து 7 வினாக்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 7 நான்கு மதிப்பெண் வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முந்தைய வருடத்தில் கேட்கப்பட்ட ஐந்து மதிப்பெண் வினாக்களுக்குப் பதிலாக இந்த ஆண்டு முதல் 3 ஏழு மதிப்பெண் வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

எனவே, இதுவரை படிக்கவில்லை என்றாலும், இனியாவது தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் ஒதுக்கி அறிவியல் பாடத்தைப் படிக்க வேண்டும். இந்த ஆண்டு முதல் வினாத்தாள் செயல் திட்டம் (Blue print) வழங்கப்படவில்லையென்றாலும் மாணவர்களின் புரிதலுக்காக வினாத்தாளில் மதிப்பெண்கள் பிரித்து வழங்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். அதன்படி 6 பாடங்களை உள்ளடக்கிய இயற்பியலிலிருந்து 3 ஒரு மதிப்பெண் வினாக்களும், 3 இரண்டு மதிப்பெண் வினாக்களும், 3 நான்கு மதிப்பெண் வினாக்களும் மற்றும் ஒரு 7 மதிப்பெண் வினாக்களும் முறையே கேட்கப்படும். இதுபோலவே 5 பாடங்களை உள்ளடக்கிய வேதியியல் பகுதியிலிருந்து 3 ஒரு மதிப்பெண் வினாக்களும், 3 இரண்டு மதிப்பெண் வினாக்களும், 3 நான்கு மதிப்பெண் வினாக்களும் மற்றும் ஒரு 7 மதிப்பெண் வினாக்களும் முறையே கேட்கப்படும்.

அடுத்து 11 பாடங்களை உள்ளடக்கிய உயிரியல் பகுதியிலிருந்து 5 ஒரு மதிப்பெண் வினாக்களும், 4 இரண்டு மற்றும் நான்கு மதிப்பெண் வினாக்களும் மற்றும் 1 ஏழு மதிப்பெண் வினாக்களும் முறையே கேட்கப்படும் மற்றும் கணினி பாடத்திலிருந்து ஒரே ஒரு மதிப்பெண் வினா கேட்கப்படும்.

தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்கள் பெற வழிமுறைகள் அறிவியல் பாடப் புத்தகத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களாகக் கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியான விடையைத் தேர்ந்தெடுக்க, பொருத்துக, சரியா தவறா கண்டறிக என வெவ்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்டிருந்தாலும், வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க என்ற  அமைப்பிலேயே கேட்கப்படும். அதாவது, நம் பாடப்புத்தகத்தில் எட்டு வெவ்வேறு தலைப்புகளின்கீழ் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களின் மொத்த எண்ணிக்கை 528.

இவற்றிலிருந்து வினாத்தாளில் கேட்கப்படும் ஒரு மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை 12. எனவே, குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் எடுக்க மாணவர்கள் தினமும் 20 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கட்டாயம் படிக்க வேண்டும். மேலும் தினமும் 5 இரண்டு மதிப்பெண் வினாக்களையும் படித்து எழுதிப் பார்த்தல் சிறந்தது. கூடுதலாகப் பாடத்தினுள் கொடுக்கப்பட்டிருக்கும் படங்களை வரைந்து பாகம் குறித்துப் பழகுவது நன்று. ஏனெனில் படம் வரைந்து பாகம் குறிப்பது சார்ந்த கேள்விகள் கட்டாயம் கேட்க வாய்ப்புள்ளது.அதிக மதிப்பெண்கள் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திற்குப் பின் கொடுக்கப்பட்ட கேள்விகளை முழுவதுமாகப் படித்தாலே 75-க்கு 65 முதல் 70 வரையான மதிப்பெண்களை எடுக்க முடியும்.

ஆயினும் 75-க்கு 75 மதிப்பெண்களை எடுக்க மாணவர்கள் பாடங்களுக்குப் பின் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை மட்டுமே சார்ந்து இருக்காமல், பாடங்களுக்கு உள்ளேயும் படிக்க வேண்டும். ஏனெனில் இவ்வாண்டு முதல் பாடங்களுக்குள்ளே இருந்தும் 20% முதல் 25% வரை வினாக்கள் கேட்க வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள் பாடங்களுக்குள்ளேயும் அதிகம் கவனம் செலுத்திப் படிக்கவேண்டும்.

மேலும் இந்த ஆண்டு இரண்டு மதிப்பெண் கேள்வி எண் 22 மற்றும் நான்கு மதிப்பெண் வினா எண் 32 ஆகிய இரண்டு கேள்விகளும் கட்டாயமாக விடையளிக்க வேண்டியதாக வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்விரு வினாக்களும் இயற்பியல் மற்றும் வேதியியல் சார்ந்த கணக்குகளாகவே கேட்கப்படுகிறது. ஆதலால் கணக்கு சார்ந்த கேள்விகளை எழுதாமல் முழு மதிப்பெண் எடுக்க முடியாது. எனவே, அறிவியல் பாடத்திலுள்ள மொத்த கணக்குகளின் எண்ணிக்கையான 100 கணக்குகளையும் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி தினமும் எழுதி பயிற்சி செய்யவேண்டும். இவர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் செய்முறைத் தேர்வு கையேட்டையும், மேலும் புத்தகத்திலுள்ள படங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

அதனை கல்வி-வேலை வழிகாட்டிமுகநூலின் https://www.facebook.com/kalvivelaivalikatti/photos/b.825527381220770/825524277887747/?type=3&theater என்ற லிங்கில் தெரிந்துகொள்ளலாம். வெற்றி பெற வாழ்த்துகள். (இவர் தரும் மாதிரி வினாக்களை அடுத்தடுத்த பக்கங்களில் பார்க்கலாம்)

- தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X