பிளஸ் 2 பொதுத்தேர்வு பொருளாதார பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

1/23/2020 3:48:08 PM

பிளஸ் 2 பொதுத்தேர்வு பொருளாதார பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

நன்றி குங்குமம் கல்வி வழிகாட்டி

+2 பொதுத்தேர்விற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வழிகாட்டும் விதமாகக் குறிப்புகளையும் மாதிரி வினாத்தாளையும் தொடர்ந்து வழங்கிவருகிறோம். அந்தவகையில் கலைப்பிரிவில் பொருளியல் பாடப்பகுதியில் முழுமையான மதிப்பெண்களைப் பெற ஈரோடு மாவட்டம் பொலவக்காளிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை P.ஜானகி தரும் வழிகாட்டுதலைப் பார்ப்போம்

+2 பொருளியல் வினாத்தாள் மொத்தம் 90 மதிப்பெண்களைக் கொண்டது. 10 மதிப்பெண்கள் இன்டேனல் அசஸ்மெண்டுக்கு கொடுக்கப்படும். தற்போது 3 மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுதலாம். பொருளியல் பாடத்தைப் பொறுத்தவரையில் மாணவர்கள் நன்கு புரிந்து படிக்கவேண்டும். வரைபடங்களை வரைந்தும், சமன்பாடுகளை எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடியும். 2019-20 ஆம் கல்வி ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளியல் 12 பாடங்களை உள்ளடக்கியுள்ளது. ஓரிரு பாடங்கள் சற்று கடினம் போல இருந்தாலும் திட்டமிட்டு படிப்பதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். அதற்கு அனைத்துப் பாடங்களிலுமுள்ள 1, 2, 3, 5 மதிப்பெண் வினாக்களையும் முதலில் நன்றாகப் படிக்க வேண்டும். பாட எண் 2, 3, 4, 7, 12 ஆகிய பாடங்களிலுள்ள வரைபடங்கள், சூத்திரங்கள், சமன்பாடுகளை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்ப்பதன் மூலம் தவறுகளைத் தவிர்க்க முடியும்.

2 மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினாக்கள் சூத்திரங்கள், இலக்கணங்கள் மற்றும் 12-ம் பாடப்பகுதியிலுள்ள (புள்ளியியல் முறைகள் (கூட்டுச்சராசரி திட்ட விலக்கம்) பகுதியிலிருந்து அமையலாம். எனவே, அவற்றிற்கு முழுக் கவனம் செலுத்துவது நல்லது.

சராசரி மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலுமுள்ள ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களையும், 1, 5, 9, 10 பாடங்களிலுள்ள 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களையும் நன்றாகப் படித்து எழுதிப்பார்த்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

பகுதி-4: 5 மதிப்பெண் வினாக்களில் உதாரணமாக, வினா எண்: 1

a) புள்ளியியலின் இயல்பு (ம) எல்லைகளை விளக்குக?  (அ)

b) இரவிங் ஃபிஷரின் பண அளவுக்கோட்பாட்டை விளக்குக? என்று வினா அமையும்போது வரைபடமுள்ள வினாவைத் தேர்ந்தெடுத்து விடையளிக்கும்போது காலம் மீதமாகும். முழுமையான மதிப்பெண் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வினாத்தாளில் பகுதி 1-ல் ஒரு மதிப்பெண் வினாக்கள் 20 கொடுக்கப்பட்டிருக்கும் இதில் நாம் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையைச் சேர்த்து எழுத வேண்டும். இதற்கான மொத்த மதிப்பெண்கள் 20.

பகுதி 2-ல் 2 மதிப்பெண் வினாக்கள் பத்து கொடுக்கப்பட்டிருக்கும். இதில் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். வினா எண் 30-க்கு கண்டிப்பாக விடையளிக்க வேண்டும். இதற்கான மொத்த மதிப்பெண்கள் 14. பகுதி 3-ல் மூன்று மதிப்பெண் வினாக்கள் 10 கொடுக்கப்பட்டிருக்கும். இதில் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். வினா எண் 40-க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். இதற்கான மொத்த மதிப்பெண்கள் 21. பகுதி 4-ல் ஐந்து மதிப்பெண் வினாக்களில் மொத்தம் 7 வினாக்களுக்கு நாம் விடையளிக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாவிற்கும் அல்லது என்ற கூடுதல் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஆகையால் மூன்று மதிப்பெண் வினாக்களில் வேறுபாட்டு வினாக்கள் கேட்கப்பட்டால் மூன்று வேறுபாடுகள் எழுதினால் போதுமானது. எடுத்துக்காட்டாக, ‘நேர்முக வரி, மறைமுக வரி வேறுபாடு எழுதுக’ என வினா அமையும்போது மூன்று வேறுபாடுகள் எழுதினால் போதுமானது. மற்ற வினாக்களுக்கு 10 வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க வேண்டும்.

ஐந்து மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரையில் எல்லைகள், வகைகள், விவரித்தல், கோட்பாடுகள், வேறுபாட்டு வினாக்கள், காரணங்கள், புள்ளிவிவரக் கணக்குகள் போன்ற வினாக்கள் இடம்பெறும். இவற்றில் அனைத்து வினாக்களுக்கும் 2 பக்க அளவில் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் வரைபடங்கள் அமைய வேண்டும். வரைபடங்களை தெளிவாக x, y அலகுகளோடு பென்சிலில் வரையவேண்டும். வேறுபாட்டு வினாக்களுக்கு 5 அல்லது 6 வேறுபாடுகள் கட்டாயமாக எழுத வேண்டும்.

புள்ளி விவரக் கணக்குகளில் கேள்விகளை எழுதும்போது முதலில் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களை பிழையில்லாமல் எழுத வேண்டும். பிறகு என்ன கண்டுபிடிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு சரியான சூத்திரத்தைப் பயன்படுத்தி அதன்பின் கொடுக்கப்பட்ட தகவல்களை சரியான சமன்பாட்டில் பிரதியிட்டு விடையைக் கண்டறிய வேண்டும். இதற்கான மொத்த மதிப்பெண்கள் 35.

மாணவர்கள் நீலநிற மை கொண்ட பேனா மட்டுமே பயன்படுத்துவது நல்லது. பொருளியலில் வரைபடங்களில் x மற்றும் y அளவீடுகள் வரைவதற்கும் அலகுகள் எழுதுவதற்கும் கட்டாயமாக பென்சிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பேனாவில் வரைபடங்கள் வரையக்கூடாது.ஒரு மதிப்பெண் வினாக்களில் 20 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 18 வினாக்கள் புத்தகத்தின் பயிற்சி வினாக்களும், மீதம் 2 வினாக்கள் புத்தகத்தினுள்ளே இருந்தும் கேட்கப்படும். அவை சூத்திரங்களாகவோ, சமன்பாடுகளாகவோ அமையலாம். முழுப் பாடப்பகுதிகளையும் புரிந்து படித்தால்தன் 2 வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.

இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க அனைத்துப் பாடங்களிலுமுள்ள அனைத்து இரண்டு மதிப்பெண் வினாக்களையும் நன்கு படிக்க வேண்டும். இரண்டு மதிப்பெண்களுக்கான விடைகள் 3-ல் இருந்து 4 வரிகளுக்குள் அமைய வேண்டும். இதில் எடுத்துக்காட்டுகள், கணக்குகள், பண்புகள், வகைகள், பணிகள் போன்ற வினாக்கள் அமையும்.

3 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க ஒவ்வொரு பாடத்திலிருக்கும் அனைத்து வினாக்களையும் நன்கு படிக்க வேண்டும்.தேர்வு நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதால் இருக்கக்கூடிய காலங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்வு நேரங்களில் கால மேலாண்மையைக் கடைபிடிக்க வேண்டும்.

மேலே கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி அனைவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துகள். (இவர் தரும் மாதிரி வினாக்களை அடுத்தடுத்த பக்கங்களில் பார்க்கலாம்)

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

மேலும்

X